நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை


இந்த உலகில் பிறந்தவர் அனைவரும் 

மகிழ்ச்சியாக வாழத்தான் நினைக்கின்றனர்.ஆனால் நாம் நினைத்தபடி வாழ்க்கை அமைந்து விடுகிறதா?

நாம் ஒன்று நினைக்க வண்டி எங்கெங்கோ நம்மை அது போக்கில்  இழுத்துச் செல்கிறது.

சில நேரங்களில் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது.

அந்த மகிழ்ச்சியை முழுவதும் அனுபவிக்கும் 

முன்னர் எதிர்பாராமல் எதிலோ 

முட்டி மோதி

நிலைகுலைய வைக்கிறது.

தடுமாறி நிற்க வைக்கிறது.

தலை கீழாக விழ வைக்கிறது.


இவை எல்லாவற்றிற்கும் காரணம் என்ன?

யாரிடம் எல்லாமோ கேட்டுப் பார்க்கிறோம்.

யாருக்கும் சரியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை.

ஆனால் பெரும்பாலோனோர் சொல்லும் பதில் விதி வலியது.

விதிப்படித்தான் வாழ்க்கை.

இப்படித்தான் வாழ வேண்டும் என்று இறைவன் அன்று விதித்த விதியை இன்று

யாராலும் மாற்ற இயலாது என்பதைத்தான்

பதிலாகத் தந்து நிற்பர்.

“ நல்லவன் வாழ்வான், கெட்டவன் அழிவான்” – என்பதும் “ வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்;” – என்பதும் கேட்பதற்கும் சொல்வதற்கும் எழுதுவதற்கும் நன்றாகத்தான் உள்ளது.

ஆனால் நடைமுறையில் அப்படித்தான் திகழ்கிறதா?

நடப்பவற்றிற்கும் நாம் நினைப்பவற்றிற்கும் 

எத்தனை மாறுபாடு?

எத்தனை வேறுபாடு?

விடிந்தால் இராமனுக்கு முடி சூட்டு விழா! அயோத்தி நகரம் முழுவதும் கொண்டாட்டம் ஆரவாரம். மக்கள் மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தனர்.ஆனால் ஒரே இரவில் தசரதனிடம் கைகேயி பெற்ற வரத்தால் இந்த ஆரவாரம் முற்றிலும் அடங்கிப்போயிற்று. கண்ணீராய்க் கதை நீண்டு போயிற்று.


இராமன் கானகம் செல்ல பரதனுக்கு முடி சூட்ட வேண்டும் என்று முடிவாகிறது. இதனைக் கேட்ட இலட்சுமணன் கொதித்து எழுகின்றான். இலட்சுமணனின் கடும் கோபத்தைக் கண்ட இராமன் இலட்சுமணனை நோக்கிச் சொல்லியதை கண் கேளுங்கள் 

“ தம்பி! ஆறு என்றால் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இது இயற்கை விதி!

ஆனால் அந்த ஆறே வற்றிப் போனால் ஆற்றின் மீதா குறை சொல்ல முடியும் ?

அது போலத்தான் இன்று இங்கு இது நிகழ்ந்தமைக்கு யாருடைய பிழையும் காரணம் இல்லை. விதியின் பிழைதான். இதற்காக நீ கோபம் கொள்ளலாமா? “ என்று இலட்சுமணனின் கோபத்தை ஆற்றுகின்றான் ராமன்.

இதோ கம்பனின் அந்தப் பாடல்!

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை அற்றே

பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தான்

மதியின் பிழையன்று, மகன்பிழையன்று மைந்த

விதியின் பிழைஇதற்கு என்கொல் வெகுண்ட தென்றான்

                      - கம்பராமாயணம் ( அயோத்தியா காண்டம் )


மகனே!;   நீர் உள்ள ஆற்றிலே ஒரு சில காலங்களில்  நீர் இல்லாமல் வற்றிப் போவது அந்த ஆற்றின் குற்றம் அன்று.

அது இயற்கை செய்த குற்றம். அதுபோலவே என்னைக் காடு செல்லும்படி சொன்னது தந்தையின் குற்றம் அன்று.  காடு செல்லும்படி வரம்  பெற்றது நம்மைக் காப்பாற்றி வளர்த்தவளாகிய கைகேயியின்   அறிவினது  குற்றமும் அன்று. அவள் மகனாகிய பரதனது குற்றமும் இதில் எதுவும் இல்லை. இவை எல்லாம் இப்படி நடப்பதற்கு விதியின் பிழை என்றுதான் நான் சொல்லுவேன்.அதாவது விதியால்  நமது ஊழ்வினையால் விளைந்த குற்றத்தால்தான் இவை எல்லாம்  நிகழ்ந்திருக்கிறது.. இங்ஙனம் இதனை ஆராயாது   நீ இந்தச் செயலுக்கு இவர்களைக் காரணமாக்கிக் கோபித்துக் கொள்வது  ஏன்?’ 

ஊழ்வினை செலுத்தத் 

தாயும் தந்தையும்

காரணமாக இருந்து விட்டனர்.

அதைத் தவிர வேறென்ன சொல்வது ?"


இந்தப் பாடலின்மூலம்

எதுஎது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது அது நடந்தே தீரும் 

என்று உலக எதார்த்தத்தை 

கள நிலவரத்தை

விதியின் பிழை என்ற ஒற்றைச்  சொற்றொடரில் அடக்கி நம்மை எல்லாம்  வாயடைத்து நிற்க வைத்துவிட்டார் கம்பர்.

கம்ப நாடன் கவிதையைப் போல் கற்றோர்க்கு இதயங் களியாதே “ – என்று புகழப் படும் கம்பரே

சொல்லிவிட்டார்.

கம்பரே சொல்லிய பிறகு

யாரை நொந்து என்ன பயன்?

எல்லாம் விதியின் பிழை.

வேறென்ன சொல்வது?



 



  

கருத்துகள்

Popular Posts