புத்தாண்டு பிறந்தாச்சு
புத்தாண்டு பிறந்தாச்சு
புத்தாண்டு பிறந்தாச்சு.
புதிய டைரி வாங்கியாச்சு.
புதுப்பக்கங்களில் புதுப்புது
தீர்மானங்கள்
எழுதி வைச்சாச்சு.
நான்கு நாட்களுக்கு..
புது டைரியைப் புரட்டுவதும்
எழுதுவதும்....
நான் அது செய்ய மாட்டேன் இது
செய்ய மாட்டேன் என்று
நிமிடத்திற்கு நாலு முறை நினைவு
படுத்துவதும் என்று நாலு நாளைக்கு
ஒரே அலப்பறை யாக இருக்கும்.
அப்புறம்?
பழையபடி எல்லாம் முன்பு நடந்தது போல்தான் நடக்கும்.
வழக்கம்போல நிகழும்
வருடாந்திர நிகழ்வுகளில் ஒன்று இந்த டைரி வாங்குது எழுதுவது
பதிய தீர்மானங்கள் எடுத்திருக்கிறோம்.
பார்த்துகிட்டே இருங்கள்....நாளையிலிருந்து
நான் புதிய ஆள் என்ற
பேச்சு காற்றோடு என் காதுவரை வந்தாச்சு.
என் காதுகளுக்கு மட்டுமா வந்திருக்கும்.?
உங்கள் காதுகளுக்கும்
கண்டிப்பாக வந்திருக்கும்.
இந்தப் புத்தாண்டில் நான்
அப்படி இருப்பேன்.
இப்படி இருப்பேன் என்று ஆளுக்கொரு
உருட்டு உருட்டிக்
கொண்டிருப்போம்.
ஆனால் என்னடி மீனாட்சி
கடந்த ஆண்டு எடுத்த புத்தாண்டு
தீர்மானங்கள் என்னாச்சு ?
அவை...
காற்றோடு போயாச்சு
என்ற பாடல் காற்றோடு வந்து கீச்சுமூச்சுக்
காட்டிக் கொண்டிருக்கிறது.
.இன்றிலிருந்து நான் புதிய ஆள்
என்று உதடுகள் சொன்னாலும்
கடந்த ஆண்டு தீர்மானங்கள்
முன்னால் வந்து நக்கலாக
சிரிக்கத்தான் செய்கின்றன.
எல்லாருடைய வாழ்விலும்
ஆண்டுதோறும் நடைபெறும்
நிகழ்வுதான் இவை எல்லாம்.
இதற்கு நானும் நீங்களும்
விதிவிலக்கா என்ன?
எத்தனை புத்தாண்டு வந்தாலும்
மிஞ்சி மிஞ்சி போனால்
இரண்டு வாரங்கள்தான்
தீர்மானங்களும் அவற்றை நிறைவேற்ற
வேண்டும் என்ற மனஉறுதியும்
இருக்கும்.
அதன் பிறகு எடுத்த தீர்மானமும்
மறந்து போகும். மனஉறுதியும்
கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து
போகும். அந்த நினைப்பிலேயே
தொய்வு விழுந்துவிடும்.
எதற்கு புதிய தீர்மானங்கள்?
கடந்த புத்தாண்டுக்கு எடுத்த தீர்மானங்கள்
அத்தனையும் சட்டசபையில்
நிறைவேற்றப்பட்டு
நிறைவேற்றப்படாத தீர்மானங்களாக
ஓர் ஓரமாக வரிசைகட்டி
நின்று சிரித்துக் கொண்டிருக்கின்றன.
கடந்த ஆண்டு எடுத்த தீர்மானமே இன்னும்
நிறை வேற்றப்படாத நிலையில் புதிதாக
தீர்மானங்கள் எடுக்க வேண்டுமா?
ஒதுங்கிச் போகத்தான் ஆசை.
ஆனால் இந்த உலகம் நம்மைச் சும்மா
இருக்க விடுகிறதா?
இந்தப் புத்தாண்டுக்கு என்னென்ன
தீர்மானங்கள்
எடுத்திருக்கிறீர்கள் ?
என்று கேட்கிறார்கள்.
நானும் ஆண்டுதோறும் தீர்மானம் எடுப்பது தான் மிச்சம்.
நாலு கட்டுரைகள் நான்கு நாட்கள் எழுதினேன்.
நான்கு நாட்கள் நான்குவிதமாக எழுதியாயிற்று.
ஐந்தாவது நாள் என்ன எழுதுவது?
எதைப்பற்றி எழுதுவது என்ற கேள்வி
கண்முன் வந்து சிரிக்க...அட போடா நீயும்
உன் தீர்மானமும் என்று எழுதி வைத்த
டைரி என்னைப் பார்த்து சிரிக்க...
டைரியை
அலமாரியில் புத்தகங்களுக்கு
அடியில் மறைத்து வைத்துவிட்டேன்.
அதற்காக இந்த ஆண்டு தீர்மானம் எடுக்காமல் இருக்க முடியுமா என்ன?
இந்த ஆண்டை ஒரு தேடலின்
ஆண்டாக எடுத்துக் கொள்ளலாம் என்று
நினைக்கிறேன்.
நீங்களும் உங்களுக்குப் பிடித்ததை உங்களால் இயலக்கூடிய
ஒன்றை தீர்மானமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
நான் தேடலைத் தீர்மானமாக
எடுத்துக்கொள்ள காரணம் ....
கற்றது கை மண் அளவு
கல்லாதது உலகளவு.
கற்க வேண்டியவை இன்னும் எவ்வளவோ இருக்கின்றன.
புத்தகங்களைத் தேடித் தேடிக் கற்க
வேண்டும் என நினைக்கிறேன்.
சுற்றுப்புறங்களை
சுற்றி இருக்கும் மனிதர்களை
வாழ்வியல் நுட்பங்களை பற்றி
என்று கற்க வேண்டியவை ஏராளம் உள்ளன.
நீங்களும் உங்களுக்குப் பிடித்ததைத் தேடும் ஆண்டாக இந்த ஆண்டை
மனதில் எழுதி வைத்துக் கொண்டு பயணத்தைத் தொடங்குங்கள். அதுவே இந்த ஆண்டு
தீர்மானமாக இருக்கட்டும்.
அது கல்வியாக இருக்கலாம்.
பொருளாக இருக்கலாம்.
பணமாக இருக்கலாம்.
ஒரு தேடலில் இந்த ஆண்டு தொடங்கட்டும்.
தொடங்கிய செயல் தொடர்ந்து
நடைபெறட்டும்.
எக்காரணத்தைக் கொண்டும் எடுத்தத் தீர்மானத்தை இடையில்
நிறுத்தக்கூடாது
என்ற வைராக்கியத்தோடு புதிய
ஆண்டில் காலடி வைய்யுங்கள்
இந்த ஆண்டு உங்களின் ஆண்டாக
உங்கள் உயர்வின் ஆண்டாக
உங்கள் வளர்ச்சியின் ஆண்டாக
வளத்தின் ஆண்டாக
நன்மைதரு ஆண்டாக
உங்கள் தேடலுக்கான பலனைக்
கொடுக்கும் ஆண்டாக அமைய
வாழ்த்துகள்!
Comments
Post a Comment