ஓணான் பனைமரம் ஏறுமா?
ஓணான் பனைமரம் ஏறுமா?
ஏன் ஏறாது.....பனைமரம்
சொரசொரப்பானதாக இருக்கும் என்பதால்
பனைமரத்தில் ஓணான் ஏறாது என்கிறீர்களா?
பனை மரத்தில் ஓணான் ஏறியதைப்
நானும் பார்த்ததில்லை. ஆனால் பனை மரத்தில்
ஓணான் ஏறும் என்பதை நான்
அடித்துச் சொல்லுவேன்..
ஓணான் பனைமரம் ஏறும்...ஏறும்...ஏறும்.
ஏழாம் வகுப்பு கணக்குப் புத்தகத்தில்
ஒரு ஓணான் கணக்கு இருக்கிறது.
அதில் ஓணான் பனை மரத்தில் ஏறிய
கணக்கு ஒன்று இருந்தது.
ஆதாரம் வேணாடுமா?
பாடல் இதோ உங்களுக்காக....
"முப்பத்தி ரண்டு முழம்உள முட்பனையைத்
தப்பாமல் ஓந்தி தவழ்ந்தேறிச். - செப்பமுடன்
சாணேறி நான்கு விரற்கழியும் என்பரே
நாணா தொருநாள் நகர்ந்து "
என்று காரி நாயனார் கணக்கதிகாரம்
என்ற நூலில் சொல்லியிருக்கிறார்.
இப்போவாவது ஓணான் பனைமரம்
ஏறும் என்பதை நம்புகிறீர்களல்லவா?
இப்போது கணக்குக்கு வாருங்கள்.
ஒரு முழம் என்றால் இரண்டு சாண்.
ஒரு சாண் என்றால் பன்னிரண்டு விரல் அளவு
அப்படியானால் இரண்டு முழம் என்றால்
இருபத்தினான்கு விரல் அளவு
என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பனைமரத்தினுடைய உயரம் 32 முழம்.
ஓணான் ஒரு நாளைக்கு ஒரு சாண் ஏறி
நான்கு விரல்கடை தூரம் இறங்குகிறது.
அதாவது பன்னிரண்டு விரல்கடை தூரம் ஏறி
4 விரல்கடை தூரம் இறங்குகிறது.
அப்படியானால் ஒரு நாளைக்கு 8 விரல்கடை
தூரம் ஏறுகிறது இல்லையா?
மறுபடியும் கணக்கிற்கு வாருங்கள்.
பனை மரத்தின் மொத்த உயரம்
32 முழம் என்பதால் அதனை விரல்கடை
அளவாக மாற்றுவோம்.
1 முழம் = 24 விரல்கள்
அப்படியானால் 32 முழம்
என்பது 32 × 24 = 768.
பனை மரத்தின் மொத்த உயரம்
768 விரல்கடை அளவு.
இப்போது பனை மரத்தின் மொத்த உயரத்தை
விரல்கடை அளவாக மாற்றியாயிற்று இல்லையா?
ஓணான் 1 நாள் கடக்கும் தூரம் 8 விரல்கடைஅளவு.
8 விரல்கடை தூரத்தை ஒருநாளில்
கடந்தால் 768 விரல்கடை தூரத்தை
எத்தனை நாட்களில் கடக்கும்?
768 ஐ 8 ஆல் வகுத்தால் எளிதாக விடை கிடைத்துவிடும்.
இப்போது 768 ஐ வகுத்து விடை சொல்லுங்கள் பார்ப்போம்.
768÷8=96
தொண்ணூற்று ஆறு .
அதாவது ஓணானானது 768 விரல்கடை தூரத்தைக்
கடக்க 96 நாட்கள் எடுத்துக் கொண்டது.
இப்போது கணக்கு நன்றாக புரிந்திருக்கும்
என்று நம்புகிறேன்.
கணக்கு புரிந்து விட்டது.
இப்போதாவது ஓணான் பனைமரத்தில் ஏறும்
என்பதை நம்புகிறீர்களா?
ஓணான் பனைமரத்தில் ஏறும் என்பதற்கு
காரி நாயனாரையும் துணைக்கு அழைத்து
வந்து ஒரு கணக்கையும்
சொல்லித் தந்து விட்டேன்.
இனி நம்பாமல் இருப்பீர்களா?
காரி நாயனார் பார்த்த ஓணான்
ஒரு பனைமரத்து உச்சிக்கு
செல்ல 96 நாட்கள் ஆகிறது.
என்பதையும் நம்பியிருப்பீர்கள்.
நம்பினோர் கெடுவதில்லை.
Comments
Post a Comment