ஔவியம் பேசேல்
ஔவியம் பேசேல்
ஆத்திசூடி எளிமையான சொற்றொடர் உடைய நீதி கருத்துகள்
கொண்ட பாடல்.
ஔவையின் ஆத்திசூடி படிக்காமல் தமிழ் எழுத்துகளைப் படித்தவர்கள் எவரும் இருக்க முடியாது.
ஆத்திசூடியைப் படித்ததும் பொருள் விளங்கும் .
அதனால் அதன் பொருளை அறிவதற்கு யாரும் மெனக்கெடுவதில்லை.
பள்ளியில் தெரிந்த பொருளை சொல்லிவிட்டு போய்க் கொண்டே இருப்பார்கள்.
ஆசிரியர் சொன்னதுதான் வேத வாக்கு.
சில ஆசிரியர்கள் மனப்பாடம் செய்ய வைப்பார்களே தவிர பொருளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
அறியாத பருவத்தில் தெரியாத பொருளோடு கடந்து வந்து விட்டோம்.
மறுபடியும் அதைப்பற்றிய சிந்தனையே இல்லாது இருந்திருப்போம்.
யாராவது படித்தவர்கள்தானே என்று ஔவியம் பேசேல் என்பதற்கு பொருள் கேட்டால் மலங்க மலங்க விழிப்போம்.
கற்று கற்றுக் கொடுப்பவர்கள்தான் ஆசிரியர்கள்.
தெரியாமல் இருப்பது இமாலய குற்றம் அல்ல.
ஆனால் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இல்லாதிருப்பது தவறு.
ஔவியம் பேசேல் என்றால் ஔவியம் பேசேல்தான் என்று தலையில் தட்டி உட்கார வைக்கும் ஆசிரியர்களும் உண்டு.
சரி போகட்டும்....
ஔவியம் என்றால் அழுக்காறு , பொறாமை என பொருள் தரப்பட்டுள்ளது.
அப்படியானால் பொறாமை பேசக்கூடாதா?
பொறாமை ஒரு உணர்வல்லவா....?
அதை எப்படிப் பேச முடியும்?
மனதில் பொறாமை உள்ளவன் அறக்கருத்துகளைக் கூறுவதற்கு
லாயக்கற்றவன் .
அதனால்தான் ஔவியம் பேசேல் என்கிறார்.
பொறாமையை மனதில் வைத்துக்கொண்டு நல்லவன் போல் நாடகம் ஆடாதே .
அடுத்தவன் தன்னைவிட அதிக மதிப்பெண் பெற்றவிட்டானா ....
உடனே மனதிற்குள் பொறாமை வந்துவிடும்.
நம்மைவிட நண்பன் குடும்பம் வசதியாகிவிட்டால் மனம் ஏற்றுக்கொள்ளாது.
ஏதோ கள்ளப்பணம் வருது. அதனால்தான் பணக்காரன் ஆகிவிட்டான் என்று தப்புத்தப்பாக பேச வைக்கும்.
எதிர்த்த வீட்டிற்கு ஏதாவது விலை உயர்ந்த பொருள் வாங்கிவிட்டால்...பக்கத்துவீட்டில் இரவில் தூக்கமே வராது.
இதெல்லாம் பொறாமையின் வெளிப்பாடு.
ஆனால் நேரில் பார்க்கும்போது எதுவும் இல்லாதது போல் பாசாங்கு வைத்துப் பேசுவது.
இந்தப் போலித்தனம்தான் வேண்டாம் என்கிறார் ஔவையார்.
இந்த ஔவியம் அதாவது அவ்வியம் பற்றி நாலடியாரில் ஒருபாடல் வருகிறது.
" அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்
செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்
கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்
செவ்வி கொளல்தேற்றாது ஆங்கு. "
"தோலை வாயினால் கவ்வித் தின்னும் குணம் கொண்ட நாய்க்குப் பால் சோற்றின் நல்ல சுவையை அறியும் தன்மை இல்லாது இருக்கும்.
அதுபோல பொறாமை கொள்ளாத நற்குணம் கொண்ட சான்றோர் அறநெறியை உரைத்திடும் போது அதனை நற்குணங்கள் இல்லாத புல்லறிவாளர் ஒருபோதும் செவி கொடுத்தும் கேட்க மாட்டார்கள்" என்கிறது நாலடியார்.
இங்கே ஔவை கூறிய ஔவியமும் நாலடியார் கூறும் அவ்வியமும் சொல்ல வந்த பொருள் ஒன்றுதான்.அதுதான் பொறாமை.
அறத்தைப் பேசுவதற்குக்கூட ஒரு தகுதி வேண்டும்.
அழுக்காறு இல்லாதவர்களுக்குத்தான் அந்தத் தகுதி உள்ளது
என்கிறது நாலடியார்.
ஔவியம் பேசேல் என்றால்
பொறாமையை மனதில் வைத்துவிட்டு
அறம் பேசாதே என்று நச்சென்று
சொல்லிவிட்டார் ஔவை.
" ஔவியம் பேசேல் " என்று ஔவை கூறிய பொருள் இப்போது புரிகிறதல்லவா !
.
Comments
Post a Comment