ஆசிரியருக்கான இலக்கணம்
ஆசிரியருக்கான இலக்கணம் என்ன
ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும்?
ஆசிரியர் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
இப்படித்தான் நாம் நினைத்திருப்போம்.
யார் ஆசிரியர் என்று கேட்டால் "எழுத்தறிவித்தவன் இறைவன்" என்பார் அதிவீரராம பாண்டியர்.
அதெல்லாம் ஒத்துக்கொள்கிறோம்.
ஆனால் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்று யாராவது சொல்லியிருக்கிறார்களா?
அதெப்படி சொல்ல முடியும்?
ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்
என்பது ஆசிரியருக்குத் தெரியாததா என்ன?
இப்படியும் சிலரது முன்னோட்டம் இருக்கலாம்.
ஆனால் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்று ஒருவர் இலக்கணமே எழுதி வைத்திருக்கிறார் கேளுங்கள்.
பவணந்தி முனிவர் தனது நன்னூல்
என்னும் இலக்கண நூலில் ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை வரையறை செய்துள்ளார்.
.“குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குணம் இணையவும்
அமைபவன் நூல்உரை ஆசிரியன்னே!”
என்கிறார் பவணந்தியார்.
இவர் இந்த நூற்பாவில் ஆசிரியர் களுக்குரிய பத்து வகை இலக்கணங்களை எடுத்தியம்பியுள்ளார்.
குலன்
:
ஒழுக்கமுடைய சிறந்த குடும்பத்தில் பிறந்தவராக ஒரு ஆசிரியர் இருத்தல் வேண்டும்.
அருள்
:
அனைத்து உயிர்கள் மீதும் இரக்கம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
தெய்வம்
:
தெய்வத்தைப் போன்ற பண்பு
உடையவராக இருக்க வேண்டும்.
கொள்கை:
கொள்கைப் பற்று கொண்டவராக
தான் கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியோடு நிற்பவராக ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும்.
மேன்மை
:
ஆசிரியர் என்பவர் எப்போதும் பெருந்தன்மை குணம் கொண்டவராக இருக்க வேண்டும்.
எந்த இடத்திலும் எந்தச் சூழலிலும் எல்லா மாணவர்களிடமும் பெருந்தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும்.
.
கலைப்பயில் தெளிவு:
தான் கற்ற கல்வியோடு நின்று போகாமல் கடலளவு கல்வியை நாளும் கற்கும் ஆர்வத்தோடு புதுப்புது தகவல்களைக் கற்று மாணவர்களுக்குக் கற்பிப்பவராக ஆசிரியர் விளங்க வேண்டும்.
கட்டுரை வன்மை:
மாணவர்களுக்கு எளிதில் புரியும்படி பாடத்தைக் கற்பிக்கும் சொல்வன்மை ஆசிரியரிடம் இருத்தல் வேண்டும்.
நிலம்:
மலை, துலாக்கோல், மலரை ஒத்த குணங்கள்:
நிலத்தின் இயல்புபடையவராக
இருத்தல் வேண்டும்..
அதாவது அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல பொறுமை உடையவராக இருத்தல் வேண்டும்.
மலை:
மழை பெய்யாது வறண்ட காலத்திலும் நீர் வளத்தைக் கொடுக்கும் மலையைப் போல தனக்கு பொருள் வருவாய் இல்லாத காலத்திலும் தன் மாணவர்களுக்கு கல்விப் பொருளைக் கொடுக்கும் மனம் படைத்தவர் தான் ஆசிரியர்.
துலாக்கோல் :
ஏற்றத்தாழ்வு பாராது
மாறுபட்ட மனநிலை இல்லாது
நடுநிலையோடு பாடங்களைக் கற்பிக்க வேண்டும் .
மலர்:
மலரைப் போன்று மென்மை உடையவராக
முக மலர்ச்சியுடன் பாடம் சொல்லித் தர வேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு ஆசிரியர் மீது ஒரு பிரியம் ஏற்படும்.
உலகியல் அறிவு:
புத்தக அறிவு மட்டுமன்றி உலக அறிவு பெற்றவராக இருக்க வேண்டும்.
பாடத்தோடடு தொடர்படைய. கருத்துக்களைச் சொல்லும் பரந்துபட்ட அறிவு பெற்றவராக ஆசிரியர் இருத்தல்
வேண்டும்.
உயர்குணம்:
எவ்வழியிலேனும் மாணவர்களை உயர்நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற உயர்ந்தகுணம் கொண்டவராக இருத்தல் வேண்டும் .
இத்தனை பண்புகளும் கொண்டவர் தான் ஒரு ஆசிரியராக இருக்க வேண்டும் என்று
ஆசிரியருக்கு இலக்கணம் வகுத்து வைத்திருக்கிறது நன்னூல்.
வருங்கால சந்ததியை நெறிப்படுத்தி
உருவாக்கும் பெரும் பொறுப்பு
ஆசிரியர்கள் கைகளில்தான் உள்ளது.
.
“ஒரு தேசத்தின் தலைவிதியை வகுப்பறைகள் தான் தீர்மானிக்கிறது” என்பார்கள்.
ஆசிரியர்களின் வாக்கு சரியாக இருந்தால் தான் இளைய தலைமுறையின் போக்கும் சரியாக இருக்கும்.
ஆகவே நன்னூல் கூறும் இலக்கணப்படி ஆசிரியர்கள் தங்களைத்
தகுதிச் படுத்திக் கொண்டால்தான் ஒரு நல்லாசிரியர் என்ற பெருமையைப் பெறமுடியும்.
நல்லாசிரியரால் மட்டுமே நல்ல சமூகத்தை உருவாக்க முடியும்.
நல்ல சமூகத்தை உருவாக்கும்
நல்லாசிரியர்களுக்கு வாழ்த்துகள் 👍
Comments
Post a Comment