அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை போல

அற்ற குளத்தின் அறுநீர்ப்பறவை போல...


நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர்

அங்கமாக இருப்பவர்கள் உறவுகள்.


"கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு

கூடுதல் கோடி  பெறும் "

என்று தனது தனிப்பாடலில் சொல்லித்

தந்தார் ஔவை .

அப்படிச் சொன்ன ஔவை
யார் உறவினர் என்று சொல்லித் தருகிறார்.

ஔவையின் பாடல்கள் பொழுதுபோகாமல் 

எழுதப்பட்டவை அல்ல.

அனுபவச் சாறு பிழிந்து கொடுக்கப்பட்ட

வாழ்வியல் விருந்து.

எக்காலத்தினரும் அருந்தி இன்பம்

காணவல்ல அருமருந்து.

மூதுரையின் ஒவ்வொரு பாடலும்

தெரிந்து கொள்ள வேண்டிய

வாழ்க்கைப் பாடங்களை நடத்திச் செல்லும்.


இன்றைய மூதுரை விருந்து இதோ:



"அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்

உற்றுழித் தீர்வார் உறவு அல்லர் - அக்குளத்தில்

கொட்டியும் ஆம்பலும்  நெய்தலும் போலவே

ஒட்டி யுறுவார் உறவு "


                                  -  மூதுரை


விளக்கம் :


நீர்ப்பறவைகள் குளத்தில் நீர் நிறைந்திருக்கையில்

அதைச் சுற்றிச் சுற்றி வந்து அதில்

கிடக்கும் மீன்களை உண்டு வாழும் .

குளத்தில் நீர் வற்றிவிட்டால் ....

அந்தப்பக்கமே திரும்பிப் பார்க்காமல் 

வேறு திசையை நோக்கி...

அதாவது நீர்நிலைகளை நோக்கிச்

சென்றுவிடும்.

அது போல நாம் வசதியாக வாழும்போது

 உறவினர்கள் என்று ஒரு கூட்டம்

 நம்மைச் சுற்றி இருக்கும்.

 

நமக்கு வறுமையோ ஒரு துன்பமோ ஏற்பட்டு

விட்டால்.....

நம்மை அப்படியே நிராதரவாக விட்டுவிட்டு

ஓடிவிடுவர்.

அப்படிப்பட்டவர்கள் உறவுகளே அல்லர்.

நீர் இருந்தாலும் இல்லாமல் போனாலும் கொட்டி, 

ஆம்பல், நெய்தல் போன்ற நீர்த்தாவரங்கள்

குளத்தைவிட்டு எங்கும் சென்றுவிடுவதில்லை.

குளத்திலேயே கடைசிவரை கிடக்கும்.

 நீர் இருந்தாலும் இல்லாமல் போனாலும்

 குளத்தைவிட்டு நீங்கா இத்தாவரங்கள் போல

 இன்பதுன்ப காலங்களில் உடன் இருந்து

 உதவுபவரே உறவுகள் எனக் கருதப்படுவார்.


இருக்கும் வரை சுற்றி சுற்றி உறவுகள் வரும்.

.வறுமை வந்துவிட்டால்...

இடர் நேர்ந்துவிட்டால்...

நம்மிடம் உதவி கேட்டுவிடுவார்களோ என அஞ்சி

எட்ட சென்று கை கொட்டிச்

சிரிக்கும்.. என் உறவு என்று சொல்லிக்

கொள்ளவே அவமானப்பட்டு விலக்கி

வைக்கும்.

இதுதான் உலகமடா...

அப்படிப்பட்டவர்கள் உனக்கு உறவுகளே கிடையாது.

அவர்களை உறவு என்று நம்பி ஏமாந்துவிடாதே

என்று சொல்லித் தருகிறார் ஔவை.


கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போல

எக்காலத்திலும் உன்னோடு இருப்பவரை 

மட்டுமே உறவினர் என்ற பட்டியலில்

வைத்திரு. மற்றவர்களை அடையாளம்

கண்டு ஒதுங்கி இரு.


நம் துன்பத்தில் பங்கு கொள்பவர்களே

உண்மையான உறவினர்கள்.

எப்போதும் மனதில் பதிய வைத்துக் கொள்ள

வேண்டிய வைர வரிகள்.


எவ்வளவு பெரிய வாழ்வியல் உண்மை

பாருங்கள்!



Comments