உழைப்பாளர் தினம்

உழைப்பாளர் தினம் 


" பத்து விரல்களும் பதறாது உழைத்தால் அஞ்சு விரலால் அஞ்சாது உண்ணலாம்" "என்பார்கள்.ஆனால் உண்மையில் இதுதான் நிலைமையா?நாள் முழுவதும்  கூன் ஒடிய உழைத்தாலும் கூலி என்னவோ அரை வயிற்றுக் கஞ்சிக்குத்தான்.

இதுதான் உழைப்பாளிகளின் நிலைமை.

இப்படி உழைப்பாளி வர்க்கம் நாள் முழுவதும் உழைத்துக் கொண்டிருந்தது.

அவர்களுக்கு விடிவுகாலம் வருவது எப்போது?

 அப்படியொரு கோணத்தில்  சிந்தித்துப்

பார்த்ததின் விளைவு அவர்களுக்கான ஓர் நாள் தோன்ற காரணமாக இருந்தது.

உழைத்து உழைத்து  நைந்துபோன கைகளையும் ஆரம் சூட்டி அழகு பார்க்கும் நாள்தான் இந்த உழைப்பாளர் தினமான

 மே தினம்.

இதன் வரலாற்றை  சற்று திரும்பிப் பார்ப்போமானால் உழைப்பாளர்கள் நாள் கொண்டாட்டத்தின் உண்மை காரணம் புரியும்.பல நாடுகளில் தொழிலாளர்கள் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை கட்டாயமாக வேலை செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர். குறிப்பிட்ட நேர அளவு நிர்ணயிக்கப்படாமல்

அவர்கள் உழைப்பு சுரண்டப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

நாள் முழுவதும் வேலை .

ஆனால் சம்பளம் என்னவோ போதுமானதாக   வழங்கப்படவில்லை.

 இதனால் ஆறு முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து இங்கி்லாந்தில் 'சாசன இயக்கம் 'என்ற அமைப்பு  முதன்முதலாக போராட்டங்களை முன்னெடுத்தது.

அது படிப்படியாக அனைத்து நாடுகளிலும் பரவியது.

 இந்தப் போராட்டம்தான் பின்னாளில்  ரஷ்ய புரட்சிக்கும் வித்திட்டதாக கூறுவர்.

 அமெரிக்கா போன்ற பல நாடுகளில் எட்டுமணி நேர வேலைக்கான போராட்டம்  மேலும் தீவிரமடைந்தது.

அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் 8 மணிநேர வேலை என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டது. இதனால் பல இடங்களில் புரட்சி வெடித்தது.

 துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடைபெற்றன.முன்னணித் தலைவர்கள்  பலர் கைது செய்யப்பட்டனர்.

தொழிலாளர் தலைவர்கள் எட்டு பேர்  தூக்கிலிடப்பட்டனர்.

 இது தொழிலாளர்கள் இடையே பெரும் அதிருப்தியை  ஏற்படுத்தியது. 


   அதன்பின்னர் 1889 ஜூலை சர்வதேச தொழிலாளர் மாநாடு கூடியது .

 இதில் உலக நாடுகளிலிருந்து 400 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 இக்கூட்டத்தில் காரல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேரம் வேலை் என்ற கொள்கையை கையில் எடுக்க முடிவு செய்யப்பட்டது.

 அமெரிக்காவில் தொடங்கிய இது பாரிசி்ல் 1890இல் முழு வடிவம் பெற்றது.

அப்போது        1890 மே ஒன்றாம்நாள் சர்வதேச அளவில் தொழிலாளர் இயக்கங்களை நடத்த வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.


அதன் பின்னர்தான்    அரசு  மே முதல் நாளை தொழிலாளர் நாளாக ஏற்றுக் கொண்டது.

தமிழகத்தில் தோழர் சிங்காரவேலர் தலைமையில் சென்னையில்

முதன்முதலாக தொழிலாளர் தின உறுதி மொழி எடுக்கப்பட்டது.

மே தின நினைவாகவும் உழைப்பாளர்களைப் பெருமைப்படுத்தும் விதத்திலும்  அன்றைய முதல்வர் காமராசர்  உத்தரவின் பேரில் 1959ஆம் ஆண்டு சென்னை மெரீனா கடற்கரையில்  உழைப்பாளர் சிலை எழுப்பப்பட்டது.


மே ஒன்று உழைப்பார்களுக்கான நாள்.

அவர்களுக்கான எட்டுமணி நேர வேலையை உறுதி செய்த நாள்

உழைப்பாளர்களுக்கு உரிய அங்கீகாரம் 

பெற்றுத் தந்த நாள்.

அவர்களைப் பெருமைப்படுத்தும் நாள்.

சிறப்பு செய்த நாள்.

அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்த நாள்.


"உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்."

 இதுதான் மே தின முழக்கம் .


   

 விரல்களை ரணமாக்கி

 வியர்வையை உரமாக்கி

 தோள்களில் பாரம் தூக்கி

 கூலிக்காய் உடல் குறுக்கி

  உழைப்பை ஊருக்காக்கிய 

  உழைக்கும் வர்க்கத்திற்கு 

  உரிய அங்கீகாரம் தரும் ஒரு நாள்

 அதுதான் உழைப்பாளர் திருநாள்!

8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம். இந்த உரிமைக்காக போராடிய தியாகிகளை நினைவுகூரும் நாள் .

"உழைப்பை மதிப்போம்

உழைப்பாளர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிப்போம்" இது உழைப்பாளர்கள் தின

உறுதிமொழியாக இருக்கட்டும்.

உலகை இயக்கும் ஒவ்வொரு உழைக்கும் கைகளுக்கும் மே தின நல்வாழ்த்துகள். 


கருத்துகள்

Popular Posts