தமிழரசன்

       தமிழரசன் 


பள்ளி வாசல் வரை உற்சாகமாக வந்த தமிழரசனுக்கு அதற்கு மேல் செல்ல கால் எழவில்லை.
    ஒரு கணம் அப்படியே நின்று பள்ளியையே பார்த்தான்.
      பள்ளிக்குள் செல்வதா வேண்டாமா என்று ஒரு தாவா மனதிற்குள் வந்து அவனை அப்படியே நிறுத்தி வைத்தது.
 நாலு நாளாக பள்ளிக்கு வரவில்லை.

ஆசிரியர் கேட்டால் என்ன சொல்வது ?
 எப்படி சமாளிப்பது.?

 மற்ற மாணவர்களைப் போல சட்டென்று பொய் பேசி பழக்கம் இல்லை.

 உண்மையைச் சொல்லி விடலாம்.
 ஆனால் மற்ற மாணவர்கள் என்ன நினைப்பார்கள் . 
தன் உண்மை நிலையை எண்ணி உள்ளுக்குள்ளே வெதும்பி நின்றான். நினைக்க நினைக்க கூச்சமாக இருந்தது. 

ஏன் இப்படி ? எனக்கு மட்டும் ஏன் இப்படி?

கடவுளைக் கண்டு 
கேட்க வேண்டும் போல இருந்தது.
 கேட்டால் பதில் கிடைக்கவா போகிறது.
 கோபத்தை உள்ளுக்குள்ளே புதைத்து விட்டு 
ஊமையாக நின்றிருந்தான்.
  
 மற்ற மாணவர்கள் கிண்டலாகப் பேசுவது இப்போதே காதுகளில் 
ஒலிக்க ஆரம்பித்தது. 

        " போதும் நிறுத்துங்கள் "என்று கத்த வேண்டும் போல் இருந்தது.

" இத்தனை தயக்கத்திற்குப் பின்னரும் பள்ளிக்குப் போவதா?...
    வேண்டாம்.... வேண்டாம் ... பள்ளியும் 
வேண்டாம் படிப்பும்‌ வேண்டாம். ஒழுங்காக உடுத்தி ஒரு துணி இல்ல...இருக்க ஒரு வீடு இல்ல...நாளைக்கு என்ன நிலைமைஎந்த பிளாட்பாரமோ யார் கண்டார்கள் படித்தது போதும்...போதும்... திரும்பிப்போ..."
உள்ளுணர்வு உதறலெடுக்க வைத்தது.எந்த முடிவும் எடுக்க முடியாமல் அப்படி நின்றான்.

சரி ..நடப்பது நடக்கட்டும் என்று
முடிவெடுத்த தமிழரசன் அப்படியே திரும்பினான்.
      அங்கே பள்ளி ஆசிரியை ஒருவர் வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
      இனி கையில் புத்தகப் பையோடு
 திரும்ப முடியாது.
      பள்ளிக்குச் சென்றே ஆக வேண்டும் அல்லது ஆசிரியர் கண்ணிலிருந்து தப்ப வேண்டும்.
      தப்புவது முடிகிற காரியமாகத் தெரியவில்லை .என்ன நடந்தாலும் நடக்கட்டும்.
         எதுவுமே நடக்காது போல விறுவிறுவென்று பள்ளிக்குள் நுழைந்தான்.
         நேராக தன் வகுப்பறைக்குச் சென்று தன் இடத்தில் அமர்ந்தான்.

 "இத்தனை நாள் பள்ளிக்கு ஏன் வரவில்லை ? "
 மாணவன் ஒருவன் முதல் கேள்வியைக் கேட்டு வைத்தான். 


 பதில் சொல்வதற்கு முடியாமல் அவன் முகத்தைப் பார்த்தான் தமிழரசன் .
அதற்குள் மற்றொரு மாணவன்,

  "பள்ளிக்கு வராமல் எங்க போன....டீச்சர் வந்ததும் உனக்கு நன்றாக அடி கிடைக்கும் "என்று விரலை விரலை ஆட்டி பயமுறுத்தினான்.

        தமிழரசனால் ஒன்றுமே பேச முடியவில்லை. நெஞ்சுக்குள் ஒரே படபடப்பு.
     முகமெல்லாம் வியர்த்துக் கொண்டு வந்தது. ஏதோ நெஞ்சுக்குள் அடைப்பது போல இருந்தது.
     எதையும் வெளிக்காட்டாமல் பைக்குள்ளிருந்து புத்தகத்தை எடுப்பது போல முகத்தைப் பைக்குள் மறைத்துக் கொண்டான் தமிழரசன்.

     "குட்மானிங் டீச்சர்...." என்ற குரல் கேட்டதும் பட படவென்று எழும்பி நின்றான்.வாயிலிருந்து குட்மானிங் ...வர மறுத்து திக்குமுக்காடியது.

 அனைவரையும் அமரச் சொன்னார் ஆசிரியை.
     அதற்குள் ஒரு முந்திரிக்கொட்டை முந்திக் கொண்டது.
     "டீச்சர் தமிழரசன் நாலு நாளா பள்ளிக்கு வராம இன்றுதான் வந்திருக்கான் "என்று தமிழரசனை ஆசிரியர் முன் ஆஜர் படுத்தினான்.

     தலை குனிந்தபடி எழுந்து நின்றான் தமிழரசன்.
    " தமிழரசன் ...இத்தனை நாட்கள் ஏன் வரல ?"
     ஆசிரியர் கேட்டார்.
     தமிழரசனால் பதில் சொல்ல முடியவில்லை. கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது.
    " என்ன சொல்வது? எப்படி சொல்வது? அம்மாவுக்கு உடம்புக்குச் சரியில்லாமல் போனதால் ...நான்தான் சாப்பாட்டிற்காக பிச்சை எடுக்க வேண்டியதாயிற்று என்பதை எப்படி கூறுவது....எல்லோரும் சிரிப்பார்கள் ஏ...என்ன செய்வது? " உதடுகள் உண்மையைக் கூற விடாமல் ஒட்டிக் கொண்டன?
    வார்த்தைகள் வர மறுத்தன.
     ஏதோ சொல்ல முடியாமல் விழிக்கிறான் என்பது
     ஆசிரியருக்கு ஓரளவுக்குப் புரிந்து போயிற்று.
     அருகில் அழைத்தார். "என்னப்பா ...என்னாயிற்று உடம்புக்கும் சரியில்லையா ?....சொல்லு ..."கையைப் பிடித்தபடி அன்பாகக் கேட்டார்.
     ஆசிரயர் கை பட்டதுமே அவனால் அதற்குமேலும் உண்மையை மறைக்க முடியாது என்பது போல கண்ணீர் வழிய ஆசிரியரைப் பார்த்தான்.
       " வீட்டுல யாருக்காவது உடம்புக்குச் சரியில்லையா? ... உண்மை யைப் சொல்லு.... டீச்சர் அடிக்க மாட்டேன்"மறுபடியும் டீச்சர் முதுகைத் தடவிக் கொடுத்தபடி கேட்டார்.
      " டீச்சர் அவன் நன்றாகத் தான் இருந்தான்.மார்க்கெட் பக்கம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். 
  நான் பார்த்தேன்...."எல்லோர் முன்னிலையிலும் போட்டு உடைத்தான் ஒரு மாணவன்.
       தமிழரசன் அப்படியே கூனிக் குறுகிப் போனான்.
       எது தெரிந்துவிடக்கூடாது என்று இத்தனை நேரம் தயங்கித் தயங்கி நின்றானோ அந்த உண்மை இப்போது வெளிவந்து விட்டது.

 கண்களில் கண்ணீர் வடிந்தது.
உடல் முழுவதும் குறுகி தரையைப் பார்த்தபடி நின்றான்.
உதடுகள் ஒன்றுக்கு ஒன்று உரசி
கோணிக்கொண்டிருந்தன.

 நிலைமையைப் புரிந்து கொண்ட ஆசிரியை தமிழரசனை வெளியே அழைத்துச் சென்று தனியாக பேசினார். 


 வீட்டைப்பற்றி விவரமாக விசாரித்தார்.
 கண்ணீரோடு பாடம் ஒப்பிப்பது போல் தன் வீட்டு நிலைமையை ஒன்று விடாமல் ஆசிரியரிடம் ஒப்பித்தான் தமிழரசன்.

கண்ணீரைத் துடைத்துவிட்டு ஆசிரியர்,

    "சரி பார்த்துக்கலாம் . கவலைப்படாத....ஒன்றும் பிரச்சினை இல்லை.நீ நன்றாக படிக்கிற பையன். இப்படி அடிக்கடி விடுப்பு எடுத்தால் நீ படிக்க முடியாது."
என்றபடி எதையோ யோசித்துவிட்டு 
   " ஏதாவது ஒரு விடுதியில் சேர்த்து விடட்டுமா?.... சாப்பாடு நல்லமுறையில் கிடைக்கும். நன்றாக படிக்கலாம்" என்று கரிசனையோடு கேட்டார்.

பதறிப்போனான் தமிழரசன். 

 "வேண்டாம் டீச்சர் ...வேண்டாம் .என் அம்மாவை விட்டுவிட்டு நான் எங்கும் வரமாட்டேன்." ஆசிரியரின் கையைப் பிடித்து அழுதான்.

    "இங்கேயே இருந்து நல்லா படிக்கிறேன்டீச்சர். 
    என் அம்மாவுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போகுது. 
    நானும் இல்லாம போயிட்டா யாரு டீச்சர் எங்க அம்மாவ பாத்துக்குவா?எங்க அம்மாவுக்கு சாப்பாடு யார் தருவா டீச்சர்?
 எனக்கு என் அம்மா கூட தான் இருக்கணும்."
  கண்ணீரோடு திக்கித் திணறி பேசி முடித்தான்.

 அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ்?

ஆசிரியையால் அதற்கு மேலும் 
கண்ணீரை அடக்க முடியவில்லை.

    தமிழரசனின் உறுதியைப் பார்த்ததும் ஆசிரியருக்கு அதற்கு மேல் எதுவும் பேச வேண்டும் என்று தோணவில்லை.
      " கற்கை நன்றே கற்கை நன்றே 
       பிச்சை புகினும் கற்கை நன்றே "
       எத்தனை முறை கற்பித்திருப்பேன். 
       இன்று பிச்சை எடுப்பதின் வலி என்ன என்பதை இந்த சிறுவன் மூலமாக கற்றுக்கொண்டேன் உள்ளுக்குள் சொல்லிக் கொண்டார் ஆசிரியை.
      கொடிது கொடிது இளமையில் வறுமை.
        தமிழரசன் மாதிரி மகன் கிடைப்பதற்கு என்ன தவம் செய்தாரோ அந்த ஏழை தாய் என்று பெருமிதப்பட்டுக் கொள்வதைத் தவிர வேறு வழிதெரியவில்லை ஆசிரியருக்கு.
            
            
            

Comments