நள்ளி
வள்ளல் நள்ளி
புலவர் ஒருவர் கண்டீரம் நாட்டுக்குட்பட்ட தோட்டி மலைப் பகுதியில் வந்து கொண்டிருக்கிறார்.
காதுகள் அடைத்து கண் மங்குவதுபோல தெரிகிறது.
கால்கள் தள்ளாடுகின்றன.
இதற்குமேல் நடக்க முடியாது
என்ற நிலை.
நடக்கமுடியாமல் ஒரு பலாமரத்தடியில் அமர்ந்துவிடுகிறார்.
அப்போது வில்லும் அம்பும் எடுத்துக்கொண்டு இளைஞன் ஒருவன்
அந்த வழியாக வருகிறான்
பார்ப்பதற்கு வசதியான வீட்டுப் பிள்ளை போல தெரிகிறது.
யாராயிருக்கும்?.
இளவரசனாக இருப்பானோ?
இருக்கலாம்....இளவரசனாக இருந்தால் ஒருவேளை உதவி கிடைக்கலாம் .இப்படி ஒரு எண்ணத்தில் புலவர் எழும்ப முயன்றார்.
இளைஞனும் புலவரைப் பார்க்கிறான்.
பார்த்த மாத்திரத்தில் புலவரின் நிலைமை புரிந்து போகிறது.
அதற்குள் புலவர் கையைக் குவித்துக்கொண்டே எழுந்தார்.
"ம்கூம்....அப்படியே இருங்கள்" என்று இருக்கச் செய்தான் இளைஞன்.
அவனுடன் வேட்டைக்கு வந்த மற்ற
இளைஞர்கள் இன்னும்
வந்து சேரவில்லை.
அங்குமிங்கும் பார்த்த இளைஞன்
தானே தன் கையால் தீயை மூட்டினான்.
தான் வேட்டையாடிக் கொண்டு வந்த மானின் தசையை அதிலே வாட்டினான்.
"புலவரே! தாங்கள் மிகவும் பசியுடன் இருப்பதுபோல தெரிகிறது.. இதை உண்ணுங்கள்" என்று கொடுத்தான்.
புலவரும் மறுக்கவில்லை.
பசிக்கு இப்போது அவருக்குத் தேவை உணவு. அது எந்த உணவாக இருந்தால் என்ன?
புலவர் வயிறார உண்டார்.
புலவர் உண்ணும்வரை அவரையே பார்த்துக் கொண்டு நின்றான் அந்த இளைஞன்.
உணவு சற்று விக்குவதுபோல இருந்ததால்
திணறினார் புலவர்.
"ஐயா! இருங்கள் இதோ வந்துவிடுகிறேன்" என்றபடி ஓடோடிச் சென்று அருகிலிருந்த
அருவியிலிருந்து நீர் கொண்டு வந்து
கொடுத்து புலவரை ஆசுவாசப்படுத்தினான்.
புலவர் நன்றியோடு அந்த இளைஞனைப் பார்த்தார்.
"பரவாயில்லை... "கண்களால் பதிலளித்தான் இளைஞன்.
புலவருக்கு விடைபெற்றுச் செல்ல வேண்டிய நேரம் வந்தது.
புறப்பட்டார்.
அப்போது அந்த இளைஞன், "ஐயா!உங்களைப் பார்த்தால் புலவரைப் போல இருக்கிறது. உங்களுக்கு மன்னர்கள் தக்க பரிசில்களை வழங்குவார்கள். காட்டுவாசியாகிய என்னிடம் தங்களுக்கு வழங்க யாதும் இல்லை. என் செய்வது!" என்று வருத்தப்பட்டான்.
ஏதோ நினைவு வந்தவனாக மார்பைத் தடவினான்.
அணிந்திருந்த முத்துமாலை
கைகளில் பட மெல்ல மார்பில் அணிந்திருந்த விலை உயர்ந்த முத்துமாலையைக் கழற்றினான்.
கையில் அணிந்திருந்த கடகத்தையும் கழற்றினான். அவற்றைப் புலவர் கையில்
கொடுத்து,"வேறொனாறும் தர இயலவில்லை. இவற்றையாவது பெற்றுக்கொள்ளுங்கள்" என்றான்
புலவருக்கு வியப்புத் தாங்கவில்லை.
இத்தனை விலை உயர்ந்த அணிகலன்களை கொடுப்பவன்
ஒரு சாதாரணமான குடிமகனாக இருக்க வாய்ப்பில்லை.
கண்டிப்பாக இவன் ஒரு அரசனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்து,
"நீங்கள் எந்த நாட்டவர்?" என்று கேட்டார்.
அதற்கு அந்த இளைஞன் விடை கூறவில்லை.
அதைக் கேட்ட புலவர், ஆச்சரியத்தோடு நின்று யோசித்துப் பார்த்தார்.
மறுபடியும் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.
எதிரில் வந்தவர்களிடம் தான் பார்த்த அந்த இளைஞனைப் பற்றி விசாரித்துக் பார்த்தார்.
அவர்கள் தாங்கள் பார்த்த அந்த இளைஞன் மன்னன் நள்ளியாகத்தான் இருக்க வேண்டும் என்று உறுதிப்படுத்தினர்.
"நாம் கேட்காமலேயே நமக்கு உதவியும் செய்து, முத்து மாலைகளையும், கடகங்களையும் தந்துவிட்டு , தான் யாரென்ற அடையாளமும் கூடச் சொல்லாது சென்றது, மன்னன்
நள்ளியா ?
நள்ளி இவ்வளவு பெரிய கொடையாளியா?ஆச்சரியப்பட்டுப் போனார் புலவர்.
இதற்குப் பெயர்தான், வலக்கை கொடுப்பது இடக்கைக்குக்குத் தெரியக்கூடாது என்பதோ , என்று அங்கேயே ஒரு பாடல் பாடினார்.
அந்தப் புலவர் வேறு யாருமில்லை. அந்தப் புலவருடைய பெயர்தான் வன்பரணர்.
ன்பரணரை அடுத்து நிறைய புலவர்கள் நள்ளியைக் காண வந்து, அவனது கொடைத்திறத்தையும் வீரத்தையும் புகழ்ந்து, பாடல்கள் பாட ஆரம்பிக்க, அவன் புகழ் வானளவு எட்டியது.
வறுமையில் வாடுவோர் யாராகினும், தோட்டியைத் தேடி நம்பிக்கையோடு வந்தார்கள். வந்தவர்கள் யாருடைய முகமும் கோணாத வகையில்,
ஏராளமாக பொருட்களை அள்ளிக் கொடுப்பது பள்ளியின் பழக்கம்.ஒருமுறை பொருள் வாங்க வந்தவர்கள் இன்னொரு முறை அவனிடம் வராதவாறு பொருள் கொடுத்தான் நள்ளி.
இப்படித்தான் ஒருநாள், வறுமையில் வாடிய ஒரு இரவலர், அவன் உதவியை நாடி அவனது வீடு தேடி வந்தார். அப்போது நள்ளி தனது வீட்டில் இல்லை. அவனது தம்பியான இளங்கண்டீரக்கோவும் கூட இல்லை.
"நான் வந்த வேளையில் நள்ளி இங்கில்லாது போய்விட்டானே !! ஒருவேளை அவன் இங்கிருந்திருந்தால், நான் மறுமுறை இங்கு வரவே தேவையில்லாத அளவுக்குக் கொடை தந்திருப்பானே !! இப்போது நான் என் செய்வேன் !!அவன் வீட்டுப் பெண்டிரிடம் நான் என்னவென்று பொருள் வேண்டுவேன் ??" என்று மனம் வாடி, அவனது வாசலில் நின்றார் அந்த இரவலர்.
அவர் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத நேரத்தில், நள்ளியின் வீட்டு வாசல் திறக்கப்பட்டது. நள்ளியின் மனைவி
அவரை வரவேற்றார்
உணவு வழங்கி உபசரித்தார்.
தேவையான பொருளும் வழங்கி அனுப்பி வைத்தார்
நள்ளி மட்டுமல்ல அவன் வீட்டு மகளிரும்
கொடையில் சிறந்தவர்கள் என்பதற்கு
இது ஒரு சான்று.
"நட்டோர் உவப்ப நடைப்பரி காரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கை
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாடன் நள்ளி"
என்ற புகழுக்குச் சொந்தக்காரனான நள்ளி
தனது கொடைத்தன்மையால் கடையேழு வள்ளல்கள் வரிசையில் இடம் பிடித்தான்.
Comments
Post a Comment