வேதாளம் சேருமே வெள்ளெருக்கு பூக்குமே
வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே....
பொய் சொன்ன வாய்க்கும் போஜனம்
கிடைக்காது என்பார்கள்.
அப்படியானால் பொய் சொன்னால் சாப்பாடு
கிடைக்காது.
பொய் சொன்னால் பட்டினி கிடக்க வேண்டியதுதான்.
ஆதலால் உண்மை பேசுக
என்று பெரியோர் சொல்லித் தந்திருக்கிறார்கள்.
ஏன் உண்மை பேச வேண்டும்?
அதற்குப் பதிலாக வள்ளுவர்
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
குறள் - 300)
என்கிறார்.
வாய்மையைத் தவிர வேறெதுவும்
நன்மை பயக்கக் கூடியது அல்ல
என்று வள்ளுவர் ஆணித்தரமாகச் சொல்லித் தந்துவிட்டார்.
இப்படியொரு பெருமையோடு நிமிர்ந்து பார்க்க,
"பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனில் "
என்று சொல்லி பொய் சொல்லலாம்
என்று வள்ளுவர் சொல்ல
என்ன பொய் சொல்லலாமா
என்று நாமும் திருப்பி கேட்க
ஆமாம் ...பொய் சொல்லலாம்.
நாம் சொல்லும் பொய்யாய் ஒருவர்க்கு நன்மை பயக்குமானால் மட்டும் பொய் சொல்லலாம் என்று ஒரு நிபந்தனையோடு
பொய் சொல்ல ஒப்புதல் அளித்து விட்டார்
வள்ளுவர்.
அதனால் வள்ளுவரே அனுமதி அளித்து விட்டார் என்று பொய் சொன்னவர்கள்
நல்லதுக்குத்தானே பொய் சொன்னேன்
என்று சமாதானப்பட்டுக் கொண்டனர்.
இப்படி பொய்யும் மெய்யும்
புரட்டிப் போட்டுக்கொண்டிருந்த வேளையில்
நல்வழியில் உள்ள ஒரு பாடல்
என் கண்ணில் பட்டது.
அப்படியே அதிர்ந்து போனேன்.
இது என்னப்பா .... பொய்க்கு வந்த சோதனை என்று
நிலை குலைந்து போனேன்.
அப்படி உங்களை நிலைகுலையச் செய்த
பாடல் எது என்கிறீர்களா?
இதோ உங்களுக்காக...
"வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை"
ஒருவர் நீதிமன்றத்தில் போய் பொய் சாட்சி
சொல்லிவிட்டாராம்.
பொய்யா சொன்னாய்?
பொய் சாட்சி சொன்னால் உன் வீடு
என்ன நிலைமையாகும்
தெரியுமா?
உன் வீடு பாழடைந்து போகும்.
பாழடைந்த வீட்டில் நீ குடியிருக்க
முடியுமா?
வேதாளம் வந்து
குடியிருந்து விடும்.
வெள்ளை எருக்கம் செடி முளைத்து
எருக்கம் பூ பூக்கும்.
கூடவே பாதாள மூலி என்னும்
விஷ செடி வளர்ந்து கிடக்கும்.
இந்த நிலைமையில் வீடு இருந்தால்
சீதேவியா வாழ வருவாள்.
மூதேவி வந்து குடியேறிவிடுவாள்.
செடியும் செத்தையுமாக இருக்கும் வீட்டில்
பாம்பு குடியிருக்கும்.
உன் வீடு வாழ்வதற்கு ஏற்ற
இடமாக இருக்காது.
மொத்தத்தில் உன் வீடு அழிந்தே போகும்
என்பதைத்தான் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஔவை.
பொய் சாட்சி சொன்னால் இப்படி எல்லாம் நடக்குமா?
அச்சமாக இருக்கிறதல்லவா?
இனி பொய் சாட்சி சொல்ல மனம் வருமா?
வராது...வராது வரவே வராது
என்ற உங்கள் மன உறுதி எனக்குப் புரிகிறது.
பொய் சொல்லவதற்கு முன்பு
வேதாளம் பேருமே
வெள்ளெருக்கு பூக்களுமே
என் பாடலை மறுபடியும் ஒருமுறை
படித்துவிட்டுச் செல்லுங்கள்.
Comments
Post a Comment