எண்ணிச் செய்க கருமம்

எண்ணிச் செய்க கருமம் 

காலம் அறிந்து இதனை நம்மால் செய்யக்கூடுமா என்று அறிந்து ஒரு செயலில் ஈடுபட வேண்டும்.
நற்செயல்கள் செய்தால் அதற்கான
நற்பலன்கள் உண்டு.
அது உடனே கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அதற்கான காலம் ஒன்று உண்டு. ஏற்ற காலம் வரும் .அதுவரை காத்திருங்கள்.
அப்படிக் காத்திருக்க மனமில்லாது போனால் கையில் இருப்பதையும் இழந்து ஏமாற்றமடைய நேரிடும்.
இதனை ஔவை அழகான ஒரு உவமையோடு புரிய வைத்திருக்கிறார்.

பாடல் இதோ உங்களுக்காக...


"எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால் – கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு
 
     வெண்பா : 4


கண் தெரியாத குருடன் ஒருவன் மாங்காய் அடிக்க முயற்சி செய்கிறான்.
என்னால் கூடுமா என்ற சிந்தனை 
அவனிடம் இல்லை.
கால நேரம் தெரியவில்லை.
கோலைக் கையாளும் திறனும் அவனுக்கில்லை.
ஆனாலும் ஓர் ஆசை.
கையில் வைத்திருந்த கோலை வீசுகிறான்.

அவன் எதை நோக்கியோ வீச அது
எங்கேயோ போய் விழுகிறது.
மாங்காய் மட்டும் விழவில்லை.
இப்போது கையில் இருந்த கோலும் 
போயிற்று.
இனி என் செய்வது?
வழித்துணைக்கு வேண்டுமே?எங்கே என் கோல் விழுந்தது?
தட்டுத்தடுமாறுகிறான்.  
மாங்காய் மீது ஆசைப்பட்டு
உள்ளதையும் இழந்து போனான்.

 ஒருவன் கால தெரியாமல் ஒரு செயலைச் செய்தால் அவன் நிலையும்
இப்படித்தான் முடியும். உள்ளதையும் இழந்து
தடுமாற நேரிடும். நாம் செய்த புண்ணியத்தின் பலனாக, ஒரு காரியம் கைகூடும் வேளை வரும் வரை நாம் செய்யும் எந்த முயற்சி
செய்தாலும் அது நமக்குப் பலன் தராது, 
அதனால் காலம் கருதி ,
உரிய காலம் வரும்வரை காத்திருந்து
அதற்கான காலம் வரும்போது அந்தச் செயலைத் தொடங்க வேண்டும்.
அப்போதுதான் நாம் நினைத்த வெற்றியைப்
பெற முடியும் "என்கிறார் ஔவை.

நினைத்த பலனைப் பெற வேண்டுமா?
காத்திருங்கள்.
ஏற்ற வேளை வரும்.
அந்த வேளையில் முயற்சி
செய்தால் மட்டுமே
காரியம் கைகூடும்.
எளிமையாகக் சொல்லிவிட்டு 
கடந்து போய்விட்டார் ஔவை.


நம்மை நல்வழிப்படுத்த ஔவை சொன்ன
நல்வழிப் பாடல் உண்மையாகவே நமக்கு
நல்வழி காட்டும் பாடல் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கவா போகிறது!


Comments