பட்டுச்சேலை

                                         பட்டுச்சேலை


செல்விக்கு தூக்கம் வரவில்லை.
          விடிந்தால் அண்ணனுக்கு கலியாணம்.
  முதல் முறையாக பட்டு சேலை கட்ட போகிறேன்.
  மனமெல்லாம் பட்டாம்பூச்சியாய் பறக்க ஆரம்பித்தது.
    "பட்டுச்சேலை கட்டினால் நான் எப்படி இருப்பேன்."
    மனதிற்குள் மத்தாப்பு பூக்க இறக்கை கட்டி பறக்க  ஆரம்பித்தாள் செல்வி.
   " நாளைக்கு எல்லோரும் என்னைதான் பார்ப்பார்கள்."
    தனக்குத்தான் திருமணம் நடக்க போவது போன்று கால் தரையில் நிற்கவில்லை.
    பட்டுச்சேலை கட்டிக்கொண்டு தான் நடக்க வேண்டும்.
     திருமணத்திற்கு வருபவர்கள் எல்லாம் என்னையே திரும்பி திரும்பி பார்க்க வேண்டும்.
     ஒருசிலர்  இந்த பட்டுப்புடவை  என்னவிலை என்று கூட கேட்பார்கள் .
     கேட்டால் என்ன சொல்வது?
     அம்மாவிடம் கேட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
      சட்டை கொஞ்சம் தொள தொளவென்று்  சரி இல்லாதது போல் தெரிகிறது.
      ஊசியை எடுத்து தைத்து சரி பண்ணி விடலாம்.
      ஆனால் இப்போது இது முடியாத காரியம்.
      இரவில் துணி தைக்க கூடாது என்று அம்மா சொல்லி இருக்கிறார்கள்.
    "  இரவில் துணி தைத்தால் அது உன் அம்மாவை தை; உன் அப்பாவை தை "என்று சொல்லுமாம்.
      விடிந்ததும் முதல் வேலையாய் எங்காவது ஒதுக்குப்புறமா உட்கார்ந்து தைத்து விட வேண்டியதுதான்.
      "வேறு ஏதாவது பாக்கி இருக்கா "யோசித்துப் பார்த்தாள்.
      கழுத்தில் போடுவதற்கு ஒரு செயின் இருந்தால் நன்றாக இருக்கும்.
     " வெறுங்கழுத்தா நின்னா நல்லா இருக்காது."
      பக்கத்து வீட்டு பாலாமணி ஒரு கவரிங் செயின் வைச்சிருக்கா.
     காலையில் மறக்காம  அத வாங்கி போட்டுக்கணும்.
      மனசுக்குள்ளே எல்லாவற்றையும் போட்டுப் பார்த்து அழகு பார்த்தாள்.
      "சரி ரொம்ப துள்ளாத. தூங்கு "மனம் கிண்டலடித்து.
      இந்த பாழாய்ப்போன மனம் இப்படித்தான்.
      இப்படியும் சொல்லும்.அப்படியும் சொல்லும்.
      நாளைய நிகழ்வின் நாயகியே தான்தான் என்ற நினைப்பு.
      அந்த நினைவிலேயே சற்று கண் அசந்து விட்டாள்.
      திடீரென எழம்பி மணியைப் பார்க்கிறாள்.
      மணி ஆறே முக்கால்.
      கதவைத் திறந்து பார்த்தால் ஒவ்வொருவராக குளிப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.
      அவசர அவசரமாக துணியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
      பிந்தினால் பாத்ரூமுக்கு வரிசை வந்துவிடும்.
      முதலாளாக முந்திக்கொண்டாள்.
      குளித்து முடித்து சட்டையைப் போட்டாள்.
      சட்டை தொள தொளவென்று இருக்கிறது.
     " அட...மறந்தே போய்விட்டேன்.
      அதற்குள் இப்படி மறந்துட்டேனே! இனி என்ன செய்வது ?"
      "சரி இருக்கட்டும்."
      "இரண்டு ஊக்கை எடுத்து குத்தி எப்படியாவது சமாளிக்க வேண்டியதுதான்."
    "இப்போது  வேறு வழி இல்லை."
      பட படவென்று புறப்பட்டு ஆகணும்.
  "    நான்தான் பெண்ணுக்கு கொடுக்கும் முகூர்த்த புடவை வைத்திருக்கும் தாம்பூல தட்டு தூக்கணுமாம்."
      நேற்றே அம்மா சொல்லி வைத்துட்டாங்க.
      தாம்பூலத்தட்டு தூக்குவது என்றால் சும்மாவா?
      மாப்பிள்ளைக்கு அடுத்து அனைவர் கண்களும் தாம்பூலத் தட்டு தூக்குகிற பெண் மீதுதான் இருக்கும்.
      இதுக்குதான் இத்தனை அமர்க்களமா?
     " பின்னே இருக்காதா என்ன?
      முதல் முறையா போட்டாவில் நிக்கணும்.
     " தாம்பளத்தட்டு தூக்குற பொண்ணு யாரு ...யாருன்னு எல்லோரும் கேட்பாவ."
      மாப்பிள்ளையின் தங்கச்சி என்று சொல்லுவாங்க.
      அப்போ நானும் நல்லா இருக்கணுமில்ல" மனசு ரொம்பவும் மினுக்கு காட்டியது.
      "எல்லோரும் புறப்பட்டாச்சா .வண்டி வந்துட்டு." சத்தம் கொடுத்து எல்லோரையும் அவசரப்படுத்தினார் ஒரு பெரியவர்.
      ஒண்ணு இரண்டுபேர் நிற்பதைப் பார்த்து" ஓடுங்க ஓடுங்க டிரைவர் வண்டிய எடுத்துற போறான் "என்றார் அந்த பெரியவர்.
      " என்ன வீட்டுக்காரங்க எல்லோரும் புறப்பட்டாச்சா.
      மாப்பிள்ளை கூட வருகிறவர்கள் எல்லாம் வாங்க "சொன்னார் பெரியம்மா.
      சொன்னதுதான் தாமதம்.முதல் ஆளாய் வண்டி பக்கம் போய் நின்றாள் செல்வி.
      "எல்லோருக்கும் இடம் இருக்காது . இரண்டுபேர் பின்னால் நிற்கும் வண்டியில போய் ஏறுங்க" என்றார் டிரைவர்.
      தயங்கி தயங்கி நின்ற செல்வியைப் பார்த்த டிரைவர் "ஏம்மா நீங்க மாப்பிள்ளைக்கு தங்கச்சியா? "
      "மூத்தவுங்க மட்டும் மாப்பிள்ளைகூட போகட்டும்."
     " நீங்க பின்னால் நிற்கும் வண்டியில ஏறுங்க" என்றார் டிரைவர்.
      மனதிற்குள் சுறுக்கென்று ஏதோ தைப்பது போல இருந்தது.
      எனினும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சற்று நின்று பார்த்தாள் .
       இப்போது பின்னால் நின்ற வண்டியில் ஏறுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
      எப்படியோ பெண் வீட்டில் போய் சேர்ந்தாயிற்று.
      ஆளாளுக்கு கையில் தட்டுகளை எடுத்துக்கொண்டு நடந்தனர்.
      முன்னால் கேமராவில் ஊர்வலத்தைப் படம்பிடித்தபடி சென்று கொண்டிருந்தார் கேமராமேன்.
      பந்தலைப் போய் அடைந்ததும் ஒரே பரபரப்பு.
  ஆளாளுக்கு வந்து மாப்பிள்ளையை எட்டி எட்டிப் பார்த்தனர்.
  அதற்குள்  அக்கா வந்து "வாங்க... தாம்பூல தட்டு வைத்திருக்கிறவா முன்னால் வா "என்று குரல் கொடுத்துக்கொண்டே முன்னால் நடந்தாள்.
  முன்ஏர் எவ்வழியோ அவ்வழி தானே பின் ஏரும் செல்லும்.
  மறு பேச்சு இல்லாம  வரிசையாக அனைவரும் பெண் இருக்கும் அறைக்கு செல்ல செல்விக்கு மட்டும் ஏதோ அரண்மனைக்குள் மகாராணி நுழைவது போன்ற நினைப்பு.
  " முதலாவது சேலை வைத்துருக்கிறவ வா "என்றாள் மறுபடியும் அக்கா.
    " சேலை வைத்திருக்கும் தாம்பளம் முன்னால் வரட்டும் " என்றபடி போட்டோ எடுப்பதற்கு தோதுவாக சரியான இடத்தில் நின்று ஆங்கிள் பார்த்தார் கேமராமேன்.
    கூட்டத்தினரை தள்ளிக் கொண்டு முன்னே வந்து நின்றாள் செல்வி. "கொஞ்சம் தள்ளி வாங்க .ம்..அப்படியே .சரி  சரி...ஓகே...
    கொஞ்சம் சிரிச்ச மாதிரி கேமராவை பாருங்க ....இப்போ தட்டை கொடுங்க "என்றார் கேமராமேன்.
   போட்டாவிற்கு போஸ் கொடுத்தபடியே தாம்பூல தட்டை நீட்டினாள் செல்வி. அவ்வளவுதான்  பட்டுச்சேலை மின்விசிறியில் மாட்டிக்கொள்ள ...
     மறுகணம் ஆ...ஆ வீரிட்டு கத்தினாள்..  செல்வி.
     அனைவரும் என்னாயிற்று ... என்னாயிற்று என்று  செல்வியைப் பார்த்தனர்.
     கையில் வைத்திருந்த தாம்பூலத் தட்டு தடுமாறி  கீழே விழுந்தது.
     கணப் பொழுதில் மின்விசிறியின் பிளக் கழன்றுவிழ அனைவர் கண்களும்  செல்வியையே் பார்த்தன.
    "நல்லகாலம் பொழச்சிட்டா.பிளக் களறல்ல என்றால் என்ன ஆகியிருக்கும்?" என்றார் ஒரு பெரியம்மா.
    செல்விக்கு கால் கை எல்லாம் கிடுகிடுவென நடுங்கியது.
    "ஆக்கம் கெட்டவா ...ஆக்கம் கெட்டவா. வெளியில் போ கலியாண வீட்டில் வந்து அழுது கிட்டு நிற்கிறா பாரு...." என்று அர்ச்சனை செய்தாள் சித்தி.
    அப்படியே கூனிக்குறுகி போனாள் செல்வி.
    பட்டுச்சேலை அவள் மனசைப் போலவே கசங்கிப் போனது.
    "நிற்கிறத பாரு...." எல்லோரும் முறைப்பது கண்களில் தெரிந்தது.
    "ஐயோ...பாவம் "என்று சொல்ல யாரும் இல்லை.
    கேமராமேன் "சும்மா இருங்கம்மா.
    தங்கச்சி நீ கொஞ்சம் பின்னால் போய் நில்லு  ...வேறு யாராவது தாம்பூலத் தட்டை எடுங்க" என்று அனைவர் கவனத்தையும் திசை திருப்பினார்.
    இதுவரை முன்னால் வா ...முன்னால் வா என்று அழைக்கப்பட்டவள் பின்னுக்குத் தள்ளப்பட்டாள்
    கண்ணீரோடு வெளியில் ஓடினாள் செல்வி.
   தனியாக போய் நின்று அழுதாள்..
  இப்போது முதல் முறையாக உடுத்த பட்டுச்சேலையை கண்ணீர் தொட்டுப் பார்த்து பரிதாபப்பட்டது.
   
   
   
   
     
    
           

Comments

Post a Comment

Popular Posts