நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
வாழ்க்கை வாழ்வதற்கே!
அந்த வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று அனைவரும்
ஒரு திட்டம் போட்டு வைத்திருப்போம்.
ஆனால் நாம் திட்டமிட்டது போல் எல்லாம் நடை பெறுகிறதா?
இடையில் எத்தனையோ குழப்பங்கள்... குளறுபடிகள்...
ஏறுக்குமாறான நிகழ்வுகள்.
இப்படி நடக்கும் என்று
நினைக்கவில்லையே
என்ற புலம்பல்.
இதற்குமேல் எதுவுமே நல்லது நடக்காது என்று
ஒரு முடிவுரை எழுதி வைத்துவிட்டு
விரக்தியில் அமர்ந்திருப்போம்.
திடீர் திருப்பமாக எல்லாமே தலைகீழாக
மாறி நம்மை மகிழ்ச்சியில் திக்குமுக்காட
வைத்து விடும்.
இதுதான் வாழ்க்கை.
நாம் நினைப்பது போல ஒன்றும் நடப்பதில்லை.
பத்து மணிக்கு ஒரு இன்டர்வியூ போக வேண்டும். வழியில் போராட்டக்காரர்கள் வந்து ஆட்டோவை வழி மறிக்க குறிப்பிட்ட நேரத்தில் இன்டர்வியூக்குப் போக முடியவில்லை.
மதிப்பெண்கள் இருக்கிறது. போதுமான எல்லா தகுதியும் இருந்தும் வேலை கிடைக்க முடியாத சூழ்நிலை.காரணம் அரசியல்
குழப்பம். எங்கேயோ நடைபெற்ற
நிகழ்வு உங்கள் வாழ்க்கைக்கு
குறுக்கே வந்து நிற்கிறது.
உள்நாட்டு குழப்பங்கள். மக்களை நிம்மதியாக வாழவிடாது.
எல்லா வசதிகளும் இருந்தாலும் குடிமக்களைக் காக்கும் திறன்மிக்க மன்னன் இல்லை என்றால்
நாட்டில் குடிமக்கள் நிம்மதியாக வாழ முடியாது.
வெளியில் செல்கிறோம்.
எந்தப் பயமுமில்லாமல் பாதுகாப்பாக
வீடு வந்து சேர்ந்துவிடுவோம்.
இந்த நம்பிக்கை எங்கிருந்து வந்தது?.யார் கொடுத்தது?
நாட்டை ஆளும் மன்னனைச் சார்ந்துதான்
நம் வாழ்க்கை இருக்கிறது.
குடி மக்களுக்குப் பாதுகாப்பு
மன்னனிடம் இருந்து கிடைக்கும்
என்ற நம்பிக்கையில்தான் நிம்மதியாக
நடமாடிக் கொண்டிருக்கிறோம்.
நாட்டின் உயிர் நாடியே மன்னன்தான்.
மன்னன் சீராக ஆட்சிபுரிந்தால் நாட்டில் எல்லாம் சீராக நடைபெறும்.
அப்படியானால் குழப்பமான அரசியலும் குடிமக்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது புரிகிறதல்லவா!
வயிறார சாப்பிட போதுமான வசதி இருக்கலாம்.
பயிர்த்தொழில் செய்து வசதி வாய்ப்பைப் பெருக்கிக் கொள்ள
நாட்டில் நீர் வளம் மிகுந்திருக்கலாம்.
சாப்பாட்டிற்கோ வசதிவாய்ப்பிற்கோ பஞ்சமில்லை.
இவை எல்லாம் இருந்தாலும்
நாடாளும் மன்னன்
சரி இல்லை என்றால்..
குழப்பமான அரசியல் சூழல் நிலவினால்....
நாட்டைச் சுற்றி
போர் மேகம் சூழ்ந்திருந்தால்....
குடிமக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்றா நினைக்கிறீர்கள்.?
அதெப்படி நிம்மதியாக வாழ முடியும் என்று கேட்கிறீர்களல்லவா?
நாட்டில் நல்லாட்சி நடத்திடல் வேண்டும் .
சீரான ஆட்சி
சீர்மிகு ஆட்சி
குடிமக்களை நிம்மதியாக வாழ வைக்கும்.
வெளிபகை நீக்கி
உட்பகை அடக்கி
அமைதி பூங்காவாக
நாட்டை ஆளும் அரசன் வேண்டும்.
இதைத்தான் ,
" நெல்லும் உயிரன்றே ; நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
அதனால் , யானுயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே "
என்று மோசிகீரனார் என்ற புலவர் பாடி வைத்துள்ளார்.
"நல்ல படை பலம் உள்ள தானைத்தலைவா...!
கேள் .!
மக்களுக்கு,
நெல்லும் வாழ்வளிக்காது.நீரும் உயிர் கொடுக்காது .
மக்களுக்கு உயிராக இருப்பது மன்னனாகிய நீ மட்டும்தான்.
அதை உணர்ந்து நல்லாட்சி கொடு" என்பதை எவ்வளவு அழகாகக் கூறியிருக்கிறார் மோசிகீரனார்.
"வயல் எல்லாம் நெல் விளைந்து
வரப்புமீது கவிந்து கிடக்க
வாய்க்காலெல்லாம் நீராறு ஓட
வாய்த்த மன்னன் மட்டும்
வலிமையற்று கிடக்க
வாய்க்குமோ நல் வாழ்க்கை
வாள் வேந்தே ; வாழவை வேந்தே"
என்று அறிவுரை கூறும் துணிவு
புலவனைத் தவிர வேறு யாருக்கு வரும்?
Comments
Post a Comment