ஆட்டுக்குட்டியும் அரசு வேலையும்

                   ஆட்டுக்குட்டியும் அரசு வேலையும்



  பள்ளி முடிந்து வீடு வந்து கொண்டிருந்தாள் பாலா.
          தெருமுனையில் பாலா வருவதைக் கண்டதும் துள்ளிக் குதித்து ஓடி வந்து வரவேற்று நின்றது அவள் வளர்க்கும் செல்ல ஆட்டுக்குட்டி.
          முன்னங்கால்களைத் தூக்கி," தூக்கு ...தூக்கு"என்று 
          அடம் பிடித்தது .
         " போ...போ வீட்டுக்குப் போ..."செல்லமாக கடிந்து கொண்டாள் பாலா.
          ஆட்டுக்குட்டி விடுவதாக இல்லை. அடம்பிடிக்கும் குழந்தையைப் போல மறுபடியும்... மறுபடியும் கால்களைப்போட்டு மேலே ஏற ஆரம்பித்தது.
          இந்த ஆட்டுக்குட்டி எப்போதும் இப்படித்தான்.
          அக்கா இப்போதுதானே வாராங்க.
          இடை மறித்து இப்படி கலாட்டா பண்ணலாமா?
          நினைக்கவே நினைக்காது.
          பாலாவும் ஒருநாள் ஆட்டுக்குட்டி தன்னை எதிர் பார்க்க வரவில்லை என்றால்" என்னாச்சோ ...ஏதாச்சோ "என்று பதறிப் போய் விடுவாள்.
          இது இன்று நேற்று நடக்கல.
          கடந்த மூன்று மாதமா இதுதான் நடக்குது.
          கையால் தடவி  கொடுத்தபடி கூடவே கூட்டி வந்தாள் பாலா.
          ஒரு தாயுடன் நடக்கும் பிள்ளையைப் போல கூடவே நடந்து வந்தது ஆட்டுக்குட்டி .
  "வாங்க...வாங்க அக்காவும் தங்கச்சியும் வந்தாச்சா?" என்றார் அம்மா.
        "  சுந்தரிக்குப் பால் கொடுத்தீங்களாம்மா? கரிசனையாக விசாரித்தாள் பாலா.
        சுந்தரி ஆட்டுக்குட்டிக்கு பாலா வைத்திருக்கிற செல்ல பெயர்.
        "  உன் சுந்தரி உன்னை விட்டுவிட்டு என்றைக்கு பால் குடித்தாள்?"
        "   ஏன்...அக்கா வரும் இல்லன்னா பால் குடிக்கமாட்டியா?"சுந்தரியைத் தடவி கொடுத்தபடியே கேட்டாள் பாலா.
      "  ம்கூம்..".என்பது போல தலையை ஆட்டினாள் சுந்தரி.
          "நில்லு...நில்லு ...அக்கா கை கால் கழுவி துணி மாத்திட்டு வந்திடுறேன்.
           ஓகே...பேபி..."என்றபடி பதிலுக்கு காத்திராமலே வீட்டுக்குள் சென்றாள் பாலா.
           ஆட்டுக்குட்டியும் தாய் பேச்சு தட்டாத குழந்தை போல வாசலிலேயே படுத்துக் கொண்டது.
           கையில் பீடிங் பாட்டிலோடு வந்தாள் பாலா.
           ஆட்டுக்குட்டியைத் தூக்கி மடியில் போட்டுக் கொண்டாள்.
           முதுகைத் தடவி கொடுத்தபடியே  பால் பாட்டிலை வாயில் வைத்து குடிக்க வைத்தாள்.
         "  சரி... சரி..உன் தங்கச்சியைக் கொஞ்சினது போதும்.கையைக் கழுவிட்டு வந்து சாப்பிடு" அழைத்தார் அம்மா.
           "கொஞ்சம் பொறுங்கம்மா.கொஞ்ச நேரம்  என் சுந்தரி கிட்ட கொஞ்சிட்டு வாரேன்."
         "  சுந்தரி...சுந்தரி ...சுந்தரி... இருபத்து நான்கு மணி நேரமும் சுந்தரி நினைப்பைத் தவிர வேறு எதுவும் கிடையாதா?"சலித்துக் கொண்டார் அம்மா.
         "  அம்மா கத்துறாங்கடா கண்ணு.
           போயிட்டு வரட்டுமாடா?  நாளைக்கு பார்ப்போம்"ஆட்டுக்குட்டியிடம் விடை பெற்றுக் கொண்டு தூங்க சென்றாள் பாலா.
           தூக்கமே வரவில்லை.
           "விடிந்ததும் சுந்தரியை குளிக்க கூட்டிட்டுப் போகணும்.
           கொஞ்ச தூரம் அப்படியே காலாற சேர்ந்தே நடக்கணும் " ஏதேதோ கற்பனையில் அப்படியே தூங்கிப் போனாள்.
            " ஏய்...எழும்பு...எழும்பு . மணி என்னாச்சி ...இன்னும் தூங்கிக்கொண்டு கிடக்குறா..".அண்ணனின் குரல் கேட்டு அவசர அவசரமாக எழும்பினாள்.
         "  எப்போ வந்த  ?"
         "  ம்...உனக்கு முன்னே நான் வந்துட்டேன்."
           இந்த அண்ணன் எப்பவும் இப்படித்தான்.
           ஏறுக்குமாறாக தான் பேசுவான்.
        "   காலையிலேயே வந்துட்டேன். ஏன் வரக்கூடாதா?"
         "  வரலாம் அப்பா...வரலாம். தாராளமாக வரலாம். உன் வீடு. நீ எப்போ வேண்டுமென்றாலும் வரலாம்."
           "சரி காலையிலேயே பிளேடு போடாத..."
            "அப்புறம்... ஏதாவது விசயமா.? "
            "விடியக்காலையிலேயே விஜயம் பண்ணியிருக்கா?" உரிமையோடு பேசினாள் பாலா.
         "  ஒரு குட் நியூஸ் ... எனக்கு வேலை கிடச்சிருக்கு."
         "  ஓ...இவ்வளவு நேரம் அத சொல்லல.."
         "  நீ எங்க சொல்ல விட்டா?  "
           "அரசாங்க வேலையா?
           "ஆமாம்.."
           "எங்க ...ஆர்டரை காட்டு."
           "ஏன் ஆர்டர் காட்டல என்றால் நம்ப மாட்டியா?"
           "உனக்கெல்லாம் எவன்டா அரசாங்கத்துல வேலை கொடுக்கப் போறான்?"
         "  திமுரு....மண்டையில ரெண்டு போட்டேன்னா?"
           "எந்த ஊருல வேலை?"
         "  தூரத்து ஊருல போட்டுருக்காங்க "அண்ணனின் குரலில் சற்று சோகம் தெரிந்தது.
           "அதற்கு என்ன? இந்த காலத்துல அரசாங்க வேலை கிடைக்கிறதே குதிரை கொம்பா இருக்கு?"
           "ஆனால் ஒருமாதம் சாப்பாட்டுக்குத்தான் என்ன செய்வதென்று தெரியல?"
            "கையில ஒத்த காசு இல்ல."..விரக்தியாக பேசினான் அண்ணன்.
        "   நான் தருகிறேன்" முந்திக் கொண்டு  முந்திரிக்கொட்டைத்தனமாக பேசினாள்  பாலா.
           "உன் கிட்ட  பணம் இருக்கா?   எப்படி தருவ...?"
         "  ஆட்டுக்குட்டிய வித்து தருவேன்."
           சட்டென்று  எதைப் பற்றியுமே யோசிக்காமல் பதிலளித்தாள்.
           அண்ணனுக்கு அரசாங்க வேலை கிடைத்திருக்கிறது என்றதும் தலைகால் தெரியல.
           எங்க அண்ணனுக்கு வேலை கிடைத்திருக்கிறது ...எங்க அண்ணனுக்கு வேலை கிடைத்திருக்கிறது...கத்த வேண்டும் போல் இருந்தது.
           யாரிடமாவது சொல்லாவிட்டால் தலையே வெடித்துவிடும் போல் இருந்தது.
           வெளியில் ஓடினாள்.
           எதிரில் பள்ளியில் கூட படிக்கும் லட்சுமியைக் கண்டதும்,
         "  லட்சுமி   எங்க அண்ணனுக்கு அரசாங்கத்துல வேலை கிடைத்திருக்கிறது "பெருமைப்பட்டுக்கொண்டாள்.
         "  அதுக்கு எனக்கு என்ன? ரொம்பவும் பவுரு காட்டாத "...மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிவிட்டு அவ போக்குல  போனாள் லட்சுமி.
           பாலாவுக்கு முகத்தில் அடித்தது போல் இருந்தது.
           ஓடி வந்த ஆட்டுக்குட்டி முன்னங்கால்களைத் தூக்கி வைத்து தூக்கச் சொன்னது.
           தள்ளி விட்டாள் பாலா.
             மறுபடியும்   மறுபடியும் காலுக்குள்ள வந்து நின்றது ஆட்டுக்குட்டி.
         "  போ..போ.. வீட்டுக்குப் போ "கத்தினாள்.
         "என்னாயிற்று இந்த அக்காவுக்கு? "முகத்தையே பார்த்தது ஆட்டுக்குட்டி.
         "  போன்னா.. போகமாட்டே...".உரத்த குரலில் கத்தினாள்.
           அவளது குரலில் தானே அரசு அதிகாரி ஆகிவிட்ட நினைப்பு வந்து ஒட்டிக் கொண்டது.
           ஆட்டுக்குட்டி  இப்போது அவளுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.
           "அம்மா ஆட்டுக்குட்டியை விற்கணும். தரகரை வரச் சொல்லுங்க".ஆர்டர் போட்டாள்.
           சொல்லுவது நம்ம பாலாவா அம்மாவுக்கு நம்பவே முடியவில்லை.
           இருபத்து நான்கு மணி நேரமும் "ஆட்டுக்குட்டி...ஆட்டுக்குட்டி..|.என்று ஆட்டுக்குட்டி புராணம் பாடும் பாலா இப்படி மாறி போவாள் என்று யாரும் எதிர் பார்க்கல.
           ஆட்டுக்குட்டியை வாங்க தரகரும் வந்தார்.
            நல்ல விலை பேசி தரகர் கையில் ஆட்டுக்குட்டியைப் பிடித்துத் தந்தார் அம்மா.
            பாலாவை விட்டு போக மறுத்து அடம் பிடித்தது ஆட்டுக்குட்டி.
            துணியைப் பிடித்து இழுத்தது.
           " துணி எல்லாம் அழுக்காகுதுல்ல...இழுத்துட்டுப் போங்க" என்றபடியே ஆட்டுக்குட்டியின் கால்களைப் பிடித்து தள்ளி விட்டாள் பாலா.
            "ம்மே...ம்மே..."கத்திப் பார்த்தது ஆட்டுக்குட்டி.
            பாலாவின் காதுகளில் இது எதுவுமே கேட்கவில்லை.
         போக மறுத்து தரையில் படுத்துக் கொண்டது ஆட்டுக்குட்டி.   தரகர் ஆட்டுக்குட்டியை  தரதரவென்று இழுத்தார்.
             ஆட்டுக்குட்டி பாலாவையே  பரிதாபமாக பார்த்தது.
             பாலாவின் மனதில் இப்போது ஆட்டுக்குட்டிக்கு இடமில்லை.
             அண்ணனின் அரசு வேலையைத் தவிர வேறு எந்த நினைப்பும் இல்லாத ஜடமாக  நின்றாள் பாலா.
          
            

Comments

Post a Comment

Popular Posts