ஒட்டா ஒரு மதி கெட்டாய்
ஒட்டா ஒரு மதி கெட்டாய்
போட்டியும் பொறாமையும் நிறைந்ததுதான் உலகம்.
ஐந்தறிவுள்ள விலங்குகள் உணவுக்காக மட்டுமே போட்டி போடுகின்றன.
ஆனால் ஆறறிவுள்ள மனிதன் மட்டும்தான் பெருமைக்காக,
புகழுக்காகப் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறான்.
தான்தான் பெரியவன் என்பதைக்
காட்டிக் கொள்வதற்காக
போட்டி போடுகிறான்.
போட்டி ...பொறாமை.... சண்டை... சச்சரவு....
இவை எல்லாம் சாதாரண மக்களிடையே காணப்படும் அன்றாட நிகழ்வு.
ஆனால் அப்படி இருங்கள் ....இப்படி இருங்கள் என்று நமக்கு அறிவுரை கூறும் பெருமதியாளரிடமும் பொறாமை காணப்படும்போது அது சற்று
நம்மை நெருடல் அடைய வைக்கிறது.
இப்படியும் இருப்பார்களா
என்று வியக்க வைக்கிறது.
நகைக்க வைக்கிறது.
சற்றே சிந்திக்க வைக்கிறது.
"யாரிந்த போட்டியாளர்கள்?"
"புலவர்கள்தான்."
"புலவர்களிடையே அப்படி என்ன போட்டி?"
"புலமையை மெய்ப்பிப்பதில்
முந்தி நிற்பது நீயா நானா
என்பதுதான் போட்டி."
குறை கண்டு பிடிப்பதிலேயே சிலர் குறியாக இருப்பர்.
ஒருவர் எழுதும் பாடலில்
இன்னொருவர் குறை
காண்பது.
என் பாடலில் குறை காண்பதா?
இது என் தன்மானத்திற்கு இழுக்கல்லவா
என்று அடுத்தவர் பொங்கி எழ...
அதனால் போட்டாள் போட்டி போட்டு பாடல்களால் மோத....
அதனால் கிடைப்பது
நமக்கு நல் தமிழ்த்தேன் விருந்து
என்பது மறுக்க முடியாத உண்மை.
தமிழ்த்தேன் பருக ஆசையா?
வாருங்கள்.
ஔவைக்கும் கம்பருக்கும்
எப்போதும் ஒரு உரசல் உண்டு.
"கூழுக்குப் பாடும் கூனக் கிழவி" என்று
குறைவாகவே எடைபோட்டு வைத்திருந்தார்.
க ம்பரைப் போலவே ஒட்டக்கூத்தருக்கும்
ஔவை மீது பொறாமை இருக்கத்தான் செய்தது.
ஒருநாள் ராஜவீதியில் உள்ள ஒரு வீட்டுத் திண்ணையில் தனது இரு கால்களையும் நீட்டியபடி ஔவை அமர்ந்திருக்கிறார்.
அப்போது மன்னன் அந்த வழியாக
வீதி உலா வருகிறார்.
மன்னனைப் பார்த்ததும் உட்கார்ந்திருந்த ஔவை படக்கென்று தனது ஒரு காலை மடக்கிக் கொண்டார்.
அரசருக்கு அருகில் வெண்பா புலி என்று அழைக்கப்படும் புகழேந்தி புலவரும் வருகிறார் .
புகழேந்தியைக் கண்டதும் தன் இரண்டு கால்களையுமே மடக்கி மரியாதையாக அமர்ந்து கொண்டார் ஔவை.
அவர்களுக்குப் பின்னால் ஒட்டக்கூத்தர் வருகிறார்.
ஒட்டக்கூத்தரைப் பார்த்ததும்
பழையபடி தன் இரண்டு கால்களையும் நீட்டி கண்டும் காணாதது போல
இருந்துகொண்டார் ஔவை.
இவற்றையெல்லாம் பார்த்த ஒட்டக்கூத்தருக்கு உள்ளுக்குள்தன்னை இந்தக் கிழவி வேண்டுமென்றேதான் அவமானப்படுத்துகிறாள்
என்பது ஒட்டக்கூத்தருக்கும் புரிந்து போயிற்று.
பல்லை நறநறவென்று கடித்தார்.
என்ன திமிர் இந்த கிழவிக்கு?
"ஏய் கிழவி ....நான் வரும்போது ஏன் கால்களை நீட்டி உட்கார்ந்திருக்கிறாய்?
" ஏன் ஏதாவது பிரச்சினையா"
" அரசன் வரும்போது ஒற்றைக் காலை மடக்கினாய்"
"ஆமாம்...மடக்கினேன்...நாடாளும் மன்னனுக்கு மரியாதை கொடுப்பது குடிமகளாகிய எனது கடமை"
" புகழேந்தியைக் கண்டதும் இரண்டு கால்களையும் மடக்கினாயே அவர் மன்னனை விடவும் பெரியவரோ?"
"இதிலென்ன சந்தேகம். ?
புகழேந்தி மகாமதியாளர். அதனால் அவருக்கு உரிய மரியாதை செலுத்தினேன்.
இதில் வேறென்ன குறை கண்டீர்?"
"என்னைக் கண்டதும் இரண்டு கைல்களையும் நீட்டி அமர்ந்தீரே .
அதன் காரணம் என்னவோ?"
" காரணம்.....மரியாதை கொடுக்கிற அளவுக்கு நீர் ஒன்றும் பெரியவரல்ல என்று அர்த்தம்"
ம்ம்.. மரியாதை கொடுக்கும் அளவிற்கு
நான் பெரியவனில்லையா?
உள்ளுக்குள் பொருமினார் ஒட்டக்கூத்தர்.
ஒட்டக்கூத்தரின் மன நிலை மன்னனுக்கும் புரிந்து போயிற்று.
இருவருக்கும் இடையில் மனக்கசப்பு
ஏற்படுவதை மன்னர் விரும்பவில்லை.
"ஔவையே தங்கள் புலமையை நான் மெச்சுகிறேன்.
இருப்பினும் ஒட்டக்கூத்தரை அவமானப்படுத்துவதுபோல் தாங்கள் நடந்து கொண்டதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நீங்கள் அப்படி நடந்து கொண்டதற்கான உண்மையான காரணத்தை இப்போது நீங்கள் கூறவேண்டும்." என்றார் மன்னர்.
"ஒட்டக்கூத்தர் என்ன ...பெரிய அறிவாளியா நான் அவரை மதிப்பதற்கு? மறுபடியும் அதே கர்வமான பேச்சு.
"ஒட்டக்கூத்தர் மதியற்றவர் என்று உங்களால் எப்படி கூறமுடியும்.?"
" காரணம் தானே கேட்டீர்கள் .....இதோ மெய்ப்பிக்கிறேன்.
என்னோடு போட்டிக்குத் தயாரா?""பாடல்தானே இதோ...இப்போதே பாடுகிறேன்.கேளுங்கள் "
என்றார் ஒட்டக்கூத்தர்.
"வெள்ளத்தடங் காச்சினவாளை வேலிக்கமுகின் மீதேறித்,
துள்ளிமுகிலைக் கிழித்து மழைத்துளியோ டிறங்குஞ் சோணாடா,
கள்ளக் குறும்பர் குலமறுத்த கண்டா அண்டர் கோபாலா,
பிள்ளை மதிகண்டெம்பேதை பெரியமதியு மிழந்தாளே”
மடமடவென்று ஒரே மூச்சில் பாடலைப் பாடி முடித்தார் ஒட்டக்கூத்தர்.
பாடலைக் கேட்டதும்
ஔவை நகைத்தார்.
"இதில் நகைப்பதற்கு என்ன இருக்கிறது?
சரியாகத்தானே பாடியிருக்கிறார் "
என்றார் மன்னர்.
கடைசி வரியை மறுபடியும்
ஒருமுறை பாடப் சொல்லுங்கள்.
" .... பிள்ளை மதிகண்டெம்ப் பேதை பெரிய மதியுமிழந்தாளே"
" ஒட்டா ஒரு மதி கெட்டாய் "என்று நமட்டுச் சிரிப்பு சிரித்தார் ஔவை.
மன்னனுக்கு ஒன்றும் புரியவில்லை.
இப்போது புகழேந்தியைப் பாடச் சொன்னார்.
புகழேந்தியும் ஒட்டக்கூத்தரைப் போலவே குறைந்த நேரத்திற்குள் பாடலைப் பாடி முடித்துவிட்டார்.
"நனிநன்று... சரியாகப் பாடினீர்கள்" என்றார் ஔவை.
புகழேந்தி பாடினால் நன்று என்கிறார்.
ஒட்டக்கூத்தர் பாடினால்
ஒட்டா ஒரு மதி கெட்டாய் என்கிறார்.
ஒன்றும் புரியவில்லை.
ஒட்டகூத்தரைப் போய் மதி கெட்டவன்
என்று சொல்லி விட்டாரே
அனைவருக்கும் ஒரே குழப்பம்.
"ஒட்டா ஒரு மதி கெட்டாய் என்று காரணத்தைக் கூறினால்தானே எங்களைப் போன்றவர்களுக்குப் புரியும்."
என்றார் மன்னர்.
சொல்கிறேன் கேளுங்கள்.
" ... வெங்கட் பிறைக்குங் கரும் பிறைக்கும் மெலிந்த பிறைக்கும் விழியாளே."
என்பது புகழேந்தி பாடிய பாடலின் கடைசிவரி இல்லையா?
"இதில் 'வெங்கட் பிறை' 'கரும் பிறை' 'மெலிந்த பிறை' என்று மூன்று முறை 'பிறை'என்று வந்துள்ளது..
பிறைக்கு மதி என்ற மற்றொரு பெயரும் உண்டு என்பதை நான் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன்."
"ஆமாம்... உண்மை.ஒத்துக்கொள்கிறேன்."
"பிள்ளை மதிகண்டெம்ப் பேதை பெரிய மதியுமிழந்தாளே"
என்று ஒட்டக்கூத்தர் பாடலில் 'பிள்ளை மதி ' 'பெரிய மதி 'என்று இரண்டு முறைதானே' மதி் 'வந்திருக்கின்றது"
கடைசி வரியில் மூன்று மதி வரவேண்டும்
என்பதுதானே என் நிபந்தனை.
ஆனால் பாடலில் ஒரு மதி குறைந்துவிட்டது.
அதைத்தான் "ஒட்டா ஒருமதி கெட்டாய்" என்று கூறினேன். இதிலென்ன தவறு இருக்கிறது" என்று தன் கூற்றில் தவறில்லை என்பதற்கான
விளக்கத்தைக் கொடுத்துவிட்டார் ஔவை.
வார்த்தைகளை வைத்து விளையாட
புலவர்களுக்குச் சொல்லியா கொடுக்க
வேண்டும்.?
இதற்குமேல் மன்னனால் என்ன சொல்ல முடியும்?
மதியை மதியால் வென்றுவிட்டார்.
மதி கெட்டவனே ...என்று சொல்வதற்கு இப்படியும் ஒரு வழியா?
அப்பப்பா....குறை கண்டுபிடிக்கலாம். அதற்கு இப்படியா....?
இந்தப் பாட்டிகளே இப்படித்தான்.
இல்லை...இல்லை புலவர்களே இப்படித்தான்.
"ஒட்டா ஒரு மதி கெட்டாய்"
Comments
Post a Comment