தாயன்பு
தாயன்பு
திருநெல்வேலி ரயில் நிலையத்தில் தன்
இரண்டு பிள்ளைகள் மற்றும் தாய்
பொன்னம்மாளோடு ஆட்டோவில் வந்து
இறங்கினாள் கமலம்.
ஆட்டோவில் இருந்த சாமான்களைக்
கீழே இறக்கி வைத்தார்.
சாமான் எல்லாம் எடுத்துவிட்டோமா?
ஏதாவது கீழே விழுந்து கிடக்கிறதா என்று
ஆட்டோவுக்குள் தலையை விட்டுத்
துழாவிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
"அக்கா நீங்க விடுங்க...நான்
பார்க்கிறேன்....சீக்கிரம் எனக்கு
காசு கொடுங்க...
அடுத்த சவாரி போகணும்"
அவசரப்படுத்தினார் ஆட்டோக்காரர்.
"இருப்பா...வந்த அவசரத்துல
அப்படி அப்படியே அள்ளிப்
போட்டுட்டு வந்தோம்.
எதுவும் விழுந்துகிழுந்து
கிடக்கப்பிடாதுல்ல"
என்றபடியே ஆட்டோக்குள்
இருந்து தலையை வெளியில்
எடுத்தார் கமலம்.
"ஏல ...எல்லா சாமானும் இருக்கா என்று
எண்ணி பார்த்துகிட்டியளா...
இரண்டு சூட்கேசு, இரண்டு அட்டைப்பெட்டி
ஒரு குட்டிச்சாக்கு, இரண்டு சோத்துப் பை
தண்ணி கேனு ஒண்ணு, கைப்பை ஒண்ணு
மொத்தம் ஒன்பது உருப்படி.
நல்லா எண்ணிகிட்டியளா...."என்று
மகன்களைப் பார்த்துக் கேட்டார்.
"எம்மோ அண்ணன் பள்ளிகூடத்துப் பை
ஒண்ணு...அத எண்ணாம
உட்டுபுட்டிய... மொத்தம் பத்து"
என்றான் சின்னவன்.
"ஆமா..ஆமா..அவன் முதுகுலேயே
போட்டுருந்ததால அத மறந்துட்டேன்.
எல்லா சாமானையும் பத்துரமா
பார்த்துகிடுங்க...."
"எக்கோ...உங்க பேச்செல்லாம் பிறகு
வச்சுகிடுங்க...இப்போ வாடகையைத்
தந்து என்னை கட் பண்ணுங்க...
கிராக்கி நிற்கு..."
அவசரங்காட்டினார் ஆட்டோக்காரர்.
"பொறுப்பா...பொறுப்பா....
உன் காசை தரமா எங்க
ஓடிறப் போறேன் "என்றபடி
இடுப்பிலிருந்த சுருக்குப் பையை
எடுத்தவர்,
"தம்பி எவ்வளவு சொன்னாப்பா "
என்றார்.
"இருநூற்றம்பது ரூபாய்.
முதலாவதே பேசிதான
வந்தேன்."
"ஏன் கோபப்படுறா....நான் தரமாட்டேன்
என்றா சொன்னேன்.
ஐம்பது ரூபா சில்லரை இல்ல...
ஏல செல்லத்துரை...
உன் கிட்ட தாத்தா தந்த பணம்
இருக்கு இல்லையாப்பு...
அதைத் தா . நான் வீட்டுக்குப் போனதும்
திருப்பித் தந்துருவேன்."
"நீ தர மாட்டா...போன தடவையும்
இப்படித்தான் போன தடவையும்
வண்டி செலவுக்குத் தான்னு வாங்கிகிட்டு
அதுக்குப்பிறகு
உனக்கு எதுக்குல பணம் என்று
தரமாட்டேன் என்று சொல்லிட்டா...."
மறக்காமல் கடந்த பயண அனுபவத்தைச்
சொல்லி தர மறுத்தான் செல்லத்துரை.
"தம்பி உன்கிட்ட சில்லரை இருக்கா..."
என்று ஆட்டோக்காரர் பக்கம் திரும்பினார்.
"எவ்வளவுக்குச் சில்லரை வேணும்."
"நூறு ரூபாய்க்குத்தான்."
நூறு ரூபா சில்லரைக்குத்தான்
இந்த வாக்குவாதமா....
இங்க கொடுங்க.."
என்றபடி பணத்தை வாங்கிவிட்டு
சில்லரையைத் திருப்பிக் கொடுத்தார்.
ஆட்டோக்காரர் கிளம்பிய பின்னர்
"ஆளுக்கு இரண்டு சாமானைத் தூக்குங்க.
நான் இரண்டு பெட்டியையும்
ஒரு அட்டை பெட்டியையும் வச்சு
இழுத்துட்டு வந்துடறேன்.
வாங்க .. "என்றபடி
சாமான்களைத் தூக்கிவிட்டு
நடந்தார்.
மூத்தவன் தலையில் சாக்கு மூட்டை
ஏறியதும் விடுவிடுவென்று
ரயில் நிலையத்துக்குள்
சென்றான்.
"ஏல..தம்பியையும் கூட்டிட்டுப் போ.
இரண்டாம் நம்பர் பிளாட்பாரம்.
பாத்துப் போ... பாத்துப்போ..."
கத்தினாள் கமலம்.
"கத்தாத..எல்லாரும் பாக்குறாங்க. .எனக்குத்
தெரியும்" என்றபடி அவன் முன்னால் நடக்க
மற்ற மூவரும் பின்னாலேயே
சென்றனர்.
பெட்டியைக் கொண்டு இரண்டாம்
நம்பர் பிளாட்பாரத்தில் வைத்தனர்.
அங்கிருந்த ஒரு வாலிபனிடம் தம்பி
மும்பை வண்டி வர இன்னும் எவ்வளவு
தேரம் இருக்கு? ,என்று விசாரித்தார் கமலம்.
"அது வர இன்னும் அரை...முக்காமணி
மணி நேரமாவது ஆகும்" என்று உத்தேசமாக
சொல்லி வைத்தான் அந்த வாலிபன்.
"முக்கா மணி நேரம் ஆவுமா?
அப்போ...
எம்மோ பிள்ளைகளைப் பத்திரமாக பார்த்துக்க..
நான் ஒரு எட்டு போயி அல்வா
வாங்கிட்டு வந்துடுறேன் .
வரும்போது வண்டியை நிறுத்தச்
சொல்லி வாங்கியிருக்கலாம்.
அவசரத்துல அதை மறந்துட்டேன்."
என்றாள் கமலம்.
"சுருக்கா போயிட்டுவா தாயி...
வண்டி வந்துடப் போவுது." என்றார்
கமலத்தின் அம்மா.
அதற்குள் இளையவன் நானும் வருவேன்
என்று அடம் பிடித்தான்.
"பாட்டிகூட துணைக்கு இருங்க...
பெட்டியை பத்திரமா
பாக்காண்டாமா...உனக்கு என்ன வேணும்
சொல்லு வாங்கி வாறேன். "
"மைசூர் பாகு...பொடி மிக்சர்
இரண்டும் வாங்கி வா...."
"எம்மோ...இங்க சுக்கு கருப்பட்டி
கிடைக்குமா? "
"அதுக்கு உடன்குடிக்குத்தான் போகணும்."
"கேட்டுப் பாருங்க ...கிடைச்சா
அரைக்கிலோ வாங்கி
வாங்க...நான் பொரிக்கடலைகூட
வச்சி நல்லா தின்பேன்"
"வாய் பார்த்துகிட்டு நிற்காத..
சட்டுன்னு போயிட்டு வா."
அவசரப்படுத்தினார் அம்மா.
"என்னைப் பற்றி பயப்படாத...
நான் எப்படியும் வந்துடுவேன்.
புள்ளைகள் பத்திரம் ...
புள்ளைகள் பத்திரம் ...
அதை மட்டும்தான் சொல்லுவேன்.
இளையவன் திருவளத்தான்.
ஒரு இடத்தில நிற்க மாட்டான்.
கிட்டேயே வச்சிகிடுங்க"
என்றபடி அங்கிருந்து வேகவேகமாக
வெளியேறினாள் கமலம்.
கமலம் போனதும் மூவரும்
பெட்டி பக்கத்துல உட்கார்ந்து
கொண்டனர்.
அப்போது வடை காப்பி....வடை காப்பி
என்ற குரல்வர இளையவன்
அவனையே பார்த்தான்.
"வேணுமா.?
தம்பி வடை என்ன
விலை...."
"இரண்டு பத்துரூபா.....
என்றான் வடை விற்றவன்.
"இரண்டு கொடுப்பா" என்றபடி
பத்துரூபாயை எடுத்து
நீட்டினார் பாட்டி.
அப்போது பிளாட்பாரத்தில்
நின்றவர்கள் ஆளாளுக்கு பெட்டியைக்
கையில் தூக்கியபடி அங்குமிங்குமாக
நகர ஆரம்பித்தனர்.
அவர்களைப் பார்த்ததும் பாட்டியின்
மனதிலும் ஒரு பரபரப்பு தொற்றிக்
கொண்டது.
இரண்டாம் நம்பர் பிளாட்பாரத்தில்
வண்டி வருவதற்கான அறிகுறி
தென்பட்டது.
அனைவரும் வண்டி ஏற
தயாராக கையில் பெட்டியைத் தூக்கி
வைத்திருப்பதைப் பார்த்த பாட்டி,
"ஏல...அம்ம எங்க போயி தொலைஞ்சால...
வண்டி வருது போலுக்க...
பாவி மட்ட போனா போன இடத்துல
நின்னுருவா...."
கமலம் இல்லை என்ற
தைரியத்தில் நாலு வார்த்தை
கூடுதலாகப் போட்டுப் பேசினார்
பாட்டி.
"எங்க அம்ம எப்பவும்
இப்படித்தான் பாட்டி.
ஒரு எடுத்துக்குப்
போனோம் வந்தோம் என்று
இருக்க மாட்டாவ. தெரிஞ்சவுகள
பார்த்துட்டா போதும் மணிக்கணக்குல
நின்னு பேசுவாவ. "
அம்மாவைப் பற்றி
தனக்கு உள்ள அபிப்பிராயத்தைப்
பாட்டியிடம் சொல்லி வைத்தான்
செல்லத்துரை.
"உங்க அம்ம அந்த காலத்திலேயே
அசமந்தம்தான். ஒரு வேலையை சுருக்கா
செய்தோம்...முடிச்சோம் என்று
இருக்க மாட்டா..
அதிலேயே நாழிக் கணக்கா
தேச்சிகிட்டு இருப்பா..."
மகளைப் பற்றிய தனது
மனக்குறையைப் பேரன்களிடம்
பகிர்ந்து கொண்டிருந்தார் பாட்டி.
இப்போது வண்டி மெதுவாக
பிளாட்பாரத்தில்
வந்து கொண்டிருந்தது.
கையில் பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு
நின்று கொண்டிருந்தவர்கள் வண்டியை
மடக்கிப் பிடிக்கப் போவதுபோல
முன்னும் பின்னுமாக
ஓடிக் கொண்டிருந்தனர்.
"ஏல...வண்டி வந்துடுச்சி போலுக்க....
உங்க அம்ம எங்க போயி
தொலைஞ்சா." மவளைக் காணாததால்
கையைப் பிசைந்து கொண்டு
நின்றார் பொன்னம்ம பாட்டி.
கண்கள் ஸ்டேசன் முழுவதும்
ஆலா பறந்து மவளைத் தேடின.
அதற்குள் வண்டி வந்து
குறுக்கே நின்று
வழி மறைத்துக் கொண்டு நின்றது.
"பெட்டியை எடுங்க மக்கா...
நாமளும் ஏறி உட்கார்ந்துகிடுவோம்.
அவ வந்துருவா.."அவசரப்படுத்தினார்
பாட்டி.
"பாட்டி ,அம்மா வரட்டும்.
அம்ம வராம நாங்க
ஒத்தைக்கா போவோம்"
இளையவன் வண்டிக்குள்
ஏற மறுத்தான்.
"டிக்கெட்டு அம்ம கிட்டதான்
இருக்கு....உள்ள போனால்
டீட்டியாரு பிடிச்சுக்கிடுவான் "
என்றான் செல்லத்துரை.
"உள்ளே போங்கல..தேரம் சொன்னா
இடம் கிடைக்காது"இழுத்துக் கொண்டு
வலுக்கட்டாயமாக உள்ளே தள்ளினார்
பாட்டி.கூடவே ஒவ்வொரு சாமானாக
இழுத்து வந்து வாசலில் வைக்க
மூத்தவன் ஒன்று ஒன்றாக
இடத்தில் கொண்டு வைத்தான்.
வண்டியில் ஏற்றி இடம் பிடித்துக்
கொடுத்தார் பாட்டி.
சீட்டுக்கு கீழே சாமான்களை எல்லாம்
வைத்தார்.
அங்கே சீட்டில் உட்கார்ந்திருந்த
ஒரு நபர் பாட்டி", உங்க சீட்
நம்பர் என்ன ..".என்று கேட்டார்.
"ஏல...சீட்டு நம்பர் எத்துனல...
கேக்காவ இல்ல...சொல்லுங்க "
"எங்களுக்கு எப்படி தெரியும்.?
அம்ம சுருக்கு பையிலதான்
டிக்கெட்டை வச்சுருந்தாவ..."
"ஐயா....பிள்ளைகளை பத்திரமா
பார்த்துகிடுங்க. நான் அவனுவ
அம்ம வாராளா என்னு பார்க்கிறேன்"
என்றபடி வண்டியிலிருந்து
கீழே இறங்கினார் பொன்னம்ம பாட்டி.
கீழே இறங்கி அங்குமிங்கும்
ஓடினார்.
கமலத்தைக் கண்ணில் காணவில்லை.
"ஐயோ...பச்சப்புள்ளைகள
ஏத்தி வுட்டுட்டனே..".என்று மறுபடியும்
பேரன்மார் இருக்கும் பெட்டிக்கு
பக்கத்தில் ஓடி வந்தார்.
"பாட்டி அம்ம வரலியா...."
என்றபடி வாசலுக்கு ஓடி வந்தான்
இளையவன்.
"பாட்டி நான் ஓடிப் போயி கூட்டி
வாறேன். நீங்க தம்பிகூட
இருந்துகிடுங்க "என்றான் செல்லத்துரை.
இப்போது பெட்டிக்குள் இருந்தவர்களில்
சிலர் மழமழவென்று கீழே
இறங்கிக் கொண்டிருந்தனர்.
இப்போது வண்டி மெதுவாக
நகரத் தொடங்கியது.
பிள்ளைகள் இருவரும் இறங்க
ஓடிவந்தனர்.
"எங்க ஓடுறிய...வண்டிக்குள்ள
விழதுக்கா..."கையைப்பிடித்து
இழுத்து வைத்துக் கொண்டார்
ஒரு வாலிபன்.
"பாட்டி...பாட்டி...".இருவரும் உரக்க
அழுதது பிளாட்பாரம் முழுவதும்
எதிரொலித்தது.
".ஐயோ..என் புள்ள ...என் புள்ள.."
கதறியபடி பின்னாலேயே
ஓடினார் பொன்னம்மா பாட்டி.
பிளாட்பாரத்தில் நின்றவர்கள் ஓடி
வந்து பாட்டியைப் பிடித்து
இழுத்து வைத்துக் கொண்டனர்.
பாட்டிக்கு மூச்சை அடைத்துக்
கொண்டு வந்தது.உரக்க ஒப்பாரி
வைப்பதைத் தவிர வேறு ஒன்றும்
தெரியாமல் போகிற வண்டியையே
பார்த்தார்.
பிளாட்பாரத்தில் நின்ற ஓட்டு
மொத்த சனமும் பாட்டியை நோக்கி
ஓடி வந்தனர்.
"என்ன ....யாது" என்று ஆளாளுக்கு
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து
கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர்..
பாட்டியால் பேச முடியல...
வியர்த்து விறுவிறுத்துக் கிடந்தார்.
நெஞ்சக்குழி மேலும் கீழும்
ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.
"என் மவ....என் மவ..."என்று கையை
மட்டும் நீட்டினார்.
"மவ..வண்டில போறாளா.....அதுக்கா
இப்படி அழுறிய "
"ஒண்ணுமில்ல...மவ ஊருக்குப்
போறான்னு கிழவி ஒப்பாரி வைக்கா"
என்று கூட்டத்தைப் பார்த்து
உதட்டைப் பிதுக்கினாள் ஒரு பெண்.
"இல்ல...மவ போவல "என்று கையசைத்தபடி
அப்படியே தரையில் விழுந்தார்
பொன்னம்மா பாட்டி.
"கொஞ்சம் தண்ணீர் இருந்தா
கொடுங்கப்பா....பெரியம்மாவுக்கு
மயக்கம் வந்துடுச்சி "அவசரப்படுத்தினார்
ஒரு பெரியவர்.
தண்ணீர் பாட்டிலை எடுத்து
"பாட்டி கொஞ்சம்போல தண்ணி
குடிங்க.அதுக்கு பிறகு
என்ன யாதுன்னு சொல்லுங்க"
வலுக்கட்டாயமாக பாட்டிலை வாயில்
வைத்தாள் ஒரு பெண்.
"ஒரு மடக்கு குடித்ததும். என் மவ
வருமுன்னே வண்டி இழுத்துட்டானய்யா..."
என்றார் பாட்டி பரிதாபமாக.
"என்னது மவ வருமுன்ன
வண்டியை இழுத்துட்டானா....
அப்போ வண்டியில
யாரு போறா...."மொத்த கூட்டமும்
ஒட்டு மொத்தமாக குரல் கொடுத்தது
"என் பேரப்புள்ளைக ரெண்டும்
ஒத்தையில போவுதைய்யா....
ஐயோ ...நான் அவ அம்மைக்கு
என்ன பதில் சொல்லுவேன் .
அவ என்ன கொன்னே போட்டுருவாளே!"
சொல்லி அழுதார் பாட்டி.
"இரண்டு சின்ன பிள்ளைகள் வண்டியில
போவுதாம் .போய் ஸ்டேசன்
மாஸ்டர் கிட்ட சொல்லி வண்டியை
நிப்பாட்ட சொல்லுங்க...ஓடுங்க ஓடுங்க
குரல் கொடுத்தார் ஒரு
விவரம் தெரிந்த பெரியவர்.
இப்போது பிளாட்பாரமே பரபரப்பாகிப்
போனது.
இரண்டு மூன்று இளைஞர்கள்
ஸ்டேசன் மாஸ்டர் அறையை நோக்கி
ஓடினர்.
அதற்குள் கமலம் வந்து கூட்டத்திற்குள்
என்ன நடக்கிறது என்று
எட்டிப் பார்த்தாள்.
அங்கே.....தன் அம்மா.
அம்மாவை அந்தக் கோலத்தில்
பார்த்ததும் பதறிப் போனாள்.
"எம்மோ என்னாயிட்டுளா..."என்றபடி
அம்மயைத் தூக்கி மடியில் வைத்து
நெஞ்சைத் தடவிக் கொடுத்தாள்.
"எங்க தாயி போனா...
போனா தாய்மாடாம வரத்தெரியாதா"
"கடையில ஒரே கூட்டம்
கொஞ்சம் தேரமாயிட்டு
இப்போ என்னாயிட்டுன்னு நீ
இப்புடி கெடக்கா....
பிள்ளைகளை எங்க "
என்று பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும்போதே
கண்கள் பிள்ளைகளைத் தேடின.
"பிள்ளைகள் வண்டியில தனியால்லா
போவுது..தாயி...."அம்மா சொல்லி முடிக்கும்
முன்னே,
"என்னது ...பிள்ளைகள் வண்டியில
போவுதா..
அட பாவி மட்ட...நான் வருவதற்கு முன்
உனக்கு அப்படி என்ன அவசரம்? ...
அப்படி என்ன அவசரம்?.... "சொன்னதோடு
நில்லாமல் தாயைக் கீழே தள்ளிவிட்டு
விட்டு எழும்பினாள்.
"ஐயோ. என் பிள்ளைகள் வண்டியில
அனுப்பிட்டாளாமே...ஐயோ நான்
என்ன பண்ணுவேன். இந்த முட்டா
கிறுக்கியை கூட கூட்டி வரும்போதே
நெனைச்சேன்..இப்படி
ஏறுக்குமாறா ஏதாவது செய்வாண்னு...
.."
என்று குனிந்து தாயை
முதுகில் நாலு அடி அடித்தாள்.
" அட....சும்மா இரும்மா... அந்த
பெரியம்மாவ போட்டு
அடிச்சுகிட்டு.
அவங்க என்ன செய்வாங்க.
பிள்ளைகளை
இந்த வயசானவங்க கிட்ட
விட்டுட்டு நீ எங்க போனா...."
"ஒரு எட்டுல போயி அல்வா
வாங்கிட்டு வந்துரலாம்ன்னுதான்
போனேன். அதுக்குமுன்ன
இப்புடி பண்ணி வச்சுருக்காளே"
"உங்களுக்கு எங்க போகணும்? "
கேட்டார் பெரியவர்
"மும்பை போகணும் ."
"அந்த வண்டிதான் இன்னும் வரலிய..
இப்போது போனது சென்னை
வண்டி.அதுலய்யா பிள்ளைகளை
ஏத்தி வுட்டிய "
"இந்த பாவி மட்ட
சென்னைக்கு
என் பிள்ளைகளை
ஏற்றி விட்டுபுட்டாளே...
நீ எல்லாம் எதுக்கு
இருக்கா ....சாவாம்....சாவாம்."
மறுபடியும் அடிக்க
கையை ஓங்க....
குறுக்கே வந்த பெரியவர்,
"அட சும்மா இரும்மா....
உன் பிள்ளைகளுக்கு
ஒண்ணும் ஆகாது.
வா .ஸ்டேசன் மாஸ்டருட்ட
சொல்லி அடுத்த
ஸ்டேசனுல இறக்கிவிடச் சொல்லுவோம்."
என்றார் .
அதற்குள் ஸ்டேசன் மாஸ்டரோடு
அந்த இரண்டு
வாலிபர்களும் பிளாட்பாரத்தில்
வந்து கொண்டிருந்தனர்.
"ஐயா...."ஓடிப் போய்
காலில் விழுந்தார் பாட்டி
"பெரியம்மா என்ன பண்ணுகிறீங்க.
எழும்புங்க...எழும்புங்க
உங்க பேர பிள்ளைகளுக்கு
ஒண்ணும் ஆவாது....அடுத்த ஸ்டேசனுல
பேசியாச்சு. " என்றார்
ஸ்டேசன் மாஸ்டர்.
கமலமும் வந்து அழுது
கொண்டு நிற்க...
"அழாதுங்க...அழாதுங்க...
அடுத்த ஸ்டேசனுல உங்க
பிள்ளைகளை உங்ககூட
ஸ்டேசனில் உள்ள அலுவலர்கள்
ஏற்றி விட்டுடுவாங்க.
பயமில்லாமல் இருங்க"
என்றார் ஸ்டேசன் மாஸ்டர்.
ஆனாலும் கமலத்துக்கு
தாய்மீது இருந்த கோபம்
தீரவில்லை.
"இந்த முட்டாள்கூட என் பிள்ளைகளை
அனுப்பினேனே
என்னை செருப்பால அடிக்கணும்
இப்போ அவங்க அப்பாவுக்கு என்ன
பதில் சொல்வேன்.. "புலம்பிக்
கொண்டே இருந்தார் கமலம்.
பொன்னம்மா பாட்டி குற்ற உணர்வில்
கூனி குறுகி நின்று கொண்டிருந்தார்.
"நிக்கிறத பாரு...கல்லுமாதிரி.
அப்படியே உன்னை கழுத்தைப் பிடித்து
திருகினாலும் என் ஆத்திரம் தீராது.
என் பிள்ளைகளுக்கு மட்டும்
ஒண்ணு ஆகட்டு...மவள...
உன்னை உயிரோடு வைக்க மாட்டேன்."
வார்த்தைகள் விஷமாக
வெளி வந்து கொண்டிருந்தன
"எம்மா எத்தனை முறை
சொன்னாலும் நீ கேட்க
மாட்ட.....நீ முதல்ல அந்த பெரியம்மாவை
திட்டுவதை நிப்பாட்டு...அவங்க
வேண்டும் என்றா அனுப்பிவிட்டாங்க.
அவங்க உன் தாய் தானே....
அவங்களுக்கும் பிள்ளைகளை
அனுப்பிவிட்டுட்டோமே என்ற
பரிதவிப்பு இருக்காது"
கோபப்பட்டார் பெரியவர்.
"பேசுனா பேசிட்டுப் போகட்டும்.
அவ என் புள்ள தானய்யா...
பேசிட்டுப் போறா....பிள்ளைகளை
அனுப்பி உட்டுட்டனே என்ற
வெப்புறாளத்துல பேசுறா...
பேசட்டும் ... விடுங்க "
மகளை விட்டுக் கொடுக்காமல் பேசினார்
பொன்னம்மா பாட்டி.
"பாரு எப்படி பேசுறாவன்னு.....
நீ தாய் .உனக்கு பிள்ளைகள் மேலே
இருக்கிறத மாதிரி அவங்களுக்கும்
அன்பு இல்லாமலா இருக்கும்.
பாட்டிக்குத்தான் பேரப்பிள்ளைகள் மேல
உன்னைவிட ஆயிரம் மடங்கு அன்பு
கூட இருக்கும். பேரன் அன்பு பேரன்பு .
அத நீ மொதல புரிஞ்சுக்க.சும்மா
உனக்கு மட்டும்தான் பாசம் இருக்கும்
என்பது மாதிரி அந்த தாயைப்
போட்டு அந்த பாடு படுத்துறா"
என்று ஒரு தாத்தாவாக பேரன்மீது
இருக்கும் அன்பு எப்படிப்பட்டது
என்பதைச் சொல்லி புரிய வைக்க
முயன்றார் அந்த பெரியவர்.
ஆத்திரத்தில் இருக்கும் கமலத்தின் காதில்
பிள்ளைகளைப் பார்க்கும்வரை எதுவும் ஏறாது.
தாயன்புக்கு முன்னால் பேரன்பு
மௌனியாகிப் போனது.
True love
ReplyDeleteVery nice.
மிகவும் விறுவிறுப்பாக ஆர்வமுடன் படிக்கத் தூண்டியது தாயன்புக் கதை.சூப்பர்.வாழ்த்துகள்.
ReplyDelete