அதே கண்கள்
அதே கண்கள்
அதே கண்கள்.
கடந்த ஒரு வார காலமாக
என் தூக்கத்தைக் கெடுத்த
அதே கண்கள்.
இதைத்தானே கடந்த ஒரு
வாரகாலமாக நான் தேடிக் கொண்டிருந்தேன்.
இவ்வளவு சீக்கிரமாக பார்க்க
நேரிடும் என்று எதிர்பார்க்கவில்லை.
பார்த்த அந்தக் கணத்தில் தடுமாறிப்
போனேன்.தலைகுப்புற
விழுந்தது போல் இருந்தது.
முன்னும் பின்னுமாக
கால்கள் பின்ன ஆரம்பித்தன.
ஏன் இந்தத் தடுமாற்றம்?
அப்படி அந்தக் கண்கள்
என்னதான் பேசியன?
விடை தெரியாமல் மறுபடியும்
என் கண்கள் அந்தக் கண்களைத் தேடின.
ஒரு ஐந்து வினாடிதான்.
அதற்குள் அந்தக் கண்களுக்குள்
இருந்த ஏதோ ஒன்று
என்னை அதற்கு மேல் போகவிடாமல்
கட்டிப் போட்டுவிட்டன.
கண நேரக்
காட்சி வந்து வந்து மறைந்து போனது.
மறுபடியும் அந்தக் கண்களைக்
காண மாட்டோமா ?என்ற ஏக்கம்.
துடியாய்த் துடித்துக்
கொண்டிருந்தேன்.
நேரில் பார்க்க வேண்டும்..
பேச வேண்டும் ....
மனம் தவித்தாலும் என்னால்
அதற்கு மேல் அங்கு
நிற்க முடியவில்லை.
யாரும் பார்த்துவிட்டால்...
அதற்குமேல் வேறு
வினையை வேண்டாம்.
அங்கேயும் இங்கேயும்
பார்த்தேன்.
நல்ல வேளை யாரும்
பார்க்கமில்லை..
உடம்பெல்லாம் வியர்த்துக் கொண்டு
வந்தது.
என்னது இது?...இப்படி வியர்த்துக்
கொண்டு வருகிறது.
எப்படியோ சமாளித்துக் கொண்டு
கடந்து போய்விட்டேன்.
கடந்து போய்விட்டேனே தவிர
நினைவுகளை அந்தக் கண்களை விட்டு
பிரிக்க முடியவில்லை.
அப்படி என்ன பூர்வ ஜென்ம
பந்தம்?
நினைவுகள் என்னைத் தடுமாற
வைத்தன.
ஒரு வழியாக கல்லூரிக்கு வந்து
சேர்ந்துவிட்டேன்.
ஒரு பாட வேளைகூட என்னால் பாடம்
கவனிக்க முடியவில்லை.
ஒரு வார தவம். இதற்காகத்
தானே காத்திருந்தேன்.
இருந்தும் கிடைத்த சந்தர்ப்பத்தை
தவற விட்டு விட்டேனோ?
பேசியிருக்கலாமே...
கண்ணாலாவது எதுவும்
கேட்டிருக்கலாமே....
முட்டாள்தனமாக நடந்து கொண்டு
விட்டேனோ?
போகட்டும் என்று விட்டுவிட
முடியவில்லை.மாலை வரை காத்திருக்க
வேண்டுமே...
காத்திருத்தலின் வலியை முதன்முதலாக
உணர ஆரம்பித்தேன்.
சாதாரணமாக வயிற்றுக்குள்தான்
பிரட்டல் ஏற்படும்.
தலைக்குள் ஏதோ ஒன்று
பிரண்டு கொண்டிருந்தது.
மதிய இடைவேளை. சாப்பிட
வந்து அமர்ந்தேன்.
கைகள் சாப்பாட்டைப் பிசைந்தன.
நினைவுகள் அந்தக் கண்களைச்
சுற்றிச் சுற்றியே வந்தன.
" என்ன ஆளு ஒரு மாதிரி
பையறைந்தது மாதிரி முழிக்குது"
கிண்டல் ஒலி வந்து என்
கவனத்தைத் திசை
திருப்பியது.
திரும்பிப் பார்த்தேன்.
என் தோழி செல்வம் பின்னால்
நின்று கொண்டிருந்தாள்.
கண்கள் என்ன ....என்ன...
என்று குறும்பாக ஏதேதோ கேட்க
உதடுகள் மெல்ல விரிய...
நின்றிருந்தாள்
" ஒன்றுமில்லப்பா...சும்மாதான்"
சாமாளித்தேன்.
"பார்த்தா அப்படித் தெரியலியே.
ஏதோ தீவிரமான யோசனை போல தெரிகிறது "
"ஒரு யோசனையுமில்ல... வயிற்றுக்குச் சரியில்லை.அதனால்
சாப்பிடணுமா...வேண்டாமா என்று யோசித்து கிட்டு இருக்கிறேன்"என்று
ஒரு பொய்யைச் சொல்லி வைத்தேன்.
" நிஜமா?
வேறு ஏதாவது குடிக்கிறியா?"
"பரவாயில்லை...வேண்டாம்"
"காலையில் என்ன சாப்பிட்டுட்டு வந்தா?"
" ஒன்றுமில்லை...காபி மட்டும்தான்"
என்றேன்.
" வெறும் வயிற்றோடாவா வந்தா?...
வயிற்றுக்குள் ஒன்றும் இல்லை என்றால்
வயிறு பிரட்டத்தான்
செய்யும்.பல்ல கிடிச்சுகிட்டு
நாலு வாய் சாப்பிடு. எல்லாம் சியா போயிடும்" என்று என்னைச் சாப்பிட வைப்பதில் குறியாக நின்றாள் செல்வம்.
இன்னும் சாப்பிடவில்லை என்றால்
ஊட்டிவிட்டு விடுவார்களோ என்ற
பயம்.
படபடவென்று நாலு வாய்
அள்ளி விழுங்கிவிட்டு
போதும் என்று கைகழுவ
எழும்பிவிட்டேன்.
" என்ன ஆளு ஒருமாதிரி இருக்கு?
வேறு ஏதும் என்றால் சொல்லுப்பா...
வீட்டுக்குப் போகலாமா?வா....
எனக்கு என்னவோ உனக்கு
உடம்பு சரியில்லாதது போல்தான்
இருக்கிறது"
வலுக்கட்டாயமாக பேச்சுக்
கொடுத்தாள்.
தலை வலிப்பது போல இருக்கிறது என்று
ஒரு பொய்யைச் மறைக்க ஒன்பது
பொய்யைச் அடுக்கிக் கொண்டே போனேன்.
தலைவலி மாத்திரை
என் பையில் இருக்கிறது என்றபடி பையில் கையைவிட்டு மாத்திரையையும்
தண்ணீரையும் எடுத்து நீட்டினாள்.
இப்போது என்னால் மறுக்க முடியவில்லை.
மறுத்தால் மறுபடியும் மோகினிப்பிசாசு
அது இது என்று கிண்டலடித்து
விடுவாளோ என்று ஒரு அச்சம்.
ஒன்றும் சொல்லாமல்
மாத்திரையை விழுங்கிக்
கொண்டேன்.
"ஒரு பத்து நிமிடம் கண்களை மூடி
என் மடியில் படுத்திரு"
இழுத்து மடியில் போட்டுக்
தாலாட்டுப் பாடாத குறைதான்.
சற்றுநேரத்தில் வகுப்பிற்குச்
சென்றேன்
நல்லவேளை" ஆசிரியர் வரவில்லை.
பிரீ பீரியட் "என்று பியூன் வந்து
சொல்லி விட்டுப் போனார்.
எனக்கு உடனே வீட்டுக்குப் போக வேண்டும்
போல் இருந்தது.
ஒருவழியாக பேருந்தைப் பிடித்து
ஊர் வந்து சேர்ந்தேன்.
அந்த வீட்டுப் பக்கம் வந்ததும்
கண்கள் அந்தக் கண்களைத் தேடி
ஆலாய்ப் பறந்தன.
வாசலைப் பார்த்தேன்.
வாசலில் அவளது பாட்டி
நந்தி போல் நின்று கொண்டிருந்தார்.
நான் பார்ப்பதைப் பார்ப்பதும்
"கண்ணுல கொள்ளிக் கட்டைய
வைக்க....ஊரு கண்ணுதான்
பட்டுச்சோ....உலகக் கண்ணுதான்
பட்டுச்சோ....இப்படி நம்ம வீட்டுக்குன்னு
வந்து விடிஞ்சுருக்கே "என்று
ஒப்பாரி வைக்கத் தொடங்கினார்.
விருட்டென்று பார்த்தும்
பார்க்காததுபோல் வீட்டிற்கு வந்துவிட்டேன்.
அம்மாவிடம் கேட்டுவிடலாமா?
உனக்கு என்ன அவள்மீது அவ்வளவு
அக்கறை என்று கேட்டுவிட்டால்...?
மெதுவாக தங்கை நந்தினியிடம்
போனேன்.
"அந்த முக்கு வீட்டுல...என்று
தொடங்குமுன்னே...
"முக்கு வீட்டுக் கதை
நமக்கு எதுக்கு? பேசாம
உன் கதையைப் பார்த்துட்டுப்போ....
அம்மா கேட்டாங்க..
படிக்கச் போறீயளா....
முக்கு வீட்டுக்காரி மாதிரி
நீங்களும்
ஊர் சுத்தப் போறீயளா
என்று ஆடு ஆடுன்னு ஆடிபிடுவாவ"
என்று சொல்லி அப்போதைக்கு என்
வாயை அடைத்து விட்டாள்.
எனக்கு சும்மா இருக்க முடியவில்லை.எனக்கு மண்டையைப் பிய்த்துக்
கொள்ளணும் போல் இருந்தது.
ஏன் இவர்கள் எல்லாம் இப்படி
இருக்கிறார்கள்?
எல்லாரும் சுயநலக்காரர்கள்தான்.
என்னால் அவர்களைப்போல
அப்படி சும்மா இருக்க
முடியுமா?
அவளைப்பற்றி இவர்களுக்கு
என்ன தெரியும்?
மறுபடியும் அந்தக் கண்களைப் பார்த்துப்
பேச வேண்டும் ?
ஏன் இப்படிச் செய்தாய்?
என்று கேட்க வேண்டும்?
ஆனால் எப்படிப் பார்ப்பது?
ஒன்றுமே புரியவில்லை....
அந்த வீட்டைக் கடக்கும் போதெல்லாம்
மறுபடியும் அந்தக் கண்கள் என்னோடு
பேசாதா என்ற ஏக்கம் மட்டும்
இருந்துகொண்டே இருந்தது.
ஆனால்...ஒருவாரமாக என் கண்களில்
படாமல் கண்ணாமூச்சி
காட்டினாள் அந்த தேவதை.
தேவதை என்று சொல்லாமல் வேறெப்படிச்
சொல்வது?
இவளுக்கு மட்டும் இப்படியொரு பேரழகை
இறைவன் பஞ்சமில்லாமல் தந்திருக்கிறானே என்று அவளைப் பார்க்கும் போதெல்லாம் வியந்ததுண்டு.
செந்தாமரை இதழன்ன
சிற்றுதடுகள் மெல்ல விரியும்போது
மென்மையான ஓரிரு வார்த்தைகள்
வந்து விழும்.
அவ்வளவுதான் ...
பேசும் விழிகள் அவளுக்கு.
இப்படியொரு நினைவில் நான்
தடுமாறி நிற்க....
அப்போது மெல்ல கதவு திறப்பது
போல் இருந்தது.
திறந்தும் திறவாமலும் இருந்த அந்தக் கதவிடுக்கில்
அவள் விழிகள் மின்னியது.
இப்போது ஓரளவுக்கு அவளை என்னால் பார்க்க முடிந்தது.
இன்று கேட்டுவிட வேண்டும்.
ஒரு துணிச்சலோடு கால்கள்
அவள் வீட்டை நோக்கி நடந்தன.
வீட்டில் ஒருவரும் இல்லை
என்று நினைக்கிறேன். நான் வருவதைப்
பார்த்ததும் கதவை முழுவதுமாகத் திறந்து
வாசலில் வந்து நின்றாள்.
மெதுவாகப் புன்னகைத்தேன்.
பதிலுக்கு அவளும் புன்னகைத்தாள்.
அந்தப் புன்னகையில் ஏதோ
ஒரு சோகம் மறைந்திருந்தது.
எதையோ ஒன்றை மறைக்க விரும்புகிறாள் என்பதும் புரிந்தது.
"ஏன் ....என்னாயிற்று?
என்னைக் கண்டதும் மறைந்து
கொள்கிறாய்...?"
என்று கேட்க நினைத்தேன்.
ஆனால்....அவள் கண்களில்
இருந்த ஏதோ ஒன்று
அதைக் கேட்கவிடாமல் தடுத்தது.
ஏதாவது பேசுவாள் என்று
இரண்டு நிமிடம் அவள்
முகத்தையே பார்த்துக்
கொண்டு நின்றேன்.
அவள் கண்களால் இப்போது
கண்ணீரை மட்டுமே பதிலாகத்
தர முடிந்தது.
ஏன் அழுகிறாய் ?
என் கைகள் மெதுவாக அவள்
கண்ணீரைத் துடைத்துவிட
நீண்டன.
அதற்குள் அவள் மெதுவாக சேலையால்
முகத்தை மூடிக்கொண்டாள்.
இரு கைகளாலும் முகத்தை
மூடிக்கொண்டு அழுதாள்.
பேச முடியாதபடி நின்ற நான்
ஊமையாய் அவள் முன் நின்றிருந்தேன்.
அப்போது சேலை சற்று விலகி கழுத்தில்
கிடந்த மஞ்சள் கயிறு வெளியில்
தெரிய....
எனக்கு அப்படியே தூக்கிவாரிப்போட்டது.
என்ன இது?
என் கால்களுக்கும் கீழ் உள்ள நிலம்
நகர்வது போல் இருந்தது.
அப்படியே சுவரில் சாய்ந்து கொண்டேன்.
ஒரு கணம்.....
நிலை தடுமாறிப் போனேன்.
இதற்காகவா இத்தனை தவம்!
எதற்காக இப்படிச் செய்தாய்?
தோளைப் பிடித்து உலுக்கிக் கேட்க
வேண்டும்போல் இருந்தது.
என்ன கோலம் இது?
அவசரப்பட்டுவிட்டாயே....தமிழ்.
உள்ளுக்குள் ஒப்பாரி வைத்தேன்.
வார்த்தைகள் வெளிவர மறுத்தன.
கடைசியாக....
யாரவன்...கேட்டுவிட நினைத்தேன்.
வேண்டாமே.....விட்டுவிடு...
ப்ளீஸ் கெஞ்சியது...அதே கண்கள்.
அவளுக்கு என்ன நடந்தது?
ஏனிந்த அவசரத் கோலம்?
இன்றுவரை எனக்குப் புரியவில்லை.
மிக எளிமையான அருமையான சிறுகதை.
ReplyDelete