தேம்படு பனையின் திரள்....

தேம்படு பனையின் திரள்...


"பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்

சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்"


அதிவீரராம பாண்டியன் என்ற

மன்னன் பாடிய வெற்றிவேற்கையிலிருந்து

எடுக்கப்பட்டவைதான் இந்தப் பாடல்

வரிகள்.


நான் பெரியவனா 

நீ பெரியவனா?

என்ற போட்டியில் எழுவதுதான்

பூசலும் பொறாமையும் போரும். பழத்து

ஒருவருடைய வளர்ச்சியை

இன்னொருவரால் ஏற்றுக்கொள்ள 

முடியாதபோது போர்மேகங்கள்

சூழ்வதுண்டு.


உன்னைப் பற்றி நீ முடிவு

செய்யக்கூடாது. உன் செயல்களை

வைத்து நீ எப்பேர்ப்பட்ட வன்

என்பதை உலகம் முடிவு செய்து கொள்ளும்.


நமது வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும்?


பிறருக்குப் பயன் தருவதாக இருக்க

வேண்டும்.

அப்படி இல்லை என்றால் அந்த

வளர்ச்சி பெரிய வளர்ச்சியாகக்

கருதப்படமாட்டாது.


நாம் பெரியவரா?

சிறியவரா ?என்பதை

நாம் செய்யும் செயல்கள் தான் 

முடிவு செய்யும்.உருவம் அல்ல.

 


இதனை சொல்வதற்கு முன்னால்

அதிவீரராம பாண்டியன் 

அருமையான ஒரு காட்சியை நம்

கண்முன் கொண்டுவந்து நிறுத்தி

எது பெரியது என்பதை நீங்களே

முடிவு செய்து விடுங்கள் என்று

தேர்வை நம் கையிலே விட்டுவிடுகிறார்.


அந்தக் காட்சி என்ன என்று

கேட்கிறீர்களா?


இதோ உங்களுக்காக


"தேம்படு பனையின் திரள் பழத்து

ஒருவிதை

வானுற ஓங்கி வளம்பெற வளரினும்

ஒருவர்க்கு இருக்க நிழலாகாதே

தெள்ளிய ஆவின் சிறுபழத்து

ஒருவிதை

தெள் நீர்க் கயத்துச் சிறுமீன்

சினையினும்

நுண்ணியதே ஆயினும் அண்ணல்

யானை

அணிதேர் புரவி ஆட்பெரும்

படையொடு

மன்னர்க்கு இருக்க நிழலாகும்மே!

           - வெற்றி வேற்கை

           


நன்றாக உருண்டுதிரண்டு பழுத்த

பனம்பழம் சுவையாக இருக்கிறது.

விதையும் மற்ற விதைகளைவிடப்

பெரியதாக இருக்கிறது.

அந்த விதையானது  முளைத்து ,

வளர்ந்து,

ஓங்கி உயர்ந்து  பனைமரமாக

நிற்கிறது. பனைமரம் என்னவோ பார்ப்பதற்கு

உயரமானதாகத்தான் இருக்கும்.

அந்தப் பனைமரத்து நிழலில் எத்தனைபேர்

அமர்ந்து இளைப்பாறிவிட முடியும்?


ஒன்று...?இரண்டு...?மூன்று...?


இல்லை... இல்லை

ஒருவர் கூட அமர்வதற்குப்

போதுமான நிழல் பனைமரத்தால்

கொடுக்க முடியாது.

இதுதான் பனைமரத்து நிழலுக்கான 

தன்மை.


ஆனால் ஆலம் பழத்தின் விதையைப்

பாருங்கள்.எவ்வளவு

சிறியது தெரியுமா?

மீனின் முட்டையை விட சிறிய

அளவில்தான் ஆலமரத்து விதை இருக்கும்.

ஆனால் அந்த விதை முளைத்து ,வளர்ந்து

கிளைகளைப்பரப்பி ,விழுதுவிட்டுப்

பரந்து விரிந்து நிற்கும் .

அந்த ஆலமரத்து நிழலின் கீழே 

யானைப் படை , தேர்ப்படை  ,

குதிரைப்படை ,காலாட்படை

ஆகிய நால்வகைப் படைகளும்

தங்கி இளைப்பாறிச் செல்ல முடியும்.

அந்த அளவிற்கு ஆலமரத்து நிழல்

பரந்து கிடக்கும்.



விதையின் அளவை வைத்து அதிலிருந்து

வளரும் செடியையோ மரத்தையோ 

முடிவு செய்யக்கூடாது.

சிறிய விதைக்குக்குள்ளிருந்தும்

பெரிய மரங்கள் வளரலாம்.

என்கிறார் அதிவீரராம பாண்டியன்

என்ற மன்னர்.


இதைச் சொல்லிவிட்டுத்தான்


"பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்

சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்"

என்கிறார் அதிவீரராம பாண்டியன்.


இதே போன்றதொரு கருத்தை வள்ளுவரும் 

"உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து "

என்ற குறளில் சொல்லியிருப்பார்.


அதாவது பெரிய தேருக்கு ஆணியாகஇருந்து

தாங்கக் கூடிய அச்சு பார்ப்பதற்குச்

சிறியதாகக் தான் இருக்கும்.

ஆனால் அதுதான் அந்தத் தேரையே விழாமல்

தாங்கி நிற்கும்.

.இவ்வளவு பெரிய

தேர் இருக்கும் போது இந்த சிறிய அச்சு எதற்கு

தேவையில்லாமல் வெளியில்

நீட்டிக் கொண்டிருக்கிறது என்று

தூக்கி வீசிவிட்டால்....

என்ன ஆகும் .?


தேர் குடைசாய்ந்து

கீழே விழுந்துவிடும்.

அந்த அச்சாணியைப் போன்று 

உருவத்தில் சிறியவர்கள் உலகில் உண்டு.

அவர்கள் பார்ப்பதற்கு அச்சாணி போல

சிறியவர்களாக இருந்தாலும் அவர்கள் செய்யும்

செயல் பெரியதாக இருக்கும். ஆதலால் உருவத்தைப்

பார்த்து யாரையும் எடைபோட்டு விடாதீர்கள்

என்பார் வள்ளுவர்.



உருவத்தால் சிறியவர் எல்லாம் சின்ன சின்ன

செயல்கள் தான் செய்வார்கள் என்று

எண்ணமுடியாது. 

அதேபோல் உருவத்தால் பெரியவராக 

இருப்பதால் ஒருவர்

பெரிய காரியங்களைச் செய்வார் என்றும்

முடிவு செய்துவிட முடியாது.



உருவத்தை வைத்து யாரையும் குறைவாக

மதிப்பீடு செய்யாதீர்.

அவரால் விளையும் பயன் என்பதைப்

பார்த்த பிறகே ஒருவரைப் பற்றி

மதிப்பீடு செய்க!


அருமையான கருத்து இல்லையா?

"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் "



Comments