தாலந்து பற்றிய உவமை
தாலந்து -உவமை
திறமைசாலி யார் என்று
கேட்டால் ஆளாளாளுக்கு
ஒரு கருத்தைக் கூறுவர்.
தாங்கள் சொல்லும் கருத்துதான்
உண்மை என்று
மெய்ப்பிக்கவும் முற்படுவர்.
உண்மையுள்ளவன் யார்
என்று கேட்டால் ....
நான் என்று யாரும்
துணிந்து சொல்வதில்லை.
எப்போதாவது ஒருமுறை
பொய் சொல்லி இருப்போம் .
நம் மனசாட்சியே நமக்கு
எதிராக சாட்சி சொல்ல
கிளம்பிக் கொண்டிருக்கும்.
அதனால்தான் நமக்கு அந்த
துணிவு வருவதில்லை.
முடிவாக யாருமே
இவ்வுலகத்தில் உண்மையுள்ளவுங்க
இல்லைங்க...என்று
சொல்லிவிட்டு ஒதுங்கிவிடுவோம்.
சிலர் உண்மையாக இருந்து
என்னத்தைக் கண்டோம்
என்று சலித்துக் கொள்வதும் உண்டு.
உண்மையுள்ளவன் என்னத்தைக்
காணமுடியும் என்றுதானே கேட்கிறீர்கள்?
உங்கள் கேள்விக்கான பதிலை
ஒரு உவமை மூலமாக
தெரிந்து கொள்வோம். வாருங்கள்.
எப்போதுமே ஏசு கிறிஸ்து
உவமைகள் மூலமாக தான்
சொல்ல வந்த கருத்தை
மக்கள் மனதில் பதிய வைப்பார்.
அவர் கூறும் உவமைகள் எல்லாம்
பெரும்பாலும் கேள்வி
கேட்டு அதற்கான பதிலாகவே
அமைந்திருக்கும்.
நீங்களும் கேள்வி கேட்டுவிட்டீர்களல்லவா?
அதற்கான பதில் கிடைக்க வேண்டாமா ?
இதோ உங்கள் கேள்விக்கான பதில்:
ஒரு எஜமானிடம் மூன்று
வேலைக்காரர்கள் வேலை பார்த்து
வந்தனர்.
ஒருநாள் எஜமானுக்கு வேலை நிமித்தமாக
வெளியூர் செல்லும்படியான
சூழல் ஏற்பட்டது.
இப்போது எஜமான் கையில்
எட்டு தாலந்துகள் இருந்தன.
மூவருக்கும் சமமாக பங்கு வைத்துக்
கொடுத்துவிடலாமா என
நினைத்தார்.
அது முடியாத காரியம்.
அதற்கு கூடுதலாக இன்னொரு
தாலந்து வேண்டும்.
என்ன செய்யலாம் ?
யோசித்தார்.
திறமைக்குத் தக்கதாக
பகிர்ந்தளித்துவிடலாம்.
அதுதான் நல்லது என்று
முடிவுசெய்தார்.
முதலாமவனை
அழைத்தார்.
.
இவன் சுறுசுறுப்பானவன்.
அவனுக்கு கூடுதலாக கொடுப்பதில்
தப்பில்லை என்று
நினைத்து அவனிடம் ஐந்து
தாலந்துகளைக் கொடுத்தார்.
அவன் மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டான்.
இரண்டாமவன்
முதலாமவனைப்போல சுறுசுறுப்பு
இல்லாவிட்டாலும் சொன்னதைச்
செய்யக்கூடியவன்.
ஆதலால் அவனிடம் இரண்டு
தாலந்துகளைக் கொடுத்தார்.
அவனும் மனமகிழ்ச்சியோடு
பெற்றுக்கொண்டான்.
மூன்றாமவனோ படுசோம்பேறி.
அவன் கைகளில் கொடுப்பதும்
ஒன்றுதான். கொடுக்காமல்
இருப்பதும் ஒன்றுதான்.
இருப்பினும் எஜமானுக்கு
அவனை மட்டும் வெறுங்கையாக
விட்டுச் செல்ல மனமில்லை.
கையில் இருந்த ஒரு தாலந்தை
அவன் கையில் கொடுத்தார்.
ஏதோ கடமையே என்று வாங்கிக் கொண்டான்.
ஐந்து தாலந்தை வாங்கியவன்
இந்த ஐந்து தாலத்தையும்
எப்படி பெருக்கலாம் என்று
யோசித்தான்.அவனுடைய
எண்ணம் யாவும் தனது எஜமான்
வந்த பின்னர் எப்படியாவது அந்தப்
பணத்தைப் பன்மடங்காக்கித்
திருப்பிக் கொடுக்க வேண்டும்
என்பதிலேயே இருந்தது.
அதற்காக உழைத்தான்.
இரட்டிப்பாக பணம் கிடைத்தது.
இப்போது அவன் கையில்
பத்து தாலந்துகள் இருந்தன.
இரண்டு தாலந்து வாங்கியவனும்
அதை வைத்து கூடுதலாக
இன்னும் இரண்டு தாலந்துகளைச்
சம்பாதித்துவிட்டான்.
அதனால் இப்போது அவனிடமும்
நான்கு தாலந்துகளாயின.
ஒரு தாலந்தை வாங்கியவன்
அதை என்ன செய்வது
என யோசித்தான்.
இதை அப்படியே பத்திரமாக
வைத்து திருப்பிக் கொடுத்துவிட
வேண்டும் .
இல்லை என்றால் எஜமான் வந்து
சண்டை போடுவார்.
அதனால் நிலத்தைத் தோண்டி
புதைத்து வைப்பதுதான்
பாதுகாப்பானது என்று புதைத்து
வைத்துவிட்டு
நிம்மதியாக இருந்து கொண்டான்.
இப்போது எஜமான் திரும்பி
வந்துவிட்டார்.
மூவரையும் அழைத்தார்.
"கொடுத்த தாலந்துகளை வைத்து
என்ன செய்தீர்கள்?" என்று
விசாரித்தார்.
ஐந்து தாலந்துகள் வாங்கியவன்
முன்னால் வந்து வணங்கி
நின்றான்.
"எஜமான் எனக்கு
நீங்கள் ஐந்து தாலந்துகள் கொடுத்தீர்கள்.
நீங்கள் கொடுத்த ஐந்து தாலந்துகளையும்
முதலீடாக வைத்து இன்னும் ஐந்து
தாலந்துகள் சம்பாதித்துவிட்டேன்.
இதோ இப்போது என்னிடம்
பத்து தாலந்துகள் இருக்கின்றன"
என்று எஜமானிடம் எடுத்துக் கொடுத்தான்.
எஜமானுக்கு மிக்க மகிழ்ச்சி.
"நல்லது .உண்மையும் உத்தமும்
உள்ள ஊழியக்காரனே !
கொஞ்சத்தில் உண்மையாய்
இருந்தாய். அநேகத்தின் மேல்
உன்னை அதிகாரியாக
வைக்கிறேன் . என்னோடு வந்து
மகிழ்ச்சியில் கலந்து கொள்"
என்று சொல்லி அவனை
கனப்படுத்தினார்.
இரண்டு தாலந்து வாங்கியவனும்
"ஐயா...தாங்கள் தந்த
இரண்டு தாலந்துகளை வைத்து
மேலும் இரண்டு தாலந்துகள்
சம்பாதித்துவிட்டேன்.
இதோ நான்கு தாலந்துகள்
உள்ளன. பெற்றுக் கொள்ளுங்கள்"
என்றான்.
"மகிழ்ச்சி.நீயும் கொஞ்சத்தில்
உண்மையாய் இருந்தாய்.
ஆதலால் உன்னையும்
அநேகத்துடன் உன்னை அதிகாரியாக
வைப்பேன் . என்னோடு வந்து
மகிழ்ச்சியில் கலந்து கொள்ளும்"
என்று கூறி உயர்த்தினார்.
இப்போது ஒரு தாலந்தை வாங்கியவன்
முன்னால் வந்து நின்றான்.
"ஆண்டவரே! நீர் விதைக்காத இடத்தில்
அறுக்கிறவரும் தெளிக்காத இடத்தில்
சேர்க்கிறவருமான
கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன்.
ஆதலால் நான் பயந்து போய்
நீர் தந்த ஒரு தாலந்தை
அப்படியே புதைத்து வைத்துவிட்டேன்.
இதோ கொண்டு வந்துள்ளேன்.
வாங்கிக் கொள்ளும்"
என்றான்.
எஜமானுக்கு இவனது
சோம்பேறித்தனம் புரிந்து போயிற்று.
"பொல்லாதவனும் சோம்பேறியான
ஊழியக்காரனே !
நான் விதைக்காத இடத்தில் போய்
அறுக்கிறவனென்றும்.
தெளிக்காத இடத்தில்போய்
சேர்க்கிறவனென்றும்
அறிந்திருந்தாயே.
அப்படியாயின் என் பணத்தைக்
காசுக்காரரிடம் கொடுத்திருக்கலாமே!
அப்போது என்னுடைய பணத்தை நான்
வட்டியோடே வாங்கியிருப்பேனே!"
என்று கோபமாகப் பேசினார்.
"இவனிடம் உள்ள ஒரு தாலந்தையும்
பிடுங்கி பத்து தாலந்து
வைத்திருப்பவனிடம் கொடுங்கள்"
என்றார்.
"உள்ளவன் எவனோ அவனுக்குக்
கொடுக்கப்படும்.
இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும்
எடுத்துக் கொள்ளப்படும்.
பிரயோஜனமற்ற இவனை இருளில்
தள்ளிப் போடுங்கள்.
அங்கே அழுகையும் பற்கடிப்பும்
உண்டாகட்டும்" என்று கூறினார்.
இயேசு எதற்காக இந்த உவமையைக்
கூறினார்?
உள்ளவனுக்கு மேலும் கொடுக்கப்படும்
என்று சொல்லப்பட்டதின் அர்த்தம் என்ன?
உள்ளவனுக்கு மேலும் கொடுக்கப்படும்
என்றால்....ஏதோ நெருடலாக
இருக்கிறதல்லவா!
உள்ளவன் என்பவன் யார் ?
பணம் உள்ளவனா?
அப்படி ஏசு சொல்லி இருக்க
வாய்ப்பு இருக்குமா?
இருக்கவே இருக்காது.
உண்மை உள்ளவனாக இருக்க
வேண்டும்.
அவன்தான் உள்ளவன்.
உழைக்க வேண்டும் என்று ஆவல்
உள்ளவனாக இருக்க வேண்டும்.
அவன்தான் உள்ளவன்.
அவனைத்தான் ஏசு உள்ளவன்
என்கிறார்.
அவன்தான் உயர்த்தப்படுவான்.
சுறுசுறுப்புள்ளவன் கை செல்வத்தை
உண்டாக்கும்.
இப்போது ஏசு சொன்ன உள்ளவன்
யார் என்பது புரிந்திருக்குமல்லவா!
அடுத்து "இல்லாதவனிடத்திலிருந்து
உள்ளதும் எடுத்துக் கொள்ளப்படும்."
என்கிறார் தேவன்.
இப்போது எது இல்லாதவன் ...
என்ற கேள்வி எழுகிறதல்லவா!
பணம் இல்லாதவனா?
பதவி இல்லாதவனா?
செல்வாக்கு இல்லாதவனா?
இல்லை....இல்லை.
உண்மை இல்லாதவன்.
உழைக்க வேண்டும் என்று
எண்ணம் இல்லாதவன்.
அவன்தான் இல்லாதவன்.
உண்மையும் உழைப்பும்
இல்லாதவனைத்தான் ஏசு
இல்லாதவன் என்கிறார்.
இந்த நற்பண்புகள்
இல்லாதவன் இல்லாதவனாகவே
இருப்பான்.
இதுதான் ஏசு கிறிஸ்து தாலந்து
உவமை வாயிலாக நமக்கு
சொல்ல வந்த செய்தி.
"இல்லாமையை இல்லாமலாக்க
உண்மையுடன்கூடிய
உழைப்பு உள்ளவர்களாக இருங்கள்.
அப்போதுதான் உயர்வு உங்களை
வந்து சேரும்"
என்கிறார் ஏசு கிறிஸ்து.
அனைவரும் அறிந்து செயல்பட வேண்டிய கருத்தை ஏசு சொன்ன உவமை வாயிலாக பதிவிட்டது மிக மிகச் சிறப்பு.
ReplyDelete