ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே...

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே...



கடமையில் தவறக்கூடாது.
உரிமையை விட்டுக் கொடுக்கக்
கூடாது.
இரண்டும் சமமாகப் பேணப்பட
வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்
நமது கடமைகள் என்ன ?
உரிமைகள் யாவை ?என்பதெல்லாம்
தெளிவாக விளக்கப்பட்டிருக்கும்.

இந்தியா விடுதலை அடைந்த
பின்னர்தான் கடமையைப் பற்றி
பேசப்படுள்ளதா....இருக்காதே.
நமது முன்னோர்கள் பேரறிவாளர்களாயிற்றே!
அவர்கள் சொல்லாத கருத்துக்களா...
அறியாத உண்மைகளா...
அப்படியானால் அவர்களிடமும்
கடமையைப் பற்றி சிறிது
கேட்டு அறிந்து கொள்வதில்
தப்பில்லையே....
வாருங்கள்.பொன்முடியார்
என்ற புலவர் யார்யாருக்கு
என்னென்ன கடமை உள்ளது
என்று சொல்கிறார்.
அவரிடமே கேட்டுத் தெரிந்து
கொள்வோம்.

ஒரு மகன் பிறந்ததில் இருந்து
அவனை ஒரு வெற்றிவீரனாக
பார்ப்பதுவரை யார் யாருக்கு
என்னென்ன கடமை இருக்கிறது
என்பதை  பொன்முடியார்
என்ற இந்தப் பெண்பாற்புலவர் 
புறநானூற்றுப்
பாடலில் அழகாகப் பாடியிருப்பார்.

ஒரு பெண்ணுக்கு என்ன கடமை
தெரியுமா ? 
ஆண் மகவைப் பெற்றுத்தர
வேண்டுமாம். ஆண் மகனைப்
பெற்றுத் தந்துவிட்டேன்
என்று பூரித்துப் போய்
கணவனைப் பார்க்கிறாள் மனைவி.
உன் கடமையை நீ சரிவர
செய்து முடித்துவிட்டாய்.
இனி அல்லவா என் கடமை
இருக்கிறது என்று கண்களால்
பதில் சொல்கிறான் கணவன்.

தந்தையும் தன் மகனை நல்லவனாக
வல்லவனாக சமூகத்தின் முன்
நிறுத்த தன்னால் இயன்றவரை
கடமை தவறாது உழைக்கிறார்.
உயர்த்துகிறார்.
இப்போது மகன் வீரனாகிவிட்டான்.

கருவிகளைக் கையாளும் பக்குவம்
வந்துவிட்டது.
அவன்தான் நன்றாக கருவிகளைக்
கையாளுவானே என்று மழுங்கிய
வாளைக் கையில் கொடுத்துவிட
முடியுமா?
நல்ல கூர்மையான வேல் வடித்துக்
கையில் கொடுத்தால்தான்
திறம்பட போரிட்டு வருவான்.
கடனே என்று கூலிக்காக ஆயுதங்களை
உருவாக்கிக் கொடுக்காமல்
கூர்மையான வேல் உருவாக்கித் தரும்
கடமை கொல்லருக்கு உண்டு.

கையில் கூர்மையான வேல்.
இளம் வீரன்.
வெட்டிச் சாய்த்துவிட்டு
வரவேண்டும் என்ற துடிப்பு.
அப்படியே அனுப்பிவிட முடயுமா ? 
அது அறமாகாதே.
போருக்குத்தான் சென்றாலும்
அதிலும் சில கட்டுப்பாடுகள்
இருக்க வேண்டும்.கண்டதும்
எதிரியை வெட்டி சாய்த்துவிட்டு
வரலாமா? கூடாது.
அதிலும் சில நடைமுறைகள்
உண்டு. அறத்தோடு போரிட்டு
வெற்றி பெறுதல்தான் 
நாட்டிற்குப் பெருமை.
மன்னனுக்கும்  அழகு.

போரின் நெறிமுறைகள்,
போரின்போது என்னென்ன செய்ய
வேண்டும் என்னென்ன செய்யக் கூடாது
எப்படி  அறவழியில் நின்று
போர்புரிய வேண்டும் என்று
போரின் மாண்புகளைச்
சொல்லி அனுப்ப வேண்டிய
கடமை மன்னனுக்கு உள்ளது.
போர் அறம் கற்பிக்கும் பொறுப்பு
மன்னனுக்கு மட்டுமே உண்டு.

எல்லாம் கிடைத்துவிட்டது.
போருக்குச் செல்லும் வீரனுக்கு என்று
கடமை எதுவும் இல்லையா? 
என்று கேட்கத் தோன்றும்.

ஏன் இல்லை.?
அவனுக்குத்தானே போரில் பெரும்
பொறுப்பு உள்ளது.
ஆயுதம் மட்டும் கையில்
வைத்திருந்தால் போதாது.
உள்ள வலிமையோடு போரிட்டு
எதிரிகளின் களிறுகளை அழித்து
வெற்றி வாகை சூடி வர
வேண்டும். வெற்றி கிடைக்கும்வரை
வேறு எந்த சிந்தனையும்
இருக்கக் கூடாது.
வெற்றி பெற்று அதனை நாட்டுக்கு
அர்ப்பணிப்பது
ஆண்மகனின் தலையாயக் கடமை.

ஒவ்வொரு வெற்றிக்குப்
பின்னாலும் இத்தனைபேர்
கடமையாற்ற வேண்டுமா?
வெற்றி சாதாரணமாக கிடைக்கக்
கூடியதா என்ன....

இதோ அந்தக் கடமைகளை
வரிசைப்படுத்திச்  சொல்லிச் செல்லும்
புறநாநூற்றுப் பாடல் உங்களுக்காக.

"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல்  தந்தையின் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே"
                                      
                                      
மகனைப் பெற்று தந்தை கையில்
கொடுத்தல் தாயின் கடமை.

அவனை நற்பண்புகள் மிக்க ஒரு
வீரன் ஆக்குவது தந்தையின் கடமை.

அவனுக்குத் தேவையான
 படைக்கருவிகளை
உருவாக்கிக் கொடுத்தல் 
கொல்லரின் கடமை.

அவனுக்கு போரின் அறங்களைக்
கற்பித்து வழியனுப்பி வைத்தல்
மன்னரின் கடமை.

ஒளியுடன் விளங்கும்  வாளைக் கையில்
ஏந்தித் தடுத்தற்கரிய போரைச் செய்து
பகைவரின் யானைகளைக் கொன்று 
வெற்றியுடன் மீண்டு வருவது
ஆண்மகனின் கடமை.

ஒரு வீரன் வெற்றியோடு திரும்பி
வருகிறான் என்றால் அதில் தாய், 
தந்தை, ஆசிரியர், மன்னன் 
அனைவருக்கும் பெரும்பங்கு உண்டு
என்பதை புலவர் இந்தப் பாடலில்
கூறியுள்ளார்.

ஒரு தனிமனிதனுடைய வெற்றி
அவனைச்  சார்ந்துள்ள மனிதர்களின்
உதவி இருந்தால் மட்டுமே
சாத்தியமாகும் என்ற எதார்த்தநிலை
பாடலில் அழகாக சொல்லப்பட்டிருப்பதைக்
காணலாம்.



 



Comments

Popular Posts