மகாராஷ்டிரா நாள்
மகாராஷ்டிரா நாள்
மே ஒன்று மகாராஷ்டிரா நாள்.
மகாராஷ்டிரம் இந்தியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு அருமையான மாநிலம்.
மகாராஷ்டிரம் என்றதும் அனைவர் கவனத்தையும் ஈர்ப்பது பொருளாதாரத் தலைநகரான மும்பை என்றால் மிகையாகாது.
வந்தோருக்கெல்லாம் வாழ்வளிக்கும் தமிழகம் போல வந்தோர்க்கெல்லாம் வாழ்வளிக்கும் தொழில் வளங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
இந்திய பொருளாதாரத்தை நிர்ணயம் செய்யும் தொழில் முனைவோர்கள் பெருமளவில் நிறைந்த மாநிலம்.
தொழில் வளங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
படித்தவர்களுக்கு மட்டுமல்ல படியாதோரையும் பசியாற வைக்கும் பன்முகத் தன்மை கொண்டது.
மொழியறியா மக்களும் பசியாற்றிக் கொள்ள தொழில்கள் ஏராளம் இங்கே கொட்டிக் கிடக்கின்றன. 1960ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இது பம்பாய் மாகாணமாகவே இருந்து வந்தது.
மாநில மறு சீரமைப்பு குழுவின் பரிந்துரைப்படி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மராட்டி மற்றும் கொங்கணி மொழி பெரும்பான்மையாகப் பேசும் மக்கள் உள்ள பகுதிகள் மகாராஷ்டிரம் என்றும் குஜராத்தி மொழி பெரும்பான்மையாகப் பேசும் மக்கள் உள்ள பகுதி குஜராத் என்றும் பிரிக்கப்பட்டது.
1960ஆம் ஆண்டு மே ஒன்றாம் நாள் முதல் இந்த சட்டம் அமுலுக்கு வந்தது.
அன்று முதல் மே முதல்நாளை மகாராஷ்டிரா நாளாக கொண்டாடி வருகின்றனர்.தொழிலாளர் நாள் கொண்டாடப்படும் அதே நாளில் தொழில்கள் மிகுந்த மாநிலமான மகாராஷ்டிரா நாளும் கொண்டாடப்படுவது அதன் தனிச்சிறப்பு.
மும்பை மற்றும் நாக்பூர் என்று இரட்டைத் தலைநகரங்களைத் தலைமையகங்களாகக் கொண்டு செயல்பட்டு வருவது மகாராஷ்டிராவின் சிறப்பு. பரப்பளவில் இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநிலம் மகாராஷ்டிரா .முதலாவது மராத்தி மொழி பெரும்பான்மையாகக் கொண்ட மும்பை ,தக்காணம் மற்றும் விதர்பா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பகுதி மகாராஷ்டிர மாநிலமாகியது.
பின்னர் நிர்வாக வசதிக்காக அமராவதி,கொங்கண்,அவுரங்கபாத், நாக்பூர்,புனே ,மும்பை மற்றும் நாசிக் என ஏழு மண்டலங்களாக இது பிரிக்கப்பட்டுள்ளது.
88 விழுக்காடு மக்கள் படிப்பறிவு கொண்டவர். குஜராத்தி ,பார்சி ,கன்னடம், இந்தி ,உருது,தமிழ் ,மலையாளம் பேசும் மக்கள் மட்டுமல்லாது நாட்டின் அனைத்து மொழி பேசுவோரின் கூட்டுக் கலவையாகத்தான் மும்பை போன்ற பெருநகரங்கள் திகழ்கின்றன.
இந்தியாவின் அனைத்து மாநிலமக்களின் சங்கமம் என்றே சொல்ல வேண்டும்.அனைத்து மாநில கலாச்சாரமும பண்பாடும் விரவிக் கிடக்கும் மாநிலம்.மாநில மொழி மராத்தியாக இருந்தாலும் மும்பை, தானே மாவட்டங்களில் பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழி இந்தி. பேசும் மொழி இந்தியாக இருந்தாலும் மணிபிரவாள நடை போன்று பன்மொழி கலவையாக இந்திப் பேசப்படுவதைப் பல இடங்களில் நாம் காணலாம்.
மகாராஷ்டிராவை மேற்கிலிருந்து அரபிக் கடல் தாலாட்ட வடமேற்கில் குஜராத் மற்றும் ஒன்றிய பகுதிகளான தாத்ரா நாகர் ஹவேலி அரணாக நிற்க, வடகிழக்கில் மத்திய பிரதேசம் அமைந்திருக்க தெற்கில் கர்நாடகமும் தென்கிழக்கில் தெலுங்கானாவும் தென்மேற்கில் கோவாவும் சூழ்ந்திருக்க மாறுபட்ட நில அமைப்பைக் கொண்ட மாநிலமாக தனித்துவம் கொண்டு திகழ்கிறது.
மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய மாநிலம் மகாராஷ்டிரம் ஆகும்.மொத்த மாவட்டங்கள் எண்ணிக்கை முப்பத்து ஆறு ஆகும்.இங்குபெரும்பான்மையான மக்கள் மராத்தி பேசுவதால் மராத்தி ஆட்சி மொழியாக உள்ளது. அந்நியரையும் அரவணைத்து தொழில் முனைவோராக அலங்கரித்துப் பார்த்த பெருமை மராட்டிய மண்ணுக்கு உண்டு. ஏராளமானோருக்கு வேலை கொடுத்து பதவி நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்த மாநிலம் இது.
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு"
என்று வள்ளுவர் சொல்லித் தந்த பண்பை மறவா மக்கள் நிறைந்திருப்பதால்
தமிழர் திருநாள் போலவே மகாராஷ்டிரா நாளும் அனைத்து தமிழர்களும் கொண்டாடும் நாள் என்பதில் எமக்குப் பெருமிதம் உண்டு.
தாய்த் தமிழ்நாட்டைப் போலவே நம் அனைவராலும் கொண்டாடப்பட வேண்டிய மாநிலம் மகாராஷ்டிரம்.
அரபிக்கடல் தாலாட்ட
அழகு மலை முடி சூட்ட
அஞ்ஞானம் போக்கும்
அருளாளர் தோன்றிட
வந்தார்க்கு வாழ்வளிக்கும்
வளங்கள் அள்ளித் தந்திட
வந்தோர் அனைவரும்
பசியாறி மகிழ்ந்திட
பன்மொழி விரவி
பன்முகத்தன்மை நிலவிட
பாகுபாடு அகன்றிட
பண்பாடு போற்றிட
நல்லாட்சி நடத்திடும்
மராத்திய அன்னை
வாழ்க வாழ்கவே!
கருத்துகள்
கருத்துரையிடுக