மூவகை மாணாக்கர்

இலக்கண நூல்கள் என்றதும் 

தொல்காப்பியம் , நன்னூல், யாப்பருங்கலக் காரிகை,

தண்டியலங்காரம் இவை யாவும்

நம்  மனதில் வந்து போகும்.


இவை எல்லாம் யார் படிப்பார்கள் ?

கடினமாக இருக்கும் என்று எண்ணத் தோன்றும்.

புலவர்கள் படிக்க வேண்டியது எல்லாம்

நமக்கு எதற்கு ? என்று கேட்கத் தோன்றும்.


நன்னூலார் உங்களுக்கும் 

எனக்கும்கூட

இலக்கணம் எழுதி இருக்கிறார்.

எங்களுக்கா....?


ஆச்சரியமாக

இருக்கிறதா ?

நீங்கள் கட்டுரையைப்

படிக்கிறவர்தானே! 

அப்படியானால் உங்களுக்குத்தான்.

உங்களுக்குத்தான் அதாவது

மாணவர்களுக்குத்தான்.


நாங்கள் மாணவர்கள் இல்லையே !

நாங்கள் எப்போதோ படித்து முடித்து விட்டோம் என்கிறீர்களா?


 படித்து முடித்துவிட்டவர் எவருமிலர்.

 வாழ்நாள் முழுவதும் நாம் மாணவர்கள்தான்.

நாளும் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

கற்றல் என்பது புத்தகத்தைப் படிப்பதால்

மட்டும் வருவதல்ல.

செவிவழிக் கற்றலும் நாளும்

நமக்குள் நடைபெற்றுக் கொண்டுதான்

இருக்கிறது. அதுவும் கற்றல்தான்


அதனால் நாமும் மாணவர்கள்தான்.


மாணவர்களை பள்ளிகளில் முதல்நிலை ,

சராசரி, சராசரிக்கும் கீழ்

என்று மூன்று வகையாக பிரித்துப் பார்ப்பது

வழக்கம்.

இது இன்றும் பள்ளிகளில் நடைமுறையில்

உள்ளது.


முதல்நிலை மாணவர்கள் புத்திசாலிகள் .

அவர்களுக்குத் தனிக்கவனம் தேவையில்லை.


சராசரி மாணவர்களுக்குச் சிறிது கவனம் தேவை.

அப்போதுதான் ஆசிரியர் விரும்பிய 

பலனை பெற முடியும்.


சராசரிக்குக் கீழ் உள்ள மாணவர்கள் எவ்வளவுதான்

சொல்லிக் கொடுத்தாலும் ஒன்றும் புரியாது. 

மறந்துபோய் நிற்பர்.


கல்வித்துறை இத்தகைய மாணவர்கள்மீது அதிக

அக்கறை எடுத்துக் கொள்ளும்.

அடிக்கடி இத்தகைய மாணவர்கள் கல்வியில்

தம்மை மேம்படுத்திக் கொள்ள 

நீங்கள் என்னென்ன

முயற்சிகள் மேற்கொண்டீர்கள் என 

 ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கும்.

 

 இந்தப் பாகுபாடு இன்று நேற்று ஏற்பட்டதல்ல.

 காலங்காலமாக எல்லாவிதமான மாணவர்களும் இருந்திருக்கிறார்கள்.

 

இனி  இந்த மூவகை மாணவர்கள்  பற்றி 

 நன்னூல் கூறும் இலக்கணம் யாது ?

  என்பதைப் பார்ப்போம்.


  

"அன்ன மாவே மண்ணொடு கிளியே

இல்லிக் குடமா டெருமை நெய்யரி

அன்னர் தலையிடை கடை மாணாக்கர்"


  இது நன்னூல் நூற்பா.


மாணவர்களைத் தலை மாணாக்கர், 

இடை மாணாக்கர்,

கடை மாணாக்கர் என்று மூன்று வகைகளாக

பகுத்துக் கூறுகிறது நன்னூல்.


தலை மாணாக்கர் யார் ?


அன்னப்பறவை, பசு இவற்றைப் போன்றவர்கள்

தலை மாணாக்கர்களாம்.


அது எப்படி என்கிறீர்களா ?


அன்னம் :


பாலையும் நீரையும் கலந்து வைத்தால் 

பாலை மட்டும் பிரித்தெடுத்து 

அருந்தும் பண்பு 

கொண்டது அன்னப்பறவை.


அந்த அன்னப் பறவையைப்போல

தமக்கு வேண்டிய கருத்துகளைப் பிரித்தெடுத்து 

படிக்கும்  பண்பு கொண்டவர்கள்

தலை மாணாக்கர்.


பசு தனக்குக் கிடைத்த உணவை எல்லாம்

மேய்ந்து வயிற்றில் சேகரித்து வைத்துவிட்டு

பின்னர் ஓரிடத்தில் படுத்து 

அசை போடுமாம். 


அதே போன்று கிடைத்த கருத்துகளை எல்லாம்

உள்வாங்கிக் கொண்டு பின்னர் 

அவற்றைப் பற்றி சிந்திக்கும் பண்பு 

கொண்டவர் தலை மாணாக்கர்.


மொத்தத்தில் கிடைக்கும் கருத்துகளிலிருந்து

நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளும்

பண்பு தலை மாணாக்கர் எனப்படும் புத்திசாலி

மாணாக்கருக்கு உண்டு.


இடை மாணாக்கர்


 இடை மாணாக்கர் மண் மற்றும் கிளியைப்

 போன்றவர்கள்.


மண் :


 மண் நமது முயற்சிக்கு ஏற்ப பலன்

 கொடுக்கும். அதாவது உழவனின் 

 முயற்சிக்கு ஏற்ப பலன் தரும்.

 ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதற்கு 

 ஏற்ப மாணவரிடமிருந்து பலனை 

 எதிர்பார்க்க முடியும்.

அதற்கு மேல் ஒரு வரி  வராது.


கிளி : 


 சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.

 

கிளி நாம் என்ன சொல்லிக் கொடுக்கிறோமோ

 அதை அப்படியே திருப்பிச் சொல்லிவிடும்.

 படித்துக் கொடுத்ததை அப்படியே 

 மனனம் செய்து ஒப்பித்து விடுவர்.

 சுயமாக வேறு எதுவும் சொல்லத் தெரியாது.

 இது இடை மாணாக்கர் நிலை .


 கடை மாணாக்கர் :


கடை மாணாக்கருக்கு நான்கு எடுத்துக்காட்டுகள் 

பவணந்தியார் கூறுகிறார்.


இல்லிக்குடம்:


இல்லிக்குடம் என்றால் ஓட்டையுள்ள

மண்குடம்.


எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும்

தண்ணீர்பானைக்குள் நிற்காது.

ஒழுகிப் போய்விடும்.


அதுபோல எவ்வளவுதான் சொல்லிக் கொடுத்தாலும்

கடை  மாணாக்கர் மண்டையில் நிற்காது.

திரும்பக் கேட்டால் ஒன்றும் 

சொல்லத் தெரியாது.

எல்லாம் மறந்து போய்விடும்.


ஆடு :

வெள்ளாடு ஒரு இடத்தில் நின்று மேயாது.

நுனிப்புல் மேய்ந்து கொண்டு அலையும்.

 நஞ்சிலும் நாலு வாய்த் தின்னும்.

  அதுபோல ஒன்றையும் உருப்படியாக

 படிக்க மாட்டார்கள்.

 அந்தப் புத்தகத்தையும் இந்தப் புத்தகத்தையும்

 புரட்டிப் புரட்டிப் பார்த்து இறுதியில் ஒரு 

 புத்தகத்தில்  உள்ளதையும் கருத்தூன்றி  

 படிக்க மாட்டார்கள்.

 

எருமை :


எருமை குளத்தில் இறங்கி ஒரு கலக்கு கலக்கிய 

பின்னர்தான் நீரைக் குடிக்கும்.


அதுபோல எதையும் தெளிவாகப்

படிப்பது கிடையாது.

அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம்

என்று எல்லாவற்றையும் ஒரு கலக்குக் கலக்கி

ஒரு தெளிவில்லாமல் படிப்பார்கள்.



நெய்யரி : 

நெய்யரி என்றால் வடிகட்டி.

அந்தக் காலத்தில் பனை மரத்து பன்னடையைப்

பயன்படுத்தி பதநீர் போன்றவற்றை

வடிகட்டுவர்.

அந்த வடிகட்டியில் கசடு மட்டுமே தேங்கி இருக்கும்.

அதுபோன்று படிக்க வேண்டிய நல்லற்றை 

விட்டுவிட்டு  தேவையில்லாததைக் 

கிரகித்து வைத்துக்

கொள்ளும் இயல்பு உள்ளவர் கடை மாணாக்கர்.

மாணவர்களுக்கும் இலக்கணமா?

அப்படியானால்  முதல், இடை , கடை மாணாக்கரில் 

நான் எந்த இலக்கணத்திற்குள் வருவேன் ?


எனக்கு எந்த இடம் கிடைத்திருக்கும் ?


இப்படிப்பட்ட மனவோட்டம்தானே உங்களுக்கும்

ஓடிக்கொண்டிருக்கிறது.


உங்களை நீங்களே வகைப்படுத்திக் கொள்ளுங்கள்.


உங்களுக்கு...என்ற கேள்வி என்காதுகளில் விழுகிறது.


ஆசிரியருக்கும் பகுப்பு இருக்கிறது .

நாளை சந்திப்போம்.






Comments