தோழனோடும் ஏழைமைபேசேல்

தோழனோடும் ஏழைமை பேசேல்


ஔவையின் அமுதமொழிகளுள் இதுவும் ஒன்று.

கொன்றை வேந்தனில் ஔவை 

கூறியுள்ள வரிகள் ஒவ்வொன்றும்

காலத்தால் அழியாத வாழ்வியல்

உண்மைகளைச் சொல்லித் தரும்.


ஔவை கூறும் ஒவ்வொரு சொல்லுமே

ஒவ்வொரு உண்மையை எடுத்து வைக்கும்.


"தோழனோடும் ஏழைமை பேசேல்"


எளிதில் பொருள் அறிந்து கொள்ளக்கூடிய

ஒரு சொற்றொடர்.

நண்பனோடு நமது ஏழ்மை நிலையைப்

பகிர்ந்துக் கொள்ளக் கூடாது .இதுதான் இதன்

பொருள் என்ற சாதாரணமான

புரிந்துணர்வோடு நாம் கடந்து போய்விட முடியாது.


ஏழைமையை என்றால் அறியாமை

என்ற ஒரு பொருளும் உண்டு.

ஆகையால் நம்மிடம் நெருங்கிப் பழகும் நண்பர்கள்தானே என்ற நினைப்பில் அவர்களிடம் முன்பின் யோசியாமல் அறிவீனமாகப் பேசிவிடாதே என்றும் எச்சரிக்கிறார் ஔவை.


நமது வறுமையைப் பிறரிடம் பறைசாற்றுவதும் ஒருவகையில் மதியீனம்தான் என்கிறார் ஔவை.


ஔவை தோழனிடம் ஏழைமை பேசேல்

என்று எழுதவில்லை.


தோழனோடும் என்ற ஒற்றைச்சொல்லின்

மூலம் மற்றும் சிலரை அதில் தொடுத்துவிட்டுச்

சென்றிருக்கிறார்.


தோழனோடு இன்னும் சிலரா

வியப்பாக இருக்கிறதா!

தோழனிடமே நமது வறுமையைப் பற்றிப்

பேசக் கூடாது.

அறிவீனமாக பேசி விடக்கூடாது.

அப்படியானால் மெதுவாக இன்னும் எத்தனை பேரிடம் என்னிடம் ஒன்றுமில்லை என்று மதிகெட்டத்தனமாக எதுவும் சொல்லிவிடக்கூடாது என்று கணக்குப் போட்டுப் பாருங்கள்.


தோழனோடு ஏழ்மை பற்றிப் பேசக் கூடாது.

உண்மை.


நமது ஏழ்மையைத் தெரிந்து கொண்டால்

 நண்பன் நம்மை விட்டு விலக நேரிடலாம்.


நண்பனுக்கு நம்மீது இருக்கும் மதிப்புக் குறையலாம்.


தனது ஏழ்மையால் நம்மிடம் ஏதாவது

எதிர்பார்ப்பானோ என்று தப்புக்

கணக்குப் போடலாம்.


நண்பனோடு நமக்கு இருக்கும் மதிப்பும்

மரியாதையும் குறையாமல் நெடுநாள்

நட்பு தொடர வேண்டும் என்று விரும்பினால்

நமது ஏழ்மையைப் பற்றிப் பேசாதே என்கிறார்

ஔவை.

 அருமையான கருத்து இல்லையா!

 

அத்தோடு மட்டுமல்ல.

தோழனோடு எல்லாவற்றையும் பகிர்ந்து

கொள்ளலாம்.


ஆனால் இதை மட்டும் பகிர்ந்து கொள்ளக்

கூடாது என்று சொன்ன ஔவை தோழனோடும்

என்று ஒரு உம்மைச் சேர்த்துக் கொண்டதனால்

தோழன் மட்டுமல்ல இன்னும் சிலர்

உண்டு என்பதை நினைவுப்படுத்த

நினைத்திருக்கிறார்.


இன்னும் சிலர் யார் யாராக

இருக்கலாம். இது அவரவர்

அறிவுக்கு உட்பட்ட தேர்வாக எடுத்துக்

கொள்ளுங்கள்.


உறவுகளோடு, உடன்பணியாற்றுபவர்களோடு, 

அண்டை அயலாரோடு என்று எத்தனையோ

இடங்களில் நமது ஏழ்மையை அறியாமையை வெளிப்படுத்தக் கூடாது.


உறவுகளோடு பேசினால் நாம் மொத்தமாக

ஒதுக்கி வைக்கப்படுவோம்.

எங்கும் நமக்குரிய மரியாதை கிடைக்காது.

ஒதுங்கி ஒதுங்கி நிற்க வேண்டிய நிலைக்குத்

தள்ளப்படுவோம்.


உடன் பணியாற்றுபவர்களோடு பகிர்ந்து

கொண்டால் நாம் பணி இடங்களில்

மட்டம் தட்டப்படுவோம். 

அவமானப்படுத்தப்படக் கூடிய வாய்ப்புகள்

 நிறைய ஏற்படும்.


அக்கம் பக்கத்தில் பேசினால் நம்மை

அடையாளம் தெரியாமல் செய்துவிடுவார்கள்.

எச்சரிக்கையாக இருங்கள்.

 

ஒற்றை வரிக்குள் எத்தனை எத்தனை மனிதர்களுடைய

மனசு ஒளிந்து கிடக்குது பாருங்கள்.


ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு கருத்துக் குவியல்.


உலக உண்மைகளை நச்சென்று எடுத்துச்

சொல்லிவிட்டு அப்பாவியாகக் கடந்து

சென்றுவிடும் சிந்தனைக்குரிய வரிகள்.


ஒற்றைவரியில் கற்றையாய்ப் பொருள் 

அள்ளித் தந்து  மற்றவர்களைவிட 

சற்றே தனித்து நிற்கிறார் ஔவை.



"தோழனோடும் ஏழைமை பேசேல்"


பார்த்துப் பார்த்துப் பேச வேண்டிய மொழி.

பார்த்தாலும் பேசக்  கூடாதவை என்று சொல்லித் தந்த மொழி.

இதுதான் ஔவை நமக்குச்

சொல்லிச் சென்ற மொழி.




Comments