நல்ல நண்பர் யார்?

     நல்ல நண்பர் யார் ?

நட்புக்கு இலக்கணம் இவர்கள் தாங்க. 
இருந்தால் இவர்களைப்போல இருக்கணும்
என்று வரிந்துகட்டிக் கொண்டு
பரிந்துரை வழங்கும் அளவுக்கு
உயர்வான நட்பு கொண்டோர் மிகச் சிலரே
இருப்பர்.

அவர்களுள் கர்ணன்- துரியோதனன்
நட்பு அனைவராலும் வியந்து பார்க்கப்பட்ட
நட்பு. பாண்டவரோடு நடந்த 
போரின்போது துரியோதனன்
செய்வது தவறு என்று வில்லினை உடைத்து
தூக்கி வீசிவிட்டு பலர் விலகிச் 
சென்றுவிட்டனர்.
ஆனால் கடைசிவரை துரியோதனனுக்காக
போர்க்களத்தில் நின்று போரிட்டு, தன்
உயிரையும் தியாகம்
செய்தவன் கர்ணன். அதனால்தான் இவர்களது
நட்பு இன்றளவும் பேசப்படுகிறது.
நட்பு துன்ப காலத்தில் கூடவே இருந்து
தோள் கொடுக்கும் .ஏன் உயிரையும்
கொடுக்கும் என்பதற்கு இது நல்லதொரு
எடுத்துக்காட்டு.

நட்பைப் பற்றி பேசாதவர் எவருமிலர்.
நாலு வயது ஆகும்போதே நண்பர்கள்
வைத்துக் கொள்ளும் காலம் இது.
பார்த்ததுமே நட்பு.
ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போது நட்பு.
உயர்நிலைப் பள்ளி நட்பு. மேல்நிலைப் பள்ளி நட்பு.
கல்லூரி நட்பு. அலுவலக நட்பு என்று நட்பு
காலத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கிறது.

ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி
ஒரு சில  நட்பு மட்டும் தொடர்ந்து
நம்மோடு கூடவே வருவதைக் காணலாம்.

நட்பைப் பற்றி எத்தனையோ பாடல்களில்
படித்திருக்கின்றோம்.

நட்பு என்றால் இப்படி இருக்க வேண்டும்.
அப்படி இருக்க வேண்டும் என்று
ஆயிரம் கட்டுரைகள் வாசித்துத் தெரிந்து
வைத்திருப்போம்.
பார்த்துப் பார்த்து சேர்த்துக் கொள்வதல்ல நட்பு.
ஒருவரை ஒருவர் பார்க்காமலும் நட்பு
உருவாதல் உண்டு  என்று
கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார் நட்பை எடுத்துக்காட்டாக கூறிவருகிறோம்.

அதியமான் - ஔவையார் நட்பு
கண்ணன் - குசேலன் நட்பு என்று
வரலாற்றுப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட
உண்மையான நட்புகள் பற்றி நாம்
நிறையவே தெரிந்து வைத்திருக்கிறோம்.

நகுதல் பொருட்டல்ல நட்பு.
விழிநீர் துடைக்க விரல் நீழும் நட்பாக
இருப்பதுதான் உண்மையான
 நட்பு.

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 
இடுக்கண் களைவதாம் நட்பு "
என்று சொல்லியிருக்கிறார் வள்ளுவர்.

அதாவது ஆடை கழறும் போது எந்தவித
கட்டளையும் பிறப்பிக்கப்படாமல் கை தானாக
முன் வந்து ஆடையை நழுவவிடாதபடி
பிடித்துக் கொள்ளும் .அதுபோல எந்தவித
எதிர்பார்ப்பும் இல்லாதபடி நீ எனக்கு
உதவிசெய் என்று நண்பன்
கேட்பதற்கு முன்பாகவே அவன்
துயர் துடைக்க
முன் வந்து நிற்பதுதான் உண்மையான
நட்பு என்பது வள்ளுவர் கருத்து. 

மானம் போகும்முன் வந்து
 கை கொடுக்கணுமுங்க...
அதற்காகத்தான் ஆடையை உவமையாகக்
கூறியிருக்கிறார் வள்ளுவர்.

இதைவிட நட்புக்கு
நல்ல உவமையை யாராலும் 
கூறியிருக்க  முடியுமா? 

ஏன் முடியாது? நான் கூறுகிறேன்
என்று நட்பை வேறு
ஒரு கோணத்தில் பார்த்து இங்கே ஒருவர்
நட்புக்கு நல்லதொரு உவமை கூறியுள்ளார்.

யார் என்று கேட்கிறீங்களா? 
நாலடியாரில்தான் இப்படி ஒரு 
மாறுபட்ட உவமை
முன் வைக்கப்பட்டுள்ளது.

  நாலடியாரில் நட்புக்காக சொல்லப்பட்டுள்ள
 உவமையைப் படித்ததும்
 இப்படிப்பட்டதாகவா நம் நட்பு 
இருக்க வேண்டும்
என்று ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.
 
அப்படி என்ன ஆச்சரியப்படும்படியான
 உவமை சொல்லப்பட்டிருக்கிறது 
என்றுதானே கேட்கிறீர்கள் .
இதோ :


"யானை யனையர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல் வேண்டும் - யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய் "

                               -                நாலடியார்

யானையை ஒத்த இயல்புடையவர் 
நட்பை விலக்கி
நாயை ஒத்த இயல்புடையவரோடு நட்பு
கொள்ளுதல் வேண்டும்.

ஏனெனில் யானை  பலநாள் பழகியிருந்தாலும்
தன்னை வளர்த்தப் பாகனையே கொல்லும்
இயல்பு கொண்டது. 
ஆனால் நாயோ தன்னை வளர்த்தவன்
சினம் கொண்டு எய்த வேல் உடலில்
குத்தி நின்ற வேளையிலும்  உண்மையான
அன்போடு தன் எஜமானையே சுற்றிச்
சுற்றி வரும் பண்பு கொண்டது என்கிறது
நாலடியார்.

ஆதலால் எப்போதும் நாயைப் போன்று
நமது  பிழை பாராட்டாது நம்மைவிட்டு
அகலாது கூடவே இருக்கும்
நபர்களோடு நட்பு கொள்ளுதல் 
வேண்டுமாம்.

யானை எவ்வளவுதான் சீராட்டி பாராட்டி
சோறூட்டி வளர்தாலும் எப்போதாவது
ஒரு முறை குற்றம் கண்டவிடத்து 
இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று
பாகனையே  போட்டுத்
தாக்கிவிட்டு ஒன்று மறியாது போய்க்
கொண்டே இருக்கும் என்பதை நாம்
எத்தனைமுறை பார்த்திருக்கிறோம்.

யானை மாதிரியான பண்பு கொண்ட
நண்பர்களும் இப்படித்தான் இருப்பராம்.
எவ்வளவுநாள் பழகி இருந்தாலும்
ஒரு சிறிய குற்றம் கண்டுபிடித்துவிட்டால்
போதும் . நண்பன் என்றும் பாராது
நாலுபேர் மத்தியில் நம்மை விமர்சிப்பது
அவமானப்படுத்துவது...இனி இவர்கள்
நட்பு வேண்டாம் என்று விலகி ஓடுவது
என்று ஒரு மாய்மாலமான நட்பாகவே
இவர்களுடைய நட்பு இருக்குமாம்.
இத்தகைய யானை குணம் கொண்டவரின்
நட்பு வேண்டவே வேண்டாம்.
அவர்களை விட்டு விலகி 
இருத்தல் நலம்.

நாய் எவ்வளவுதான் துரத்தி துரத்தி
அடித்தாலும் நம் காலைச் 
சுற்றிச்சுற்றி வரும்.
 நாம் ஒரு நேரம் சோறு போடாமல்
இருந்தாலும் பெரிதாக எடுத்துக் கொண்டு
வீட்டைவிட்டு ஓடாது.
இதுதான் நாயின் பண்பு.

நாலுநாள் கஞ்சி ஊற்றி இருந்தால் போதும்.
இனி நீ வேண்டாம் என்று எவ்வளவு
தொலைதூரத்தில் விட்டுவிட்டு வாருங்கள்.
மறுநாளே நம் வாசலில் வந்து நிற்கும். 
இத்தகைய  நன்றி மறவா நற்பண்பு
நாய்க்கு உண்டு.அப்படிப்பட்ட குணம்
கொண்டவரோடு நட்பு கொள்ள 
வேண்டுமாம்.

இதுவரை நாயை என்னவோ என்று
நினைத்திருந்தேன்.
சீ...நாயே என்று எத்தனைமுறை 
துரத்தியடித்திருக்கிறேன் என்று
வருத்தப்படுகிறீர்களா?
போனது போகட்டும்.

இன்றுமுதல் நாய்தான் உங்கள்
உற்ற நண்பன்.

இன்று ஒரே நாளில் நம் இதயத்தில் 
நட்பு பாராட்டி
நல்லதோர் இடத்தைப் பிடித்துக்
கொண்டது நாய்.

இப்போது நாயைப் போன்ற 
நண்பரை எங்கே 
தேடுவது  என்று யோசனையாக 
இருக்கிறதல்லவா!
அப்படி ஒரு நல்ல நட்பு நமக்கும்
கிடைக்காமலா போய்விடும்! 


Comments

  1. நட்பிற்கான நற்பண்பு,அற்புதமான விளக்கம்.மிக அருமை.👌👌🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

    ReplyDelete
  2. மிக அருமையான பதிவு.நட்பிற்கான இலக்கணத்திற்கு மிகச்சிறப்பான விளக்கம்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts