துளி துமியான கதை
துளி துமியான கதை
புலமையும் பொறாமையும் ஒட்டிப் பிறந்த உடன்பிறப்புகள்.
நமக்கெல்லாம் பொறாமை கூடாது என்று அறிவுரை சொல்லும் புலவர்களுக்குள் பொறாமை இருந்துகொண்டிருக்கிறது என்பதற்கு பல இலக்கிய ஆதாரங்கள் உள்ளன.
ஒட்டா ஒரு மதிகெட்டாய் என்று ஔவையிடம் வாங்கிக் கட்டிக் கொண்டவர்
ஒட்டகூத்தர்.
ஒட்டகூத்தருக்கு ஔவையிடம் மட்டுமல்ல.கம்பரோடும் மோதல் இருந்திருக்கிறது.
கம்பராமாயணம் அரங்கேற்றம் செய்யப்படும்போது கம்பர் எழுதிய பாடலில் துமி என்ற சொல் இருந்திருக்கிறது.
அந்தச் சொல்லை ஒட்டக்கூத்தர் ஆட்சேபித்திருக்கிறார். துமி என்று தமிழில் வார்த்தையே கிடையாது என்பது ஒட்டக்கூத்தரின் வாதம்.
ஒட்டக்கூத்தர் சொன்னதும் மன்னருக்கும் அந்தச் சொல்லின் மீது சிறிது ஐயம் ஏற்பட்டிருக்கிறது.
மன்னர் திரும்பி கம்பரைப் பார்த்திருக்கிறார்.
கம்பரோ" மன்னா! மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ள சொல் தான் துமி.” என்று சொல்லியிருக்கிறார்.
தாங்கள் சொல்கிறீர்கள். அதனை உண்மை என்று நான் எப்படி நம்புவது என்று
கேட்டிருக்கிறார் மன்னர்.
கம்பருக்கும் மன்னரிடம் எப்படி புரிய வைப்பது என்று புரியவில்லை.
ஒட்டக்கூத்தரின் ஆட்சேபனையால்
கம்பரின் காவிய அரங்கேற்றம் இடையிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது.
நான் தவறாக ஏதும் எழுதி விடவில்லை என்று சொல்லி தன் கருத்தில் உறுதியாக இருந்தார் கம்பர்.
மறுநாள் அரசர் நகருலா செல்கிறார். கூடவே கம்பரும் ஒட்டக்கூத்தரும் செல்கின்றனர்.
ஒரு வீட்டில் இருந்து ஒரு மாறுபட்ட ஒலி வந்துகொண்டே இருக்கிறது.
"இது என்ன ஒலி...சற்று மாறுபட்ட ஒலியாக இருக்கிறதே"
என்று கேட்கிறார் மன்னர் .
"இது மத்தினால் தயிர் கடையும்போது எழும் ஒலி மன்னா” என்றார் கம்பர்.
அரசர் இதுவரை இப்படியொரு சத்தத்தைக் கேட்டதில்லை.
அதனால் இசை போன்று வரும் அந்த ஒலியைக் கேட்க கேட்க ஆச்சரியமாக இருந்தது.
மறுபடியும் மறுபடியும் அந்த ஒலியைக் கேட்கும் ஆவலில் அங்கேயே நின்றுவிட்டார்.
அப்போது வீட்டுக்குள் இருந்த பெண் ," "மக்களே! தள்ளி நில்லுங்க துமி தெறித்துவிடப் போகிறது" என்று தன் பிள்ளைகளைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார்.
மன்னருக்கு அதிர்ச்சி.
நேற்று கம்பர் பாடலில் துமி என்று எழுதியிருந்ததற்காக பாடல்களை
அரங்கேற்ற விடாமல் நிறுத்தி வைத்தோம்.
இன்று ஒரு சாதாரண வீட்டிலுள்ள பெண் வாயிலிருந்து துமி என்ற சொல் வருகிறது.
அப்படியென்றால்...., "துமி தெறித்துவிடப் போகிறது என்று இந்தப் பெண் சொல்கிறாரே அதற்குப் பொருள் என்ன?" என்று கம்பரிடமே நேரடியாகக் கேட்டுவிட்டார்.
சரியான வாய்ப்பு கிடைத்திருக்கிறது
என்று எண்ணிய கம்பர், "
தயிர்த்துளி குழந்தைகள் உடம்பு மீது தெறித்து விடும் என்பதைத்தான் அந்தப்பெண் அப்படிச்
சொல்கிறாள் மன்னா" என்றார்.
உடனே மன்னர்," துமி புழக்கத்தில் உள்ள சொல்தானா?" என்று
துமி என்ற சொல்லின்மீது தனக்கு இருந்த ஐயத்தைப் போக்கிவிட தெளிவாகக் கேட்டார்.
"துமி என்ற சொல் புழக்கத்தில் உண்டு மன்னா. இதைத்தான் நான்
எழுதியிருந்தேன்.
ஒட்டகூத்தருக்குப் புரியவில்லை.
நீங்களும் காவிய அரங்கேற்றத்தை நிறுத்தி விட்டீர்கள்" என்று தக்க நேரம் பார்த்து மன்னன் மனதில்
துமி என்ற சொல்லைப் பதிய வைத்தார்
கம்பர்.
மன்னருக்கு நேற்று இராமாயண அரங்கேற்றத்தில் கம்பர் வாசித்தது சரி தான் என்பது இப்போது புரிந்து போயிற்று.
மறுநாளே இராமாயண காவிய அரங்கேற்றம்
நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மீண்டும் இராமாயண அரங்கேற்ற நிகழ்வு நடைபெற்றது.
கம்பர் நெகிழ்ந்து கண்களில் நீர் மல்க இராமாயணத்தை அரங்கேற்றம் செய்தார்.
இடையிடையே தக்க நேரத்தில் தனக்கு உதவிய தயிர் கடைந்த பெண்ணை நினைத்துக் கொண்டார் கம்பர்.
Comments
Post a Comment