கைவேல் களிற்றொடு போக்கி...
கைவேல் களிற்றொடு போக்கி..
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு "
என்று தமிழின், தமிழ் நாட்டின் அடையாளம் திருவள்ளுவர் என்ற பெருமை கொண்டவர்.
1330 குறட்பாக்களைத் தந்தவர்.
அறத்துப்பால்
பொருட்பால்
இன்பத்துப்பால்
என்று முப்பாலையையும்
தந்து எப்பால் உனக்கு வேண்டுமோ அப்பாலை எடுத்து
தப்பாமல் வாழ் என்று
சொல்லித் தந்தவர்.
ஒன்றே முக்கால் அடியில் உலகை அளந்தவர்.
"கடுகைத் துளைத்து எழுகடலைப் புகட்டி
குறுகத் தரித்தக் குறள் "
என்று அனைவரையும் கொண்டாட வைத்தவர்.
இப்படி எல்லாத் தரப்பினராலும் கொண்டாடப்படும்
வள்ளுவரின் ஒவ்வொரு குறளும்
ஒவ்வொரு கதை பேசும்.
அப்படி என்னோடு கதை பேசி
இப்படியொரு வீரனா என்று
என்னை வியக்க வைத்து
கலங்க வைத்த குறள் ஒன்று இதோ உங்களுக்காக...
"கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்."
குறள் :774
இதுதான் என்னைப் போர்க்களத்திற்கே அழைத்துச் சென்று கலங்க வைத்த குறள்.
தீவிரமாகப் போர்க்களத்தில்
போர் நடந்து கொண்டிருக்கிறது.
வீரன் ஒருவன் தன் கையில் வேலினை வைத்து கொண்டு போரிட்டு கொண்டிருக்கிறான்.
அப்போது எதிரி நாட்டு யானை
ஒன்று வீரனை நோக்கி
பாய்ந்து வருகிறது.
அந்த வீரன் நேருக்கு நேராக
ஒற்றை ஆளாக நின்று போரிட்டு அந்த யானையை வீழ்த்த நினைக்கிறான்.
யானையும் இவனை தாக்குவதற்காக நேருக்கு நேராக முன்னோக்கி நெருங்கி வந்துகொண்டிருக்கிறது.
இப்போது யானைக்கும் வீரனுக்கும் இடையில் கடும் போர் நடைபெறப் போகிறது. என்ன நடக்குமோ என்று
மனம் திக் திக் என்று அடித்துக்
கொள்கிறது.
சற்று தாமதித்தாலும் யானை
வீரனை அடித்துத் தூக்கி வீசிவிட்டுப்
போய்விடும்.
அந்த வேளையில் சற்றும் தாமதிக்காமல் வீரன் தன் கையிலிருந்த வேலினை யானையின் மீது குறி பார்த்து வீசுகிறான்.
வேல் சரியாக யானையின் மத்தகத்துக்குள் பாய்ந்துவிட்டது.
அந்தோ!
யானை நிலை குலைந்துப் போனது.
இன்னும் சிறிது நேரத்தில் அந்த யானை கீழே வீழ்ந்து இறக்க போகிறது என்று
நினைத்திருந்த வேளையில் யானை
புதிய வலிமையோடு மறுபடியும்
தாக்க எழும்பி நிற்கிறது.
இப்போது யானையை எதிர்த்துத் தாக்க நாயகன் கையில்
வேல் இல்லை.
வெறும் கை கொண்டு யானையோடு போரிட முடியாது.
என்ன செய்வது?
திகைக்கிறான்.
இந்த நேரத்தில் இன்னொரு வேல் இருந்தால் யானையை எளிதில் வீழ்த்தி விடலாம்.
வீரன் கண்கள்
இடதுபுறம் வலதுபுறம் என எல்லா இடங்களிலும் ஏதாவது ஒரு ஆயுதம் கிடைக்குமா என்று
தேடுகின்றன.
.திடீரென்று நாயகன் கண்கள்
ஒரு வேலைப் பார்த்து விடுகின்றன.
இனி எப்படியும் இந்த வேலை வைத்து
யானையை வீழ்த்தி விடலாம்.
வீரன் முகத்தில் அப்படியொரு
மகிழ்ச்சி.
வேல் எங்கிருந்தது வந்தது?
எங்கே கிடந்தது?
தரையிலா?
அதுதான் இல்லை.
தன்னிடமே இன்னொரு வேல் இருக்கும்போது வேறு எங்கு
தேட வேண்டும்?
வீரரிடம் இன்னொரு வேலா?
அது எப்படி சாத்தியம்?
பகைவன் ஒருவன் எறிந்த வேல் அவன் நெஞ்சில் பாய
அந்த வேல் இன்னும் நெஞ்சில் இருந்து
கொண்டுதான் இருக்கிறது .
அது போதுமே...
அதனைப் பிடுங்கி
யானை மீது வீசி யானையைத் தடுத்துவிடலாமே இப்படி நினைத்து
தன் நெஞ்சில் குத்திக் கொண்டிருந்த வேலினைப் பார்த்துதான் அந்த வீரன் சிரிக்கிறான் என்கிறார் வள்ளுவர்.
என்னவொரு அற்புதமாக காட்சி.
கதாநாயகர்கள் தன்னை நோக்கி வரும் அம்பைப்
பிடித்துத் திருப்பி எய்தும் காட்சிகளைப்
பார்த்திருக்கிறோம்.
இந்த வீரன் தன் மார்பில் பாய்ந்த
வேலையே பிடுங்கி எதிரியைத் தாக்கத்
தயாராகிவிட்டான்.
இப்போது அந்த வீரன்
நமக்கு ஓர் உண்மையான கதாநாயகனாகவே காட்சி தருகிறான்.
ஒன்றே முக்கால் அடியில்
ஓர் போர்க்களக் காட்சியை நம்
கண்முன் கொண்டுவந்து நிறுத்தி
இவனல்லவோ உண்மையான வீரன்
இல்லை ....இல்லை... கதாநாயகன் என்று சொல்லி வியக்க வைத்துவிட்டார்.
கண்கள் கலங்க
சொல்லாடாது நிற்க வைத்து விட்டார்.
,
Comments
Post a Comment