வெற்றிக்கணக்கு

வெற்றிக்கணக்கு

வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா
எதிர்நீச்சல்.....
பாடல் வரிகளைக் கேட்டதும் 
 தன்னம்பிக்கை வந்து நம்மை உந்தித்
தள்ளுகிறது.
என்னால் கூடும் என்று எண்ண வைக்கிறது

நாம் பல நேரங்களில் சோர்வாக
இருந்து விடுகிறோம்.
என்னால் முடியாது என்று ஒரு செயலைச்
செய்வதிலிருந்து விலகிக் கொள்கிறோம்.
இதற்கெல்லாம் காரணம் என்ன?
தன்னம்பிக்கை இல்லாமை தான்.


முதலாவது நம்மீது நமக்கு நம்பிக்கை வர வேண்டும்.
நமது திறமைமீது நம்பிக்கை வர வேண்டும்.


நம் மீதே நமக்கு நம்பிக்கை இல்லாதபோது
நாம் முடியாது என்ற முடிவை எடுத்து 
ஒதுங்கி நின்று கொள்கிறோம்.
ஒரு பறவை பறக்கிறது என்றால் 
எதனால் ?
தன் இறக்கைமீது வைத்திருக்கும் நம்பிக்கை.

எனக்கு வலுவான இறக்கை இருக்கின்றது.
என்னால் எவ்வளவு உயரத்திலும் பறக்க முடியும். எவ்வளவு தூரம் வரையும்
சென்று வர முடியும் ?
மலையின் மேலும் பறக்க முடியும்.
கடலின் மேலும் பறக்க முடியும்.
இப்படியொரு நம்பிக்கை இருப்பதால்தான் கீழே விழுந்துவிடுமோ என்று எந்தவொரு அச்சமும் இல்லாமல் பறவைகளால் பறக்க முடிகிறது.

தன்னம்பிக்கை எப்போது வரும்?

தன்னை நம்பும்போதுதான் தன்னம்பிக்கை 
வரும்.


ஒரு மரத்தில் ஒரு தாய் புறா தன் இரண்டு குஞ்சுகளோடு கூடுகட்டி வசித்து வந்தது.
நாட்கள் கடந்தன.
இப்போது 
தாய் புறா தன் இரண்டு குஞ்சுகளுக்கும் பறக்க
சொல்லிக் கொடுத்தது.

ஒரு குஞ்சு நன்றாக பழகி தாய் புறாவோடு
பறந்து சென்று இரை தேட ஆரம்பித்தது.

மற்றொன்று கூட்டைவிட்டு வெளியேறவே
அஞ்சியது.
தாய் புறா எவ்வளவோ சொல்லியும்
நான் கீழே விழுந்துவிடுவேனோ என்று
அச்சமாக இருக்கிறது என்று கூறி இரை தேட
பறந்து செல்ல மறுத்துவிட்டது .

தாய் புறாவிற்கு ஒரே கவலை.
என்ன செய்ய முடியும்?
தானே அலகால் கொத்தி இரையைக் கொண்டு வந்து கொடுக்கும்.

தாய் புறாவுக்கு தன் குஞ்சைத் தனியாக
விட்டுச் செல்வது குறித்து அதிக மனவேதனை ஏற்பட்டது.
ஒருநாள் அப்படியொரு கலக்கத்தோடு
வீடு வந்து சேர காத்திருந்தது ஓர் அதிர்ச்சி.
கூடு பிரித்து கீழே வீசப்பட்டுக் கிடந்தது.

கூட்டிலிருந்த குஞ்சினைக் காணவில்லை.
என்ன ஆனது என் குஞ்சுக்கு?
பதற்றத்தோடு அங்கேயும் இங்கேயும் பறந்து தேடியது.
எந்தப் பக்கமும் புறாக் குஞ்சினைக் காணவில்லை.
கவலையோடு வந்து மரத்தில் வந்து அமர்ந்தது.
சற்று நேரத்தில் கிளைகளில் ஒரு சலசலப்பு.
தாய் புறா பக்கத்தில் புறாக்குஞ்சு பறந்து வந்து அமர்ந்தது.
தாய்ப் புறாவிற்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. என்ன நடக்கிறது ? 


கண்களால் பேசியது.
"பயப்படாதீங்கம்மா...நான் பத்திரமாகத்தான் இருக்கேன்.... பாருங்கள்...என்னால் இப்போது
பறக்க முடியும் "கம்பீரமாக பறந்து காட்டியது குஞ்சு.
இது எப்படி சாத்தியமாயிற்று.

மத்தியான வேளை.
குரங்கு ஒன்று தடதடவென்று மரத்தில் ஏறியது.
புறாக்கூட்டைப் பார்த்ததும் கொண்டாட்டம்.
அப்படியே பிரித்து கீழே வீசியது.
உள்ளே இருந்த குஞ்சு தரையில் போய் விழுந்தது.

புறாக்குஞ்சு வெடவெடத்துப் போனது.
என்ன செய்வது?
சற்று நேரத்தில் தன் உயிர் போய்விடப் போகிறது என்ற பயம் ? எப்படித்
தன்னைக் காப்பாற்றிக் கொள்வது?
நெஞ்சு படபடக்க சுற்றும்முற்றும் பார்த்தது.
கீழே ஒரு ஓநாய் வருவது தெரிந்தது. தாமதிக்கும் ஒவ்வொரு விநாடியும் ஆபத்து
நெருங்கி வருகிறது.
என்ன நினைத்ததோ தெரியவில்லை. விருட்டென்று பறந்து போனது.
சற்று தூரம் பறந்து போய் இன்னொரு மரத்தில் அமர்ந்து தன்னால் இது எப்படி சாத்தியமாயிற்று என்று யோசித்துப் பார்த்தது.

அப்போதுதான் ஓர் உண்மை புரிய ஆரம்பித்தது. இவ்வளவு நாளும் என்னால்
கூடாது ...என்னால் கூடாது என்று தன் மீதே தனக்கு நம்பிக்கை இல்லாததால்தான் பறக்க முடியவில்லை.
ஒரு ஆபத்து என்று வந்ததும் அதிலிருந்து தப்பிக்க இதுதான் வழி என்று 
நம்பிக்கையோடு பறக்க முயற்சித்தது.
பறக்க முடிந்தது.

இப்படித்தான் நம்மில் பலரும் நமக்குள்
இருக்கும் திறமை தெரியாமல் என்னால் முடியாது என்று முடங்கிக் கிடக்கிறோம்.

விழுந்து விடுவேன் என்று ஓடாமல் விழுந்தாலும் எழுந்து விடுவேன் என்று நம்பிக்கையில் ஓட வேண்டும்.
அப்போதுதான் இலக்கை அடைய முடியும்.

அனைவரிடமும் போதிய திறமையும் அறிவும் இருக்கிறது.
ஆனால் அதைப் பயன்படுத்துவதிலும் எடுத்துக்கொள்ளும் முயற்சியில் வேறுபாடு உண்டு.
துணிந்தவன் எந்தக் காரியத்திலும்
வெற்றி பெற்று விடுகிறான்.
என்னால் முடியாது என்று தன் மீதே நம்பிக்கை இழந்து இருப்பவன் பின் தங்கி நிற்கிறான்.

நமக்கு வரும் தடைகள் கூட நமது
திறமையை உணர வைப்பதற்காக 
இருக்கலாம்.

தடைகளை உடைக்கும் திறன் உங்களுக்குள் உண்டு என்ற நம்பிக்கை 
எந்தத் தடைகளையும் தாண்டி முன்னேற
வைக்கும்.

உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.
அவநம்பிக்கை மீது கொள்ளுங்கள் பிணக்கு.
தன்னம்பிக்கையோடு தொடங்கட்டும்
உங்கள் வெற்றிக் கணக்கு.




Comments