துணை
துணை
சொர்ணக்கிளியோடு வீட்டில் வந்து இறங்கியதும்
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம்
ஒருமாதிரியாகப் பார்க்க ஆரம்பித்தனர்.
ஒரு சிலர் கண்டும் காணாததுபோல்
முகத்தைத் திருப்பிக் கொண்டனர்.
அதற்குள் மூன்று மகன்களும்
வீட்டு வாசலில் வந்து நின்றனர்.
அப்பா கட்டிலில் கண்மூடி கிடப்பதைப்
பார்த்ததும் ஒரு நிமிடம் அப்படியே
நின்றனர். கண்கள் வீட்டுக்குள்
யாரையோ தேடியன.
இளையவன் "அப்பா...."மெதுவாக
குரல் கொடுத்துப் பார்த்தான்.
கண் விழித்துப் பார்த்தார் சாமி.
மூத்தவன் முறைத்தபடி முகத்தைத்
திருப்பிக் கொண்டான்.
சற்று நேரம் ஒருவரும் எதுவும் பேசாமல்
நெஞ்சுக்குள் வெப்பத்தை ஏற்றிக்
கொண்டு நின்றனர்.
அதற்குள் சாமி எழும்பி உட்கார்ந்தார்.
"ஏன் நிற்கிறீங்க...உட்காருங்க" என்றார்.
"நாங்க உட்கார வரல...."என்றான் நடுலவன்.
மூவரையும் ஏற இறங்கப் பார்த்தார் சாமி.
"அந்த பொம்பள எங்க..."நேராகவே
விசயத்துக்கு வந்தான் பெரியவன்.
"எந்தப் பொம்பளை.?..."தெரியாததுபோல
கேட்டார் சாமி.
"அதுதான் நீங்க கூட்டிக் கொண்டு
வச்சுருக்கியளே அந்தப் பொம்பளைதான்."
"அவள் எதற்கு? "
"ஊருக்குள்ள தலை காட்ட
முடியல.....வயசான காலத்துல
உங்க அப்பா இன்னொரு பொம்பளையைக்
கூட்டிக் கொண்டு வச்சிருக்காராமே..
என்று கேட்கிற ஆட்களுக்குப் பதில்
சொல்லி முடியல....கேவலமாக இருக்கு..."
"நீ ஏன் பதில் சொல்லுறா....பதில்
சொல்லாத...."
"நான் சீரியசா சொல்லிகிட்டு இருக்கேன்.
நீங்க விளையாட்டு பண்ணிகிட்டு
இருக்கீங்க..ஒரு பொறுப்பு வேணும்.."
"என்ன பொறுப்பு வேணும்."
"நீங்க மூன்று பிள்ளைகளுக்கு
அப்பா என்கிறதை
மறந்துட்டியளா? "
'நான் மறக்கல...நான் மறந்திருந்தா
உங்களை இந்த நிலைமைக்கு
கொண்டு வந்திருக்க மாட்டேன்."
"..இப்போ நீங்க இந்த
பொம்பளையைக் கூட்டிக்கொண்டு
வைத்திருப்பதற்கு என்ன அர்த்தம்? "
"அவள் எனக்குத் துணையா என்கூட
இருப்பாள் என்று அர்த்தம்...போதுமா
இன்னும் விளக்கம் வேணுமா..."
"எவ்வளவு கூலா பதில் சொல்றீங்க...
நாளைபின்ன நாங்க ஊருல தலைகாட்ட
வேண்டாமா....? ஊரு சிரிக்கும்."
"சிரிக்கட்டும்....."
"நீங்க இனி தனியா இருக்க வேண்டாம்.
என்கூட வந்து இருங்க..."
"ம்..அப்புறம்."
"அப்புறம் வேற என்ன வேணும்? ."
"வேணும்.... நிறைய வேணும்."
"பணம் வேணுமா? ..."
"பணம் வேண்டாம் தம்பி..
கூடமாட ஒத்தாசை பண்ண.....
குடிச்சியளா வாங்கினீயளா என்று கேட்க...
விழுந்து கிடந்தா என்ன ஏது
என்று கேட்க....துணைக்கு
ஒரு ஆள் வேண்டும்."
"இந்த வயசுல போயி இப்படி...உங்கள்கிட்ட
என்ன பேச என்றே தெரியல..."
"அதெப்படி பேச தெரியும்?
அப்பா என்ற நினைப்பு நெஞ்சுக்குள்ள
இருந்தால் அல்லவா பேச முடியும்.
ஒரு நாளாவது அப்பா எப்படி
இருக்கிறீய...கஞ்சிகிஞ்சி குடிச்சியளா....
வாங்கினீங்களா என்று ஒரு வார்த்தை
கேட்டிருப்பியளா...பெருசா
கேள்வி கேட்க வந்துட்டானுவ..."
"நாங்க உங்களுக்குப் பெருசு இல்ல...
அவள்தான் பெருசு...."
"யாரு பெருசு என்கிறது இங்க பேச்சு
இல்ல...யாரு யாருக்குத் துணை என்பதுதான்
பேச்சு..."
"அப்போ நாங்க உங்களுக்குத் துணையா
இல்லைங்கிறீங்களா?
"அதை நான் என் வாயால் சொல்லணுமாக்கும் .
சொர்ணக்கிளி என்கூடதான்
இருப்பாள்....இதில் எந்த
மாற்று கருத்தும் இல்லை" என்று
சொல்லிவிட்டு கண்களை மூடி
அமர்ந்திருந்தார் சாமி.
இனி பேசி பிரயோஜனம் இல்லை என்று
மகன்கள் முணுமுணுத்தபடியே
அங்கிருந்து வெளியேறினர்.
மகன்கள் போனதும் வீட்டுக்குள்ளிருந்து
மெதுவாக எட்டிப்பார்த்தாள் சொர்ணக்கிளி.
"வா...நீயும் எதுவும் சொல்லணுமா?"
"இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்...
நீங்கதான் பிடிவாதமா கூட்டிட்டு வந்துட்டீங்க."
"உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லியே..."
"இப்போ உங்க பிள்ளைகள் வருத்தப்படுது
இல்லியா..."
"வருத்தப்படட்டும்....நீ உன் பாட்டுக்கு
இரு . இரண்டு நாள் கத்துவானுங்க...
அதற்கு பிறகு இந்தப்பக்கம் எட்டியே
பார்க்க மாட்டானுங்க....நம்ம பையன்களைப்
பற்றி நமக்குத் தெரியாதா ?"
அந்த நிகழ்ச்சி மட்டும் அன்று
நிகழ்ந்திராவிட்டால்.....
நினைத்துப் பார்க்கவே நெஞ்சு
வெடித்துவிடும் போல இருக்கிறது.
"கொஞ்சம்போல காபி இருந்தா கொண்டா...
தலைவலிக்கிற மாதிரி இருக்கு..."
சொர்ணக்கிளி உள்ளே சென்றதும்
கட்டிலில் கண்களை மூடிப்படுத்திருந்தார்.
கண்களை மூடவிடாமல் என்னென்ன
காட்சிகளோ வந்து குமைத்துக் கொண்டிருந்தது.
அன்று மட்டும் அது நிகழ்ந்திராவிட்டால்...
மனைவியோடு மோட்டார் சைக்கிளில் போகும்போது...
இப்போ நினைத்தாலும் ஈரக்குலை எல்லாம்
நடுங்குது.
எமனாக ஒரு நாய்
குறுக்கே வந்துவிட ...நாயை அடித்துவிடக்கூடாது
என்று வண்டியை இடதுபக்கம் திருப்பினார் சாமி.
அவ்வளவுதான்...வண்டியில் இருந்த தங்கராணி
வலது பக்கமாக சரிந்து விழ....
அவளுக்கென்றே எமனாக வந்த லாரி
சக்கரத்தில் மாட்டி...எல்லாம் ஒரு நிமிடத்தில்
சாமியின் கண்முன்னே...முடிந்து போனது.
அப்படியே உடைந்து போனார்.
மூன்று பிள்ளைகளைக் கையில் கொடுத்துவிட்டு
பாக்கியாட்டி அவள் பாட்டுக்கு
கண்களை மூடிக் கொண்டாள்.
என்ன செய்வது ? யாது செய்வது...?
எதுவும் புரியாமல் அவர் பட்டபாடு....
கடவுளுக்குகூட கண் இல்லையா...
என்று எத்தனைநாள் புலம்பியிருப்பார்.
ஒரு மாசம் ஆனதும் "அம்மா...நீங்களும்
என்கூட வந்து இந்தப் பிள்ளைகளைப்
பார்த்துகிட்டு மும்பையில் வந்து
இருங்க "என்று கேட்டுப் பார்த்தார்.
"நான் அங்க வந்துட்டா அப்பா கஞ்சிக்கு
அலைஞ்சு போவாவ "என்று அம்மா
வர மறுத்துவிட்டார்.
ஒரு கலியாணத்தை கட்டி கையோட
ஒருத்தியைக் கூட்டிட்டுப் போ ....
உனக்கும் துணையாக இருக்கும்.
பிள்ளைகளுக்கும் பாதுகாப்பாக
இருக்கும் "
என்றார் அம்மா.
"கடைசிவரைக் கூட வாரேன் என்ற என்
தங்கராணியே ...என்னை இடையில்
விட்டுட்டுப் போயிட்டா...இனி எனக்கு
என்ன கலியாணம்...."என்று
ஒரேயடியாக மறுமணம் செய்ய
மறுத்துவிட்டார் சாமி.
மூணு பிள்ளைகளையும் தூக்கி வந்து
அதுகளை படிக்க வைத்து...ஆளாக்கி...
அப்பப்பா அது வரை அவர் பட்ட கஷ்டம்
என்னென்ன....
மூவருக்கும் திருமணமும் முடித்து
வைத்துவிட்டார்.
திருமணத்திற்குப் பிறகு மூவரும்
தனியாக வீடு பார்த்து போய்விட்டனர்.
யாராவது ஒரு மகனாவது கூட வைத்துப்
பார்த்துக் கொள்வான் என்று எதிர் பார்த்தார்.
மூவரும் தானுண்டு தன் குடும்பம்
உண்டு என்று
இந்தப் பக்கம் வந்து எட்டிப்
பார்ப்பதே இல்லை.
அப்போதுதான் ஊரில் ஒரு பத்து மரக்கா
விதப்பாடு வயல் கிடந்தது. அதை விற்று
பணத்தை வங்கியில் போட்டால்
மாதாமாசம் சாப்பாட்டுச் செலவுக்கு
ஆகுமே என்று ஊருக்குச் சென்றார்.
போன இடத்தில்தான் இந்தச்
சொர்ணக்கிளியோடு
பழக்கம் ஏற்பட்டது.
ஒருநாள் டவுணுக்குச் சென்றவர் எதேச்சையாக
அம்மா உணவகத்தில் போய் சாப்பிடச்
சென்றார். சாப்பாட்டைக் கையில்
வாங்கிவிட்டு எதிர்த்தாப்பில உள்ள
கடை வாசலில் அமர்ந்திருந்தார்.
அப்போது நாற்பது நாற்பத்தைந்து
வயது வயது மதிக்கத்தக்க ஒருபெண்
வேகவேகமாக உணவகத்திற்குள்
சோறு வாங்குவதற்காக நுழைந்தாள்.
மிச்சம் மீதியை அள்ளி வைத்துவிட்டு
ஊழியர்கள் புறப்பட தயாராக
நின்று கொண்டிருந்தனர்.
"நேரமாயிற்று...இனி சோறு கிடையாது.
நாளை வாம்மா..".துரத்தினார் ஒரு ஊழியர்.
"வருவதற்கு கொஞ்சம் தேரம் ஆயிற்று...
கொஞ்சம்போல சட்டி பத்தல் கிடந்தாலும்
போதும்... இன்றைய பாட்டுக்கு
ஒப்பேத்திக்குவேன்..."கெஞ்சினாள் அந்தப்பெண்.
"பாத்திரம் எல்லாம் கழுவி கமத்தியாச்சி...
போம்மா...போ...கதவை மூடணும் "
துரத்தியடிப்பதிலேயே குறியாக இருந்தார்
ஊழியர்.
வாட்டத்தோடு திரும்பினாள் அந்தப் பெண்.
இதைப்பார்த்த சாமி கையில் வைத்திருந்த
சோற்றுப் பொட்டலத்தை எடுத்து
அவளிடம் நீட்டினார்.
"வேண்டாம்..".ஒற்றை வார்த்தையில்
சொல்லிவிட்டு நடந்தாள்.
" பரவாயில்லை...வாங்கிக்கோங்க..."
வலுக்கட்டாயமாக திணிக்க முயன்றார் சாமி.
" எனக்கு தந்துட்டா நீங்க என்னத்தைச்
சாப்பிடுவீங்க..."என்றாள்.
"நான் கடையில் ஏதாவது வாங்கி
சாப்பிட்டுக் கொள்வேன்...பிடிங்க "
கையில் திணித்துவிட்டார்.
பொட்டலத்தை வாங்கிய அந்தப் பெண்
மெல்லிய புன்னகையைத் தந்துவிட்டு
அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.
வீட்டுக்கு வந்த பின்னரும் அந்தப் பெண்
சோற்றுக்காக கெஞ்சி
நின்றது கண்முன் வந்து போனது.
"ஐயோ...பாவம்..."மனம் அன்று முழுவதும்
அவளைச் சுற்றி சுற்றியே வந்தது.
மறுநாள் அம்மா உணவகத்திற்கு
அவளைப் பார்ப்பதற்காகவே சென்றார்.
அவர் வருவதற்கு முன்பாகவே
முதல் ஆளாக வரிசையில்
நின்று கொண்டிருந்தாள் அந்தப்பெண்.
சோறு வாங்கியதும் ஓர் ஓரத்தில்
உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
சாமியும் சோற்றை வாங்கிவிட்டு
அவள் அருகில்
போய் அமர்ந்து கொண்டார்.
"எங்கிருந்து வாறீங்க..."
பேச்சைத் தொடங்கினார் சாமி.
"பக்கத்து ஊருதான்.....ஒன்றரை மைல்
இருக்கும். "
"சாப்பாடு வாங்கவா இவ்வளவு தூரம்
வருவீங்க "
"என்ன செய்றது?
வயிற்றுக்குத்தானே இந்த ஓட்டம்."
"உங்களுக்கு இந்த ஊரா?"
"இல்லை. எனக்கும் பக்கத்து ஊருதான்."
"உங்களை இதுக்குமுன் இங்கே
பார்த்ததே இல்லையே"
"எப்படி பார்த்திருக்க முடியும்?
நான் மும்பையில் இருக்கிறேன்."
"அடி ஆத்தி...மும்பைக்காரங்களா
இங்க வந்து சாப்பிட வந்திருக்கீங்க..."
"ஏன் சாப்பிடக் கூடாதா?"
"சாப்பிடலாம்...சாப்பிடலாம்..."
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது
விக்கல் வர.... தண்ணீருக்காக அங்குமிங்கும்
பார்த்தாள் சொர்ணக்கிளி.
தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினார் சாமி.
இரண்டு மடக்கு குடித்துவிட்டு திருப்பித்
தந்தாள்.
"உங்களை யாரோ தேடுறாங்க "
சொல்லிவிட்டு சிரித்தார் சாமி.
"என்னை யாரு தேட போறாங்க... "
பேச்சில் ஒரு விரக்தி இருந்தது.
"ஏன்...அப்பா அம்மா இல்லையா? "
"போய் சேர்ந்துட்டாவ..."
"புள்ளைகள் ஏதாவது...."
"இல்லை ..."
"அப்போ கணவர்...."
கணவர் என்ற பேச்சு வந்ததும்
சொர்ணக்கிளியின்
கண்களில் நீர் பெருகியது....
உதடுகள் துடித்தன....ஒப்பாரி
வைக்க வேண்டும்போல் இருந்தது.
அந்நியர் முன் எப்படி அழுவது.?
அடக்கிப் பார்த்தாள்....வார்த்தையை
அடக்க முடிந்தது. கண்ணீர் அடங்க
மறுத்து கன்னங்களில் விழுந்து
சேலையை நனைத்துக் கொண்டிருந்தன.
ஏதாவது தப்பா கேட்டுட்டோமோ?
."மன்னிச்சுகிடுங்க....இவ்வளவு வருத்தப்படுவீங்க
என்று நினைக்கல...."
"நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்கிறீங்க....
மன்னிப்பு கேட்க வேண்டியவுங்களே
கேட்கல...."
"நீங்க யாரை சொல்றீங்க.."
"அந்த மனுஷனைத்தான்.
அந்த மனுஷனாலதானே
ஒரு வயித்துச் சோத்துக்கு ஊரு ஊரா
ஓடிகிட்டு இருக்கேன்."
"ஏன்? ...குடிகாரரா? "
"குடிகாரனா இருந்தாகூட சரியா வச்சு
குடித்தனம் நடத்திடுவானே....."
"அப்புறம் உங்களுக்குள்ள என்ன பிரச்சினை..."
"புள்ளைதான் பிரச்சினை..."
"புள்ளை இல்லை என்றீங்க...
இப்போது புள்ளைதான் பிரச்சினை என்கிறீங்க..
எனக்கு ஒன்றுமே புரியலியே....."
"எனக்குப் புள்ளை இல்லையாம்..
உட்டுட்டு போயி இன்னொருத்தியைக்
கட்டிகிட்டாரு.
அண்ணே !நீங்களே சொல்லுங்க.
புள்ளை இல்லாததற்கு நானா
காரணம்? "
தன் அண்ணனிடம் தன் ஆதங்கத்தைச்
சொல்லி அழுவதுபோல சொல்லிச் சொல்லி
அழுதாள் சொர்ணக்கிளி.
"இப்படியும் மனுஷங்களா? "
."புள்ளை இல்லை என்று...
ஊரைக்கூட்டி பத்திரத்துல கையெழுத்தும்
வாங்கி ஒதுக்கிபுட்டாவ...
ஐஞ்சு பைசா தரலண்ணே.... ஐந்து சென்ட்
வீட்டு நிலம் மட்டும் தந்தாவ...
அதுல ஒரு குடிசை மடக்கிகிட்டு
கிடக்கேண்ணே..."
சொர்ணக்கிளி சொல்லச் சொல்ல
சாமிக்கு ஆத்திரம் ஆத்திரமாக இருந்தது.
"கூட பிறந்த அண்ணன் தம்பி
எல்லாம் இல்லையா ? "
"எல்லாரும் இருக்காவ...அவரவருக்கு
வந்ததை அவரவர்தான் பார்த்துகிடணும்
என்று சொல்லி ஒதுங்கிட்டாவ....
கொண்டவன்
சரியில்லன்னா யாரு மதிப்பாண்ணே...
அதுதான் நானும் யாரு வாசலுக்கும்
போயி நிற்க மாட்டேன்...."
பேச்சுக்குப் பேச்சு அண்ணே !அண்ணே!
என்று பேசிய பேச்சும்
தன்னை அந்நியனாக எண்ணாமல்
தன்னிடம் நீதி கேட்ட அந்த வெள்ளந்தியான
குணமும் சாமியை அப்படி அவளுக்குள்
கட்டிப் போட்டுவிட்டது.
"மதிய உணவு போக மற்ற நேரம்
சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க..."
"பக்கத்து வீட்டு அக்கா ஆட்டுக்கு
ஒடங்காய் பறிச்சு போடுவேன்.
ஒரு ஐம்பது ரூபாய் தருவாங்க...
பிள்ளையா ...குட்டியா..
நம்ம தேடி வைக்கிறதுக்கு..."
சொர்ணக்கிளியின் கதையைக்
கேட்க கேட்க
அவள் மீது உள்ள ஈர்ப்பு
கூடிக் கொண்டே வந்தது.
இனி சொர்ணக்கிளியைப் பார்க்காமல்
பேசாமல் இருக்கமுடியாது என்ற நிலைமைக்கு
வந்தபோதுதான்
மெதுவாக கேட்டுப் பார்த்தார்.
"வேண்டாம் அண்ணே...
இதெல்லாம் ஒத்து வராது..."என்று மறுத்தாள்.
"ஏன் ஒத்து வராது எத்தனை நாளைக்கு தான்
நீயும் ஒரு துணை இல்லாமல் இருப்பா...."
"ஊரு நாலுவிதமா பேசும் அண்ணே ....வேண்டாம்."
"ஊரு பேசிட்டுப் போகட்டும்..உனக்குச் சம்மதம்
என்றால் சொல்லு ...நான் கூட்டிட்டுப் போறேன்."
"உங்க பிள்ளைகள் ஏத்துப்பாங்களா? "
"யாரு ஏத்தா என்ன ஏக்காட்டு என்ன ?
"எண்ணே ...நாளைபின்ன என்னால
உங்களுக்குப் பிரச்சினை
வந்துட கூடாது."
"என்ன பிரச்சினை வந்தாலும் நான்
பார்த்துகிடுவேன் ...இந்த அண்ணனை
நம்புகிறாய் இல்லியா ...நீ என் கூட வா..
நான் கடைசி வரை உனக்குத்
துணையாய் இருப்பேன்."
என்று சொல்லி வலுக்கட்டாயமாக
அழைத்து வந்தவளை
எப்படி கைவிட்டுவிட முடியும்?
இனி கடைசிவரை சொர்ணக்கிளிக்கு
சாமியும் ,
சாமிக்கு சொர்ணக்கிளியும்தான் துணை.
மனிதனுக்கு துணை ஒன்று தேவை என்பதை கதை வடிவில் பதிவிட்டது மிக அருமை.
ReplyDelete