நிலத்தினும் பெரிதே



நிலத்தினும் பெரிதே


 
தலைவன் ஒருவன் ஒரு பெண்ணைக் காதலிக்கின்றான் . அவளும் அவன் 
காதலை ஏற்றுக்கொள்கிறாள்.

இருவருக்குமிடையில் நெடுநாட்களாக காதல் தொடர்கிறது.ஆனால் திருமணம் குறித்து எந்தவொரு பேச்சுமில்லை.
இப்படியே எவ்வளவு நாட்கள்தான் காதலித்து கொண்டிருப்பது?

இவர்கள் இருவரும் காதலிப்பது அப்பெண்ணின் தோழிக்குத் தெரியும்.
வெகுவிரைவில் திருமணம் 
செய்து கொள்வார்கள் என்று
எதிர்பார்த்தாள்.
ஆனால் திருமணம் என்ற பேச்சே
நடைபெறுவதாகத் தெரியவில்லை.

இப்படியே இருவரும் காதல் செய்து கொண்டிருந்தால் இதற்கு முடிவுதான் என்ன?

திருமணம் செய்து கொள்ள வேண்டாமா?

கவலைப்படுகிறாள் தோழி.

ஒருநாள் தலைவியைப் பார்க்க வந்திருக்கிறான் தலைவன். பிறர் அறியாதவாறு மறைவாக நின்று கொண்டிருக்கிறான். 
தலைவன் மறைந்து நிற்பதைத் தோழி
பார்த்து விடுகிறாள்.

இதுதான் நல்ல வாய்ப்பு.
 தலைவனிடம் கேட்டுவிட
வேண்டியதுதான்.

ஆனால் இது சாத்தியமாகுமா?

நேரடியாக எப்படி கேட்பது?
தலைவன் தவறாகப் புரிந்துகொண்டால் என்ன செய்வது?

ஆனாலும் தலைவன் கேட்கும்படியாக
தலைவனைப் பழித்துப் 
பேசுகிறாள் தோழி!

தன் அன்பிற்குரியவனை இன்னொருத்தி
தவறாகப் பேசுவதா?
பொறுத்துக் கொள்வாளா தலைவி?
பொங்கி எழுகிறாள்.

தலைவனுக்கும் தனக்குமுள்ள உறவு
எப்படிப்பட்டது தெரியுமா ? சொல்கிறேன் கேள். இந்த நிலமும் வானும் நீரும் எப்பொழுதும் இங்கே இருந்தாலும் உரிய நேரத்தில் இயைந்து தானே இவ்வுலகத்திற்கு பயனிளிக்கின்றன.

அதைப் போல எங்கள் நட்பும் திருமணம் செய்து கொண்டு நாங்கள் வாழும் நாளில் நன்மையைக் கொடுக்கும் .அதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.அதுவரை பொறுத்திருக்கத்தான் வேண்டும் "
என்று தலைவன் காதுபட 
தோழிக்குப் பதிலுரைக்கிறாள் தலைவி.

பாடல் இதோ உங்களுக்காக...


"நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே – சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே."

       குறுந்தொகை- பாடல் எண் - 3


கரிய கொம்புகளில் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கும் நாடு என் தலைவனின் நாடு. அப்பூக்களில் உண்ட தேனினை வண்டுகள் தொகுத்துத் தேனடையாகக் கொடுக்கின்றன. இத்துணை வளம் நிறைந்த குறிஞ்சித் தலைவனோடு நான் கொண்ட நட்பு எப்படிப்பட்டது தெரியுமா?

நிலத்தை விடப் பெரியது. 
வானை விட உயர்ந்தது. 
நீரினை விட ஆழமானது

என்கிறாள்.

 எப்படி வண்டு குறிஞ்சிப் பூக்களில் தேனெடுத்து தேனடையாக்குகின்றதோ அப்படித்தான் குறிஞ்சித் தலைவனோடு நான் கொண்ட நட்பும் அன்பால் பெருகி இல்லற வாழ்வாய் சிறப்புறும் என்ற
நம்பிக்கை தலைவியிடம் உள்ளது.

அதனை அவள் சொல்லும் முறை தேனினும் இனிது.
தலைவனோடு தான் கொண்ட நட்பினை இத்தன்மைத்தது என்று அளவிட்டுக் கூற முடியாது.

நிலம் எவ்வளவு பெரிதாக
பரந்து விரிந்து கிடக்கிறது.
அதைவிட பெரியது எங்கள் காதல்.

வானம் எவ்வளவு உயரமானது அளவிட முடியுமா?
முடியாதல்லவா?
அது போன்றுதான் எங்கள் காதலின்
உயரத்தையும் அளவிட்டு விட முடியாது.

கடல் எவ்வளவு ஆழமானது என்பது
தெரியுமல்லவா?
அதைவிடவும் ஆழமான காதல் எங்களுடையது.

 எங்கே கற்றாள் இப்படி பேசுவதற்கு?

  நிலம், வானம் , நீர் மூன்றும் வெவ்வேறானவை தான். ஆனால் அவை இணையும் போது தான் உலகிற்குப் பயனளிக்கும் .

அது எனக்கும் தெரியும் .
என் தலைவனுக்கும் தெரியும். 
எங்கள் நட்பும் இணைந்த நட்பு. இதில் ஒருவரை விட்டு ஒருவர் தனித்து பயன் பெறுதல் இல்லை.

ஆதலால் எங்கள் நட்பு இருவரும் இணையும் திருமணத்தில் தான் முடியும் 
என்பதை சொல்லாமல் சொல்லி 
புரிய வைக்கிறாள் தலைவி.

 
சரி, நிலத்தை விடப் பெரியது.
வானை விட உயர்ந்தது. 
நீரினை விட ஆழமானது

என்று சொல்வதில் இன்னொரு
பொருளும் பொதிந்திருக்கிறது.

இவை எல்லாம் கூட ஒரு காலத்தில் 
தன் நிலையில் மாறுபடலாம்.
பொய்த்துப் போகலாம்.
குறைந்து போகலாம்.

ஆனால் எங்கள் நட்பு அப்படிப்பட்டதன்று.
அவற்றைவிட‌ நிலையானது. எப்பொழுதும் ஒரே நிலையில் சிறப்புடன் திகழ்வது 
என்கிறாள். 

 இயற்கையை முன்னிலைப்படுத்தி இயற்கையின் இனிது எம் நட்பு 
என்று காதலை உயர்த்திச் சொல்லும் காதலியின் சொல்வன்மையும் கேட்கும் போதே நமக்கே இனித்ததென்றால் காதலன்
காதுகளில் விழுந்திருந்தால்...

விரைந்து திருமணம் செய்ய முடிவு எடுத்திருப்பான் இல்லையா...

சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே


நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே

என்று படித்துப் பாருங்கள்.
பாடல் கூடுதல் இனிமை தரும்.


Comments