வாடகை வீடு
வாடகை வீடு
ராதா ஒரு முறைக்குப் பலமுறை
யோசித்துப் பார்த்தாள்.
ஏற்பதா....? மறுப்பதா..?
ஏற்றுக்கொண்டால்...அரைவயிறும் கால்வயிறுமென
அன்றாடம் வயிற்றோடு நடத்தும் போராட்டத்துக்கு
ஒரு இடைக்காலத் தீர்வு கிடைக்கும்.
ஆனால்.. அதன்பின்னர் சமுதாயத்தில்
என்நிலை....
எனக்கென்று தனி முத்திரை குத்தி
தனியாக தூக்கி வைத்துவிடுவர்.
ஒரு மாதிரியாக பார்ப்பர்.
அதனை என்னால் சமாளிக்க முடியுமா?
வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும்
இந்த நேரத்தில் யாராவது ஒரு
வழிகாட்டிவிட மாட்டார்களா? என்ற
ஏக்கத்தோடு கண்கள் எதிர்பார்த்து
காத்திருந்தபோது எதேச்சையாக
காப்பகத்தில் சமையல் வேலை
பார்க்கும் மேரி அக்காவைச் சந்திக்க
நேரிட்டது.
உன் குடும்பச் சூழலுக்கு என்னால்
உதவ முடிந்த ஒரே வழி இதுதான் என்று
ஒரு மாதத்திற்கு முன்னர்தான்
ஒரு குழந்தைகள் காப்பகத்தில் ஆயா வேலை
வாங்கிக் கொடுத்தார்கள்.
காப்பகத்தில் ஆயா வேலைக்குச் சேர்ந்த
பின்னர்தான் காப்பகத்துப் பிள்ளைகளுக்கு
மருத்துவம் பார்க்க வரும் நர்ஸ் அக்காவோடும்
பழக்கம் ஏற்பட்டது.
நர்ஸ் அக்கா நன்றாக பழகுவார்கள்.வீட்டுப் பிரச்சினைகளைப் பற்றியும் நாங்கள்
பேசுவோம். அப்போதுதான் நர்ஸ் அக்கா
இப்படி ஒரு ஆஃபர் இருப்பதாக
சொன்னார்.
கேட்டதும் பகீர் என்றுதான் இருந்தது.
ஆனால் அவர்களுக்கு அது வித்தியாசமாகத்
தெரியவில்லை.சாதாரணமாகச் சொன்னார்கள்.
இதனை ஒரு சேவை மனப்பான்மையோடு சிலர்
செய்கின்றனர் என்றார்.
இதில் ஆச்சரியப்படவோ...ஐயப்படவோ என்ன
இருக்கிறது?கூலாகப் பேசினார்.
ஒவ்வொரு மாதமும்
பத்து பதினைந்து கேஸ் எங்க
மருத்துவமனைக்கு வருகிறது.
காலம் மாறிப்போச்சு....நாம் எதை நோக்கியோ
போய்க்கொண்டிருக்கிறோம் . இதற்கெல்லாம்
பயந்தால் எப்படி....பேசிப்பேசி இது ஒன்றும்
பெரிய தப்பில்லையோ என்று நினைக்க
வைத்துவிட்டார் நர்ஸ் அக்கா .
நர்ஸ் அக்கா சொல்வது கேட்பதற்கு
நன்றாகதான் இருக்கிறது.
நடைமுறையில் எத்தனைச் சிக்கல்கள்
வரும் ?
அதற்கும் பெரிய பாதிப்பு எதுவும் வராமல்
நாங்கள் நன்றாக பார்த்துக்
கொள்வோம் என்று உறுதியளித்தார்.
கணவரிடம் சொல்லி அனுமதி வாங்கும்
நிலையில் அவர் இல்லை.
ஊரடங்கு போடுவதற்கு ஒருமாதத்திற்கு
முன்னரே வாதம் வந்து அவரை கட்டிலோடு
முடக்கிப் போட்டுவிட்டது.
ஆனாலும் நர்ஸ் அக்கா சொல்வதை நான் ஏற்றுக்
கொண்டால் ஒன்றுகெடக்க ஒன்று
ஆகிவிட்டால்...
அந்த நினைப்பு வந்ததும் மறுத்துவிட
வேண்டியதுதான் என்று நினைத்தாள்.
அவமானங்களையும் ஏளனப் பார்வைகளையும்
என்னால் எதிர் கொள்ள முடியுமா?
இப்படி எத்தனையோ குழப்பங்கள்
மனசுக்குள் முட்டி மோதிக் கொண்டிருந்தன.
"சில பெண்கள் முதலாவதே வந்து டாக்டரிடம்
சொல்லி வைக்கிறார்கள்.
நீ மாட்டேன் என்றால் வேறொரு பெண்
ஒத்துக்கொள்ள போகிறாள்.
உனக்கு ஒத்தாசையாக இருக்குமே
என்று சொன்னேன் வேண்டாம் என்றால்
விடு.."என்றார் நர்ஸ்.
இவ்வளவு சொல்லும்போது ஒத்துக்கலாமே என்று
மனசுக்குள்ளே ஒரு சின்ன நப்பாசை.
சரி என்பதுபோல மண்டையை மண்டையை
ஆட்டிவிட்டு வந்துவிட்டாள்.
வீட்டிற்கு வந்த பின்னர்தான் மனசு
மறுபடியும் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது.
அப்போது கதவை யாரோ தட்டுவதுபோல
இருந்தது.
யாரது இந்த நேரத்தில் ?
மெதுவாகக் கதவைத் திறந்தாள்.
அங்கே மளிகைக்
கடைக்காரப் பையன் மளிகை சாமான்களோடு
வாசலில் வந்து நின்றான்.
"நான் சாமான் ஆர்டர் பண்ணலியே...."
"நீங்கதானே ராதா அம்மா"
".ஆமாம்.நான்தான் ராதா."
"அப்படியானால் சாமான் உங்க வீட்டுக்குத்தான்.
புடியுங்க" கொண்டுவந்த சாமானைத் தள்ளிவிட்டு
செல்வதிலேயே குறியாக இருந்தான் சிறுவன்.
யாரும் ஆர்டர் பண்ணலியே...
அப்புறம் எப்படி
ஒரு குழப்பத்தோடு நின்றிருந்தாள்.
"மோகன் ஐயா வீட்டு வேலைக்காரன்
வந்து இந்த லிஸ்டைக் கொடுத்து
சாமான்களை உங்கள் வீட்டில்
கொடுத்துவிட சொன்னான் "என்று
விளக்கமளித்து ராதாவின் குழப்பத்திற்கு
ஒரு முடிவு கட்டினான் சிறுவன்.
ராதாவிற்கு கொஞ்சம் நஞ்சம் இருந்த மன
உறுதியும் இந்தப் பொருட்களைப் பார்த்ததும்
கரைந்து கொண்டிருந்தது.
ஆர்லிக்ஸ், பழ வகைகள் , உலர் பழங்கள்
என்று எல்லாம் விலை உயர்ந்த பொருட்களாக
இருந்தன.
பார்த்ததுமே எடுத்துச் சாப்பிட வேண்டும்போல்
பழங்களின் மணம் சுண்டி இழுத்தது.
இவ்வளவு நல்ல பழங்களை வாங்கி
சாப்பிட வேண்டும் என்றால் கடையில்தான்
வாங்கி சாப்பிடணும்.
அதற்கு கையில் ஏது பணம்?
எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி
வைப்பதுபோல இப்போது மோகன் ஐயா அனுப்பிய
சாமானையும் வாங்கி வைத்தாயிற்று.
இனி ஒத்துக் கொள்வதில் என்ன தயக்கம்?
மறுநாள்.... மோகன் ஐயாவை வீட்டிற்கு கூட்டிக்
கொண்டு வந்தார் நர்ஸ்.
மோகனைப் பார்த்ததும் அப்படியே வாயடைத்துப்
போய் நின்றாள்.
அவரது கம்பீரமான தோற்றமும்
பேச்சும் எதுவும் பேச விடாமல் செய்தது..
அந்நியர் முன் என்ன பேசுவது. ?மௌனமாக
நின்றாள் ராதா.
"உனக்கு பூரண சம்மதம் இல்லை என்றால்
வேண்டாம்.
இதில் வற்புறுத்தலுக்கு இடமே இல்லை"
என்று பேச்சைத் தொடங்கினார் மோகன்.
".ஐயா கேட்கிறாங்க இல்ல..
உன் மனசுல இருக்கிறதை
வெளிப்படையாக சொல்லிடு....
ஐயா...இரண்டு மூன்று வருசமாகவே
எங்க மருத்துவமனைக்கு வந்து
கேட்கிறாங்க...
உண்மையா இருக்கிறவங்க இருந்தால்
சொல்லுங்க என்றாங்க...
நான்தான் உன்னை சொல்லி வைத்திருந்தேன்."
உனக்கு பரிந்துரை வழங்கியதே நான்தான்
பெருமிதப்பட்டுக் கொண்டார் நர்ஸ்.
"சரி....
ஒத்துக்கிறேன்....என்றைக்கு வரவேண்டும் என்று
சொல்லுங்க..."
சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு
பேசினாள் ராதா.
"டாக்டரம்மாவிடம் நாள் குறித்து வாங்கிவிட்டு
உனக்கு தகவல் சொல்கிறேன். அதுவரை சாப்பிட்டு
எடுத்து திடகாத்திரமாக இரு...இப்படி நோஞ்சான்
மாதிரி இருக்காதே "என்று உரிமையோடு
பேசினார் நர்ஸ்.
"பத்து மாதமும் நீ காப்பகத்தில்தான்
தங்கியாக வேண்டும். அதுதான்
உனக்குப் பாதுகாப்பு.
விசயமும் வெளியில் தெரியாமல் இருக்கும்."
"அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டுமே..."
"அதற்கும் ஐயா ஒரு ஏற்பாடு
செய்து தருவதாக கூறியிருக்கிறார்..
இல்லையா ஐயா.... " என்று மோகனிடமும்
ராதாவிடமும் மாற்றி மாற்றி
தகவல் பரிமாற்றம் செய்து
கொண்டிருந்தார் நர்ஸ்.
என்ன ஏற்பாடு....?
"உன் கணவருக்கு கேரளாவிலுள்ள
ஒரு மருத்துவசாலையில் தங்கி
மருத்துவம் பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறார்.
ஆயுர் வேத மருத்துவம் என்பதால்
மாதக் கணக்கில் அங்கு தங்க வேண்டியிருக்கும்.
உனக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
வீட்டில் ஏதாவது சொல்லி அனுமதி
வாங்குவது உன் சாமர்த்தியம்" என்று
சொன்னார் நர்ஸ்.
"அது எல்லாம் நான் எப்படி பேசணுமோ
அப்படி பேசி சம்மதம் வாங்கிவிடுவேன்"
என்றாள் ராதா.
"அப்புறம் என்ன? ....எந்த பிரச்சினையும்
இல்லை.எல்லாம் முறைப்படி பக்காவாக தயார்
பண்ணிவிட்டு உன்னை வந்து கூட்டிட்டுப்
போகிறோம் "என்று சொல்லிவிட்டு இருவரும்
அங்கிருந்து சென்றனர்.
இரண்டுநாள் கழித்து இருவரும் வந்து
அழைத்தனர்.
மந்திரித்து விட்ட கோழிபோல அவர்கள்
பின்னாலேயே சென்றாள் ராதா.
கணவர் மருத்துவச் செலவை ஏற்பதால்
கூடுதலாக எவ்வளவு பணம் தருவீங்க என்று
கேட்க வேண்டும் என்று கேட்க
தைரியம் வரவில்லை.
.நர்ஸ் அக்கா எப்படியும் நிறைய
பணம் வாங்கித் தருவாங்க என்ற
பேராசை பிடறியைப் பிடித்து
தள்ளியது.
மருத்துவர் அறைக்குள் சென்றதும்
நிறைய பேப்பர்களில் கையெழுத்து
வாங்கி வைத்துக் கொண்டனர்.
இது எல்லாம் எதுக்கு? என்று கேட்க வேண்டும் என்ற
விவரம்கூட அவளிடம் இல்லை.
வறுமை இருப்பவனிடம் கேள்வி
கேட்கும் மனநிலையும் இல்லாமல்
போய்விடுகிறது.
எல்லா நடைமுறைகளும் முடிந்தன.
இப்போது மருத்துவர் தனியாக அழைத்துச்
சென்று மோகனிடம் வெகு நேரமாகப்
பேசிக்கொண்டிருந்தார்.
ராதாவுக்கும் என்னென்ன பரிசோதனை
எல்லாமோ எடுக்கப்பட்டன.
எல்லாவற்றிற்கும் மோகன் ஐயா மொத்தமாக
மருத்துவமனை நிர்வாகத்திடம் பணம்
கொடுத்துவிட்டார்.
கூடவே இருந்து பார்த்துக்
கொள்ளாத குறைதான்.
ராதாமீது அதிக கரிசனம் எடுத்துக் கொண்டார்.
கிடைக்கக்கூடாத அதிகப்படியான அன்பு
கிடைத்ததுபோல் ராதா உணர்ந்தாள்.
இதெல்லாம் எத்தனை நாளைக்கு?
இந்த சந்திப்பிற்குப் பிறகு மோகன் அடிக்கடி
காப்பகத்திற்கு வர ஆரம்பித்தார்.
சத்தான பொருட்கள் ,பழங்கள் என்று
வகைவகையாக வாங்கி வந்து
தருவார்.
கட்டாந்தரையில் சிறுமலர் பூத்ததுபோல
ஒற்றைப் பூ ஓடி வந்து ஒட்டிக் கொண்டு
மகிழ்ச்சி தந்தது.
மனதின் மகிழ்ச்சி உடம்பிலும் அப்பிக்
கொள்ள பூசி வைத்த செப்புக் குடம்போல
உடல் மினுக்குக் காட்டியது.
இந்த மகிழ்ச்சியும் மினுக்கும் கடைசிவரை
கூடவே இருந்தால்....எப்படி இருக்கும்.?
நிரந்தரமில்லா மகிழ்ச்சி இது.
இந்த நினைப்பு வந்து மகிழ்ச்சிக்கு
இடைக்கால தடை வாங்கி நின்றது.
எல்லாம் நல்லபடியாக முடிந்து
காப்பகத்தில் தங்கினாள் ராதா.
நாளாக ஆக உடலளவில்
கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம்
தெரிய ஆரம்பித்தது.
இடையிடையே உணர்வுப் போராட்டமும்ஊ
ஊசலாடிவிட்டுப் போகும்.
மோகனின் அன்பும் கரிசனமும்
பணக்காரத்தனமும் அவர்பால்
கூடுதலான ஒரு ஈர்ப்பைக் கொடுத்தது.
ஒவ்வொரு நாள் மோகனின்
இந்த அன்பு நிரந்தரமாக
தனக்குக் கிடைக்கக் கூடாதா என
மனம் ஏங்கியதும் உண்டு.
"மறுநொடி...சீ....என்ன இது ?
தப்பு தப்பான எண்ணம் எல்லாம் வந்து இப்படி...
ஒரு போதும் அப்படிப்பட்ட சிந்தனையே வரக்கூடாது"
என்று தனக்குத்தானே தடை போட்டுக்
கொள்வாள்.
மோகன் ஐயா வரும்போதெல்லாம்
ராதாவை கையெடுத்துக் கும்பிடுவார்.
கண்கள் தானாக கண்ணீர் உகுக்கும்.
ஆனந்தக் கண்ணீரா.. இல்லை இப்படி
ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோமே
என்ற வேதனையா ?
ஒன்றும் புரியவில்லை.
ராதாவும் இந்த உறவுக்குள் அப்படியே
தன்னை இணைத்துக் கொண்டாள்.
"எதற்கு கண் கலங்குறீங்க?
எல்லாம் நல்லபடியாக நடக்கும் "என்று
தேறுதல் சொல்லும் அளவுக்கு
தைரியசாலியாக மாறியிருந்தாள்.
இருவருக்குமான உறவு
நாளாஆக இன்னும் நெருக்கமாகியது.
இருவரும் தனிப்பட்ட முறையில் குடும்பத்தைப்
பற்றி பேசும் அளவுக்கு உறவை
வளர்த்துக் கொண்டனர்.
எவ்வளவுதான் சிரித்துப் பேசிவாங்கி
இருந்தாலும் அவர் அந்த ஒரு விசயத்தில் மட்டும்
கவனமாக இருப்பதை அவர் வார்த்தைகளில்
காண முடிந்தது.
எப்படியோ மாதம் ஒன்பதுக்கு மேல்
ஒரு பந்தத்திற்குள் தன்னைப்
பிணைத்தாயிற்று.
இதிலிருந்து எளிதாக வெளிவர
முடியுமா ?
ஒவ்வொரு நிமிடமும் ஒரு தாயின்
உணர்வோடு போராடினாள்.
ஆரம்பத்தில் சாதாரணமாகதான்
நினைத்தாள்.
பின்னர்தான் இது சாதாரண வியாபார
மல்ல என்பதைப் புரிந்து கொண்டாள்.
ஒரு தாய்க்கும் பிள்ளைக்குமான
உணர்வுப் போராட்டத்தில் இருந்து எப்படி
விடுபடப் போகிறாள் ?
பணம் கொடுத்துவிட்டார்கள் என்பதற்காக
கையில் தூக்கிக் கொடுத்துவிட்டு
கடந்து போக இது என்ன
பண்டமாற்றுப் பொருளா ?
ஒரு உணர்வுப் போராட்டத்தோடு
மல்லுக்கட்ட வேண்டிதாக இருந்தது.
திடீரென்று ஒருநாள் வயிறு வலிப்பது
போல் இருக்க நர்ஸ் அக்காவிற்குப்
போன் பண்ணினாள்.
அவரும் பத்தே நிமிடத்தில் ஆம்புலன்சோடு
வந்து நின்றார்.
அவசர அவசரமாக மருத்துவமனைக்கு
அழைத்துச் சென்றார்.
இவர்கள் போய்ச் சேருவதற்கு முன்பாக
மோகனின் மருத்துவமனையில் ஆஜராகியிருந்தார்.
ராதாவை பிரசவ வார்டில் சேர்த்துவிட்டு
கதவை மூடிக் கொண்டார் மருத்துவர்.
மோகனின் முகத்திலும் ஒரு பயமும்
பதற்றமும் அப்பிக் கிடந்ததைப் பார்க்க
முடிந்தது.
அவரால் ஒரு இடத்தில் நிற்க முடியவில்லை.
அங்குமிங்கும் உலாத்திக் கொண்டே இருந்தார்.
உடம்பெல்லாம் வியர்த்துக் கொண்டு வந்தது.
இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாம்
தெரிந்துவிடும். ஏதோ ஒரு பரபரப்பு தொற்றிக்
கொண்டு அலைக்கழிக்க ஆரம்பித்தது.
நர்ஸ் உள்ளேயும் வெளியேயும் ஓடுவதைப்
பார்த்தால்....ஐயையோ ஏதாவது விபரீதம்
நடந்துவிடுமோ? தனக்கு அப்பாவாகும்
வாய்ப்பே கிடைக்காமல் போய்விடுமோ...
பயந்து போனார் மோகன்.
நர்ஸ் வெளியே வரும்போதெல்லாம் ஏதாவது
சொல்லமட்டாரா என்று பின்னாலேயே ஓடுவார்.
நர்ஸ் கையமர்த்திவிட்டு அவர் போக்கில்
சென்றுவிடுவார். நர்சுக்கு இவர்
அவஸ்தை எங்கே புரியப் போகிறது.?
நேரமாக ஆக அவரால் நிற்க முடியவில்லை.
தலையில் கையை வைத்துவிட்டு அப்படியே
உட்கார்ந்துவிட்டார்.
அப்போது கதவை மெதுவாக சாத்தியபடி
திறந்த நர்ஸ்" மோகன் சார் வாங்க..."
என்றார்.
மோகன் உள்ளே நுழைந்ததும் கதவை
பூட்டிக் கொண்டனர்.
அறைக்குள் நுழைந்தவரிடம் "சார்...
உங்களுக்கு ஆண் குழந்தைப்
பிறந்திருக்கிறது...மகிழ்ச்சி தானே "
என்றார் மருத்துவர்.
மோகனுக்கு என்ன பேசவதென்றே
தெரியவில்லை.வாயில் வார்த்தைகள் வர
மறுத்தன.
பதில் சொல்லாமல் கட்டிலில் கிடந்த
ராதாவைப் பார்த்தார்.
கைகள் தானாக கூப்பிக்
கொண்டன. கண்கள் உனக்கு நான்
என்ன கைமாறு செய்யப் போகிறேன்
என்று கண்ணீரால் சொற்கள்
வரைந்து கொண்டிருந்தன.
"சார்....மோகன் சார்...ரிலாக்ஸ் ப்ளீஸ்...
முதலாவது உங்க பையனைப் பாருங்க...."
என்று மோகனின் உணர்வுகளை
மடைமாற்றம் செய்துவிட்டார் மருத்துவர்.
இப்போது மோகனின் பார்வை குழந்தை
பக்கம் திரும்பியது.
அச்சு அசலாக அவரைப் போல் ....
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் மோகன்...
மனசாட்சி பேசியது.
இதுவரை கிடைக்க முடியாதிருந்த ஒன்று
இப்போது கிடைத்திருக்கிறது.
தனக்கு ஒரு வாரிசு கிடைத்திருக்கிறது.
வனாந்தரத்தில் நின்று வானத்தை நோக்கி
கத்தி சொல்ல வேண்டும்போல் இருந்தது.
பிள்ளையில்லாதவன் என்ற பெயர் இன்றோடு
முடிவுக்கு வந்திருக்கிறது.
"ஒரு ஐந்து நிமிடம் வெளியில் போங்க சார்.
மறுபடியும் உங்களைக் கூப்பிடுகிறோம் "
என்றார் மருத்துவர்.
வெளியில் வந்த மோகனின்
நினைவெல்லாம் இப்போது
கட்டிலில் கண்மூடிக் கிடந்த
அந்த ஏழை ராதா மீதே இருந்தது.
ஏதோ ஒரு ஈர்ப்பு.
பரிதாபத்தால் வந்தா இல்லை தன்
குழந்தைக்கு அம்மா என்பதால் ஏற்பட்ட
ஈர்ப்பா? ..ஏதென்று புரிந்துகொள்ள
முடியவில்லை.
மோகனுக்கு கன்னத்தில் ஒரு மச்சம்
இருப்பது போன்ற அதே மச்சம்.
"அசல் என்னை மாதிரியே .
இந்த மச்சம் கூட அப்படியே எனக்கு
இருப்பதுபோன்று...
அப்படியே ஒரு குட்டி மோகன்தான்
மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.
வெளியில் வந்த மருத்துவர் "ஒருவாரம்
கழித்து வாருங்கள். அதுவரை பத்திரமாக
பார்த்துக் கொள்கிறோம். நீங்கள்
வந்து எல்லாம் செட்டில் பண்ணிவிட்டு
எடுத்துப் போகலாம்" என்றார்.
"மறுபடி ஒரு முறை பார்க்கலாமா? "
"ஓ...தாராளமாக...உங்கள் குழந்தை.
எப்போது வேண்டுமானாலும் நீங்கள்
பார்க்கலாம். ஆனால் இப்போது ஒரு நிமிடம்
மட்டும்தான்...."கண்டிப்பாகப் பேசினார்
மருத்துவர்.
ஓடிப்போய் ஒரு எட்டு பார்த்துவிட்டு
ராதாவிடம் ஒரு வார்த்தை தனியாகப்
பேச வேண்டும் என்று நினைத்தார்.
ஆனால் ராதா கண்களைத் திறக்காமல்
அப்படியே கடந்ததால் வெளியே வந்துவிட்டார்.
கண்மூடிக் கிடந்த ராதாவின் மனதிற்குள்
ஓர் போர்களமே நடந்து முடிந்த
கோரக் காட்சி அரங்கேறியிருந்தது.
மனம் ரணகளப்பட்டுக் கிடந்தது.
பத்துமாதம் சுமந்து பெற்ற பிள்ளையை
எப்படி பொசுக்கென்று தூக்கிக் கொடுத்துவிட
யாருக்குதான் மனம் வரும்.?
ஏன் இதற்கு ஒத்துக் கொண்டோம்.?
தன்னையே நொந்து கொண்டாள்.
வயிறு வளர்க்க ஆயிரம் வழி உண்டு.
வயிற்றை விற்று வயற்றுக்குச்
சோறு வாங்கிய கதையாக ஆயிற்று
என் நிலைமை.நொந்து போனாள்.
ஒருவாரம் மருத்துவமனையில் வைத்து
நன்றாக பார்த்துக் கொண்டனர்.
இன்று டிஸ்சார்ஜ் ஆகும் நாள்.
ஆம் ராதா மட்டும்தான் டிஸ்சார்ஜ் ஆகி
காப்பகத்துக்குப் போகப் போகிறாள்.
இந்தக் குழந்தை ?
குழந்தைக்கும் அவளுக்குமான பந்தம்
இன்றோடு முடிவுக்கு வரப் போகிறது.
எப்படி ஒட்டுமில்லை உறவுமில்லை என்று
அறுத்துக்கொண்டு போக முடியும்?
சட்டியா பானையா...மாற்றிக் கொள்ள...
உயிருள்ள ஜீவனை எப்படி கொடுக்க
முடியும் ?
எல்லாவற்றுக்கும் ஒத்துக்கொண்டு தானே
இதுவரை நடந்து கொண்டாய் .
இனி உனக்கும் இந்த
குழந்தைக்கும் உள்ள உறவு அத்துப் போச்சு.
மனசை கல்லாக்கிட்டு தூக்கிக் கொடுத்துவிட்டு
பழையபடி வாழப் பழகிக்
கொள் என்றது மனசாட்சி .
மனசாட்சிக்கு என்ன தெரியும் ?
மாத்திமாத்திப் பேசத்தான் தெரியும்.
அப்படியே சுவர் பக்கமாகத் திரும்பிப்
படுத்துக் கொண்டாள்.
நர்ஸ் வந்து குழந்தையைத் தூக்கினார்.
குழந்தை வீலென்று அழுதது.
படக்கென்று எழும்பி உட்கார்ந்த ராதா
குழந்தையை வாங்க
கைகளை நீட்டினாள்.
"பசியாற்றிவிட்டு உன் கையாலேயே
குழந்தையை ஐயா
கையில் கொடு "என்றார் மருத்துவர்.
சுவர் பக்கமாக திரும்பி அமர்ந்து
பசியாற்றிபடி
குழந்தையின் விரல்களை நீவிக்
கொடுத்துக் கொண்டிருந்தாள் ராதா.
அந்தப் ஸ்பரிசம் அவளைக் கொல்லாமல்
கொன்று கொண்டிருந்தது.
குழந்தையின் பார்வை
என்னைத் தூக்கிக் கொடுக்கப் போறியா
கேள்வி கேட்பதுபோல இருந்தது.
"ராதா...நேரம் ஆகுது." என்று நினைவு படுத்தினார்
நர்ஸ்...
எதுவும் சொல்லாமல் குழந்தையைத் தூக்கி
மோகன் கையில் கொடுத்தாள் ராதா.
குழந்தை தன் கைக்குள் அம்மாவின்
சேலையை கெட்டியாக பிடித்து
வைத்திருந்தது.
அம்மாவிடமிருந்து போக மனமில்லையாக்கும்.
என்று சொல்லியபடி கைவிரல்களிலிருந்து சேலையைப்
பிரித்து எடுக்க உதவினார் நர்ஸ்.
பிஞ்சு கைகளைத் தூக்கி "அம்மாவுக்கு
டாட்டா சொல்லு ...அம்மாவுக்கு டாட்டா
சொல்லு" சிரித்துக் கொண்டே பேசினார் நர்ஸ்.
வெகுநேரம் அங்கு நிற்பதற்குப்
பிடிக்காததுபோல வெடுக்கென்று
குழந்தையை வாங்கிக்
கொண்டு வெளியில் நடந்தார் மோகன்.
ராதா சுவர் பக்கமாக
திரும்பி பார்த்தபடி
கேவிக்கேவி அழ ஆரம்பித்தாள்.
அதற்கு மேலும் அங்கே நிற்க முடியாமல்
வெளியேறினார் நர்ஸ்.
மோகனை அனுப்பி வைத்துவிட்டு
வந்த நர்ஸ்."..ராதா... வலிக்குதா?
போகப் போக எல்லாம் சரியாகிவிடும்.
ஐயா மருத்துவரிடம் உனக்கான பணத்தைக்
கொடுத்திருக்கார்.
போகும்போது வந்து வாங்கிக் கொள் "என்று
சாதாரணமாக தகவல் சொல்வதுபோல
சொல்லிவிட்டுச் சென்றார்.
ராதாவுக்கு இப்போது பணம் பற்றிய
நினைப்பு முற்றுமாக அற்றுப் போயிருந்தது.
என் குழந்தை....என் குழந்தை
என்று பின்னாலேயே ஓட வேண்டும்போல
இருந்தது.
அப்போது மறுபடியும் குழந்தை அழுகிற சத்தம்
கேட்க ....வாசலை நோக்கி ஓடினாள்.
அங்கே வாடகை வீட்டைக் காலி
பண்ணிவிட்டுச் செல்லும் குடித்தனக்காரர்
கூடுதலாக ஒரு பொருளைத் தூக்கிக் கொண்டு
சென்று கொண்டிருப்பது தெரிந்தது.
அழுகையை அடக்கமுடியவில்லை.
கார் மறையும்வரை கேட்டைப் பிடித்துக்கொண்டு
கேவிக் கேவி அழுதாள்.
ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்...
வா பச்சை உடம்புக்காரி...வெகுநேரம்
வெளியில் நிற்கக்கூடாது என்றபடி
கையைப்பிடித்து அழைத்துச் சென்றார்
நர்ஸ்.
கட்டிலில் அமர்ந்து வயிற்றைத் தடவிப்
பார்த்துக் கொண்டாள்.
வாடகைவீடு காலி செய்யப்பட்டிருந்தது.
ஒரு தாயின் பரிதவிப்பு கண்களில் தெரிந்தது.
வாடகைத்தாயாய் இருந்தால் மட்டும்
தாய்மைை உணர்வு அற்றுப் போகுமா என்ன ?
Comments
Post a Comment