கான முயலெய்த அம்பினில்....

   கான முயலெய்த அம்பினில்....


"கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது."
                       குறள் :  772


கான - காட்டின்கண்
முயல்  - முயல்
எய்த - குறி தப்பாமல் எய்திய
அம்பினில் - அம்பை ஏந்துவதைவிட
யானை - வேழம், ஆனை
பிழைத்த - தவறிய
வேல் - கையால் எறியும் ஈட்டி
ஏந்தல் - தாங்குதல்
இனிது -நன்றானதாகும்


காட்டில் ஓடும் முயலை நோக்கி குறிதப்பாமல்
எய்தும் அம்பை ஏந்துவதைவிட
நின்று கொண்டிருக்கும் யானைமீது எறிந்து
தவறிய வேலை ஏந்துதல் சிறப்புடையதாகும்.

விளக்கம் :

ஒருவன் காட்டில் பதுங்கிப் பதுங்கி ஓடும்
முயலைக் குறி தப்பாமல் எய்திய அம்பை
கையில் ஏந்தி வருகிறான்
மற்றொருவனோ வெட்டவெளியில்
நின்று கொண்டிருக்கும் 
யானையை எய்திய வேலை
கையில் ஏந்தி வருகிறான்.
இவை இரண்டனுள்ளும் எது
சிறப்புடையது எனில் யானையை
எய்திய வேலை ஏந்தி வருதலே 
சிறப்புடையதாகும்.

முயல் கையால் பிடித்துவிடக்கூடிய
அளவுக்கு சிறிய உருவம் கொண்ட
விலங்கு. அது இயல்பாகவே பயந்து
பதுங்கிப் பதுங்கி ஓடும்.
அதனை எய்தும் அம்பை ஏந்துவதால்
அந்த வீரனுக்கு பெரிய
சிறப்பு கிடைத்துவிடப் போவதில்லை.

ஆனால் யானை உருவத்தில் பெரிய
வலிமையான விலங்கு. அதன்
அருகில் செல்லவும் அஞ்சுவர்.
அப்படி இருக்கும்போது யானை மீது
துணிந்து குறி தப்பாமல்  ஒரு வேலினை
எய்தும்போது  அது தவறிவிடுகிறது.
அதனால் பிழை ஒன்றும் இல்லை.
முயற்சி உயர்வானதாகவே இருந்திருக்கிறது
அதனால் யானையை எய்திய
வேலை தன் கையால் ஏந்திச் செல்பவனே
சிறந்த வீரனாகக் கருதப்படுவான்.

எளிய விலங்கினை வீழ்த்தி
வெற்றி காண்பதைவிட
ஆற்றல் மிக்க விலங்கை வீழ்த்த 
முயன்று தோற்றுப் போனாலும்
பரவாயில்லை.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளலாக
இருக்க வேண்டும்.
உயர்வை அடைய முடியாமல்
போனாலும் அவன் உயர்வான
முயற்சிக்காக அவன் பாராட்டப்படுவான்
என்கிறார் வள்ளுவர்.

English couplet: 

Who aims at elephant though dart should fail
has greater praise
Than he who woodland hare with winged arrow stays.

Explanation : 

It is more pleasant to hold the dart that has 
missed an elephant than that which has
hit hare in the forest.

Transliteration: 

"Kaana muyaleydha ampinil yaanai
Pizhaiththavel endhal inidhu "









Comments

Popular Posts