பாராட்டு மடல்

        பாராட்டு மடல்

தண்டமிழ் வண்டலை பூங்காடுடை
தென்தமிழ் எல்லை நகர் கோமக்கள்
ஜெயசிங் முத்தாபரணம் மெத்தை மடியில்
சில்லென்று பூத்ததிந்த செந்தாமரை சாந்தி!

கொழுநன் ஞானராஜன் கரம் பற்றியே
கோநகர் மும்பைக்குச்  சீராய்வந்த நற்றமிழே
முழுதாய் இறைவனைத் தொழுதிடும் தெள்ளமுதே
விழுதாய்ப் பிள்ளை இருவர் வாய்த்ததுன் வரமே!

கற்றவர் போற்றிடும் நற்றிணையே
கற்பவர் யாவர்க்கும் உற்ற நற்றுணையே
ஏட்டினுள் அடங்கா மதி உனதே
வீட்டினுள் நறுமலர் நந்தவனம் நீயே!

விண்மகள் பெற்றெடுத்த தண்ணிலவோ
மண்மகள் வாழ்த்துகின்ற பண்ணிசையோ
க(ண்)ணவன் கொண்டாடும் பெண்ணமுதோ
மண்டு குணநலன் கொண்டதுன் விண்ணுயர்வோ!

கற்பனை பெருகும் சொற்று ணையே
சொற்றி றம்பா   நாவறம் கொண்டனையே
தெற்றெதும் காணா வான்மதியே - உன்னை                                          நட்பாய்ப் பெற்றது எம் நற்றவமே!

பிரைட் பள்ளியில்  அறப்பணி ஆண்டு ஐயாறு
பொய்யாது பாய்ந்த பைந்தமிழ்ப் பாலாறு
தொய்யாது நடத்திய சொல்லாறு-என்று
மெய்யாக சொல்லி நிற்கும் தமிழ்வரலாறு!

ஓய்விலும் நின்பணி தொடர்ந்திடல் வேண்டும்
ஓயாது இறைப்பணி இருந்திடல் வேண்டும்
எண்ணும் செயல்கள் கைகூடல் வேண்டும்-பிறர்
நண்ணும் வண்ணம் வாழ்ந்திடல் வேண்டும்!

களிப்புகள் பெருகி செழிப்பினில் திளைத்து
குன்றென புகழ்உனை அணிசெய வேண்டும்
நன்றென நாட்கள் இனித்திட வேண்டும்-காசினி
வந்தனை தந்துனை வாழ்த்திட வேண்டும்!

Comments

Popular Posts