அறம் செய்ய விரும்பு


அறம் செய்ய விரும்பு 


அறம் செய்ய விரும்பு என்று

தொடங்கி விட்டுவிட்டால் போதும்.

அறம் செய்ய விரும்பு.

ஆறுவது சினம்.

இயல்வது கரவேல் 

ஈவது விலக்கேல்

என்று கடகடவென்று ஒப்பித்து

விடுவோம்.


அந்த அளவுக்கு ஆத்திசூடிக்கும்

நமக்கும் ஒரு நெருக்கம் உண்டு.

ஆத்திசூடியை நெஞ்சிலேயே

குடி வைத்திருப்போம்.

நேரம் வரும்போதெல்லாம் 

சொல்லிச் சொல்லி மகிழ்வோம்.


முதன்முதலாக நாம் உரக்கப் படித்த

வரிகள்.

உள்ளத்திலேயே  குடி வைத்திருக்கும் 

வரிகள்.

உவந்து உவந்து சொன்ன வரிகள்.


அதன் பொருள் என்ன என்பதைப்

பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.

எனக்கு ஆத்திசூடி தெரியும் 

அவ்வளவுதான்.


இப்போது முதல் வரியின் பொருளுக்கு வருவோம்.

"அறம் செய்ய விரும்பு"

 அறம் செய்ய ஆசைப்படு என்று சொல்லிவிட்டு கடந்து போய்விடுவோம்.

விருப்பம்  ஆளுக்கு ஆள் வேறுபடும்.

 சிலர் ஆடம்பரமாக பொருட்களை வாங்கிக்

 குவிக்க விரும்பலாம். இன்னும் சிலர் பணம்

 சம்பாதிக்க விரும்பலாம். மேலும் சிலர்

 பேரும் புகழும் பெற விரும்பலாம்.

 சிலர் படித்து நிறைய பட்டம் வாங்க 

 விரும்பலாம்.

 சிலர் உழைப்பை விரும்பலாம்.

 ஏன் இன்னும் சிலர்

 தூக்கத்தை விரும்பலாம் .

 இப்படி விருப்பம்

 அவரவர் மனநிலைக்கு ஏற்ப 

 மாறுபட்டிருக்கும்.

வேறுபட்டிருக்கும்.

 இவை எல்லாம் நம்மைச் சார்ந்த நமக்கான தேவைகளை வசதிகளை

நிறைவேற்றிக்கொள்ள நாம் கொள்ளும் விருப்பங்கள்.

இவை சுயநலமானவை.

 இப்படி சுயநலமுடையவர்களாக எத்தனை

 நாட்களுக்குத்தான் இருப்பீர்கள்?


கொஞ்சம் உலகத்தையும் திரும்பிப்

பாருங்கள்.

உங்கள் கண்முன்னே 

என்ன என்னவெல்லாம்

நடக்கிறது என்பதைப் பாருங்கள்.


உலகத்தைத் பார்க்கிற கண்கள்

பார்க்கிற அனைத்தையும் தனதாக்கிக்

கொள்ள வேண்டும் என்று நினைக்கக்

கூடாது.

எல்லாத் தரப்பு மக்களைப் பற்றியும்

சிந்திக்க வேண்டும்.

துயரத்தில் இருப்பவர்களுக்கு

ஆறுதல் தர வேண்டும்.

உதவி தேவைப்படுபவர்களுக்கு

உதவும் பண்பு கொண்டவர்களாக

இருக்க வேண்டும்.



அறம் செய்ய விரும்ப வேண்டும்.

அறம் சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் 

என்று விரும்ப வேண்டும்.

அறக்காரியங்கள் செய்ய வேண்டும்

என்று விரும்ப வேண்டும்.

என்று சொல்லித் தருவதாக இருக்கிறது.


அறம் செய்ய விரும்பு.

இதிலுள்ள அறம் என்றால் என்ன ?

என்று கேட்டால்....

அறம் என்றால் தருமம் என்பீர்கள்.


தருமம் செய்வதுதான் அறம் என்று

நினைத்து வைத்திருப்பீர்கள்.


அறம் என்றால் நெறி.

அதாவது வாழ்வதற்கான

ஒரு வழிமுறை.

அதுதான் அறம்.


வாழ்வதற்காக நெறிமுறை எப்படி

அறமாகலாம் என்று கேட்கலாம்.


வாழ்வு ஒழுக்கமுடையதாக 

நீதி நெறிக்கு உட்பட்டதாக

நல்வழி செல்வதாக இருக்க வேண்டும்.

அதனால்தான் வாழ்க்கையே அறம்தான்

என்று சொல்வதற்காக

"அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை "

என்கிறார் வள்ளுவர்.

இன்னும் கூடுதலாக அறத்தைப்பற்றி
தெரிந்துகொள்ள வேண்டுமானால்

 . "அழுக்காறு அவாவெகுளி இன்னா சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்"

என்பார் வள்ளுவர்.


பொறாமை, பேராசை,

கோபம், கடுஞ்சொல் இல்லாத

வாழ்க்கை வாழ்தல்தான்

அறம்  என்பது

 வள்ளுவரின் கருத்து.


தனி மனித நடத்தை ஒழுக்கம் கொண்டதாக

இருந்தால் அது மாண்பு கொண்டதாக

அனைவராலும் போற்றப்படும்

வகையில் இருக்கும்.


அறம் என்னும் நற்பண்பு ஒருவனிடம் 

எப்போது வந்து சேரும்?


மனத்துக்கண் குற்றமற்றவனாக

இருந்தால் அவனிடம் அறம்  என்னும்

நற்பண்பு

வந்து குடியேறிவிடும்.


இப்போது அறத்தைப்பற்றி

தெரிந்து கொண்டோம்.

தெரிந்தால் மட்டும் போதுமா?


அறம் எப்போது செய்ய வேண்டும்?


இதற்கும் வள்ளுவர் பதில்

சொல்கிறார் கேளுங்கள்.


"அன்றறிவா மென்னா தறம் செய்கமற்றது

பொன்றுங்காற் பொன்றாத் துணை "

என்கிறார் .

அதாவது காலம் இருக்கிறது . பிறகு பார்த்துக்

கொள்ளலாம் என்று எண்ணாது இன்றே

அறச் செயல்களைச் செய்வீராக.

அந்த அறம்தான் நாம் இறந்த பின்னரும்

நமக்கு அழியாப் புகழாக நம்மோடு 

நிலைத்து நிற்கும்.

என்பது வள்ளுவர் கருத்து.


அறத்தை இன்றே இப்போதே செய்ய

வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும்

மற்றுமொரு பாடல் உங்களுக்காக...


"இன்றுகொல் அன்றுகொல்

என்றுகொல் என்னாது


பின்றையே நின்றது

கூற்றமென்று எண்ணி


ஒருவுமின் தீயவை

ஒல்லும் வகையால்


மருவுமின் மாண்டார் அறம்"


என்கிறது  நாலடியார்.  


அன்று இன்று என்று என்று நினைக்காதபடி

நம் பின்னாலேயே காலன் நின்று

கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து

தீயவற்றை நீக்கி

இன்றே  அறம் செய்க .


நாளை என்பது நிஜமல்ல.

இன்றே ....இப்பொழுதே அறம்

செய்க .


அறம் செய்க அறம் செய்க

என்றால் போதுமா?

அறத்தை எப்படிச் செய்ய வேண்டும்?

என்று சொல்லித்தர வேண்டாமா?

இதோ நான் சொல்லித் தருகிறேன் 

என்கிறார் ஔவை.

அதற்குத்தான்

"அறம் செய்ய விரும்பு "

என்று சொல்லியிருக்கிறார்.


அறம் செய்க.

அதுவும் விருப்பத்தோடு செய்க.

இதுதான் ஔவை நமக்குச்

சொல்லித் தந்த பாடம்.


அறம் விருப்பத்தோடு செய்யப்பட

வேண்டும்.

நான்குபேர் பார்க்க வேண்டும் என்று

பெருமைக்காக செய்வதற்குப் பெயர்

அறமல்ல.

உள்ளன்போடு செய்யப்பட

வேண்டும்.


அதுவும் நம் விருப்பத்தோடு

நடைபெற வேண்டும் என்று

சொல்வதற்காகவே 

அறம் செய்யவிரும்பு என்று 

ஆத்திசூடியின்

முதல் வரியையே முத்தாய்ப்பாய்


"அறம் செய்ய விரும்பு"

என்று தொடங்கியிருக்கிறார் ஔவை.







Comments