தந்தை தாய்ப் பேண்
தந்தை தாய்ப் பேண்
"தந்தை தாய்ப் பேண் "
அனைவருக்கும் பிடித்தமான
ஆத்தி சூடி பாடல் வரிகள்.
அடிக்கடி பலர் வாய்களில் வந்து போகும்
வரிகள்.
பெற்றோரை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்
வரிகள்.
பெற்றோரைப் பேணி பாதுகாத்துக் கொள் என்று நினைவு படுத்திக் கொண்டே இருக்கும் வரிகள்.
உன் பெற்றோரை பார்த்துக்கொள் என்று வேறு யாராவது நினைவுபடுத்த வேண்டுமா என்ன?
"மறந்தால்தானே நினைப்பதற்கு..
உன்னை நெஞ்சிலேயே வைத்திருக்கிறேன் "
என்று காதலியிடம் வசனம் பேசுவான் காதலன்.
ஆமாங்க...மறந்தால்தானே நினைவூட்டல் வேண்டும்.
காதலியை நெஞ்சில் வைத்திருக்கும் நாம்
மனைவியை குழந்தைகளை நெஞ்சிலே சுமக்கும் நாம்
பெற்றோரை நெஞ்சில் சுமக்கமாட்டோமா என்ன?
சுமப்பது இருக்கட்டும்.
குறைந்தபட்சம் நினைவிலாவது வைக்கலாமா இருப்போம்.
நாம்தான் பெற்றோரை மறக்கவில்லையே...
பிறகு எதற்கு இந்த நினைவூட்டல் என்கிறீர்களா....?
நினைவில் வைத்திருப்பவர்களுக்கு நினைவூட்டல் தேவை இல்லை.
மறந்தவர்களுக்கு ...நினைவூட்டல் தேவை அல்லவா.?
அதனால் தான் "தந்தை தாய்ப் பேண் "
என்று நினைவூட்டிக்
கொண்டே இருக்கிறார் ஔவை.
வயது முதிர்ந்தாலே பெற்றோர் பிள்ளைகளுக்குச்
சுமையாகிப் போகின்றனர்.
வேண்டாதவர்களாகி விடுகின்றனர்.
தேவையற்றவர்கள் ஆகிவிடுகின்றனர்.
பழைய தேவையற்ற பொருட்கள் போல
வீட்டின் ஓர் ஓரத்தில் முடக்கிப் போடப்படுகின்றனர்.
"உனக்கு ஒன்றும் தெரியாது .
சும்மா கெட " என்று பேசக்கூட
அனுமதி மறுக்கப்படுகிறது.
"காய்ந்த ஓலை விழும்போது பச்சை ஓலை சிரித்ததாம்.
அதற்கு காய்ந்த ஓலை நாளை நாளைத்தான்"
என்றதாம்.
இந்த நாளை நாளைத்தான் என்ற தொடரின் பொருள்
என்ன ?
நாளைக்கு உனக்கும் இதே நிலைதான்
என்பதுதான்.
ஆனால் பெரும்பாலானோர் இதை உணர்வதே இல்லை.
முதுமை வராமல் என்றும் இளமையாய்
யாரும் இருந்துவிடப் போவதில்லை.
நாளைக்காக பொருள் சேர்த்து
வைப்பதற்காகதான் இந்த ஓட்டம்.
நமது செயல்கள் எல்லாம் நாளைய
நலன் கருதியே இருக்கும்.
நமது எண்ணங்கள்
நாளைய தினத்தைக் குறித்த
கவலையும் அக்கறையும் கொண்டதாகவே
ஓடிக்கொண்டிருக்கும்.
ஆனால் நாளைக்கு நமக்கும் முதுமை வந்து
முடக்கிப் போடும் என்ற எண்ணம்
மட்டும் பெரும்பாலோருக்கு வரவே வராது.
அப்படிப்பட்ட எண்ணம் வந்திருந்தால்
இப்படிப்பட்ட நினைவூட்டலுக்குத் தேவையே
இருந்திருக்காது.
தனக்கு ஒரு குழந்தை பிறந்துவிட்டால்
போதும்.
தூக்கி வைத்துக் கொண்டாடுவர்.
பார்த்துப் பார்த்து வளர்ப்பர்.
விதவிதமான ஆடைகள் போட்டு
அலங்கரித்துப் பார்ப்பர்.
இதையேதானே உனக்கும் சிறுபிள்ளையாக
இருக்கும்போது உன் பெற்றோர் செய்திருப்பர்.
பிள்ளைகளை அழகுபடுத்திப் பார்த்த நாம் பெற்றோரை அழகுபடுத்திப் பார்த்தோமா ?
பிள்ளைகளை ஊட்டி ஊட்டி வளர்க்கும் நாம் நம் பெற்றோருக்கு என்றாவது ஊட்டி விட்டோமா?
ஆசைப்பட்ட பண்டத்தை எல்லாம் நேரம் காலம் பாராமல் ஓடிப்போய் பிள்ளைகளுக்கு வாங்கி வந்து கொடுக்கிற நாம் பெற்றோர் ஆசைப்பட்டு கேட்ட பொருளை வாங்கிக் கொடுத்தோமா?
குறைந்த பட்சம் உங்களுக்கு ஏதாவது
தின்ன ஆசை இருக்கிறதா?
என்றாவது பெற்றோரிடம் கேட்டோமா?
என் பிள்ளைகள் வளர்கிற வயசு.
அவர்கள் வயதானவர்கள் அவர்களுக்கு எதுக்கு இவைகளெல்லாம்...
உடம்பில்வேறு ஆயிரத்து எட்டு நோய்கள்.
கண்டதையும் தின்று படுத்துகிட்டா யார்
பார்க்கிறது...என்ற கேள்வியைக் குறுக்கே போட்டு தடைபோட்டு வைப்போம்.
இன்றும் பிள்ளைகளைப் படிக்க வைத்து,
நிலபுலனை விற்று வேலை வாங்கிக் கொடுத்து
திருமணம் செய்து வைத்துவிட்டு,
அரைக்கிலோ திராட்சைப்பழம் வாங்கி வந்து
தரமாட்டானா....?
தன்னை மாதத்திற்கு ஒரு நாளாவது
வந்து பார்க்க வரமாட்டானா என ஏங்கும் பெற்றோர்
எத்தனை எத்தனை பேர்?
லட்சக் கணக்கில் செலவு செய்து
படிக்க வைத்துவிட்டு கையில்
ஒரு காசு இல்லாமல் ...மாசாமாசம்
ஒரு ஆயிரம் ரூபாயாவது அனுப்பு தம்பி
என்று பெற்ற பிள்ளையிடம் கெஞ்சும்
பெற்றோர் எத்தனை எத்தனை பேர் ?
குளிராக இருக்கிறது. போர்த்திக்க ஒரு கம்பளிப் போர்வை
வாங்கித் தரமாட்டார்களா என்ற ஏக்கத்தோடு
மேலாடையை இழுத்துப் போர்த்தி முடங்கிக்
கிடக்கும் பெற்றோர்
எத்தனை எத்தனை பேர் ?
இவற்றை எல்லாம் பார்த்ததால்தான்
ஔவை தந்தை தாய்ப் பேண் என்று
நமக்கு நினைவூட்டுகிறாரோ?
நமக்கு எவ்வளவு இருந்தாலும் திருப்தி
ஏற்பட்டு விடுவதில்லை.. ஒன்று கிடைத்தால்
இன்னொன்றின்மீது ஆசை.
ஆசை...ஆசை...ஆசை...
இந்த ஆசையால் நிகழ்கால நிம்மதியைத்
தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
உறவுகளைத் தொலைத்துவிடுகிறோம்.
இவைமட்டுமல்ல....இதுவரை பாதுகாப்பளித்து வந்த பெற்றோரையும் தொலைத்து விடுகிறோம்.
நமது மகிழ்ச்சியைத் தவிர நம்மைச் சுற்றி
இருக்கிறவர்கள் மகிழ்ச்சி கண்ணுக்குத்
தெரிவதில்லை.
பெரும்பாலும் நம்பிள்ளை நம்மனைவி
நலனுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறோம்.
நமக்கு உயிர் தந்த தாய்,தந்தை
நலனைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.
என்றாவது ஒருநாள் துன்பம் வரும் நேரத்தில்தான்
தொலைத்தவர்கள் நினைவுக்குவர அவர்களை நாடி ஓடுகிறோம்.
ஆறுதல் தரமாட்டார்களா என ஏங்குகிறோம்.
இருக்கும் வரை பெற்றோர் கண்ணுக்குத் தெரிவதில்லை.
அவர்கள் அருமை புரிவதில்லை.
அதனால்தான் நமக்காகவே வாழ்ந்து நம் நலனுக்காகவே தங்கள் கைகளில் இருந்த
பொன் பொருளை இழந்து ,
இறுதியில் தன் பிள்ளை
ஒரு வாய் சோறு தரமாட்டானா என ஏங்கும்
நிலைக்கு பெற்றோரை விட்டுவிடாதீர்கள்.
அவர்களைப் பேணிப் பாதுகாத்து
உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள் என்று நினைவூட்டுகிறார்
ஔவை.
உன் தாய் தகப்பனை நன்றாகப்
பாருடா என்று யாரும்
நினைவூட்ட வேண்டுமா என்ன?
"தந்தை தாய்ப் பேண்"
Comments
Post a Comment