தோற்றவர் வென்றவர் ஆவரோ
வெற்றி பெற்றவரைத் கொண்டாடும் உலகு தோற்றவரைக் கண்டு கொள்வதில்லை.
ஆனால் தோல்வியைத் தழுவாமல் வெற்றி பெற்றவர் எவரும் உண்டோ என்றால்
அதுவும் இல்லை.
பலமுறை தோற்று எழுந்து வந்து வரலாற்றில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர்கள் உண்டு.
தோற்கலாம். தப்பில்லை. ஆனால் அந்தத் தோல்வியும் புறமுதுகிட்டு ஓடும்படியாக இருக்கக்கூடாது.
வீழ்ந்தாலும் மறுபடியும் எழுந்து நிற்பேன்
என்ற என்ற தன்னம்பிக்கை இருப்பவர்களுக்கு வீழ்வது ஒரு
சாதாரண நிகழ்வு.
மறுபடியும் எழும்பி புது உற்சாகத்தோடு களம் காண்பர்.
ஆனால் இங்கு ஒருவர் போரில் தோற்று விட்டார்.
புறமுதுகில் விழுப்புண்.
ஏன் புறமுதுகிட்டு ஓடிவிட்டாரா என்பீர்கள்.
அதுதான் இல்லை.
மார்பில் தைய்த்த அம்பு புறமுதுகு வழியாக
வெளியே வந்துவிட்டது.
இப்போது புறமுதுகிலும் காயம்.
வீரனுக்கு அழகு மார்பில் விழுப்புண்
ஏற்பட்டு மாண்டு போவது.
ஆனால் இந்த மன்னன் நல்லவீரன்.
அவனுக்கு புறமுதுகிலும் விழுப்புண் ஏற்பட்டுவிட்டது.
தாங்கிக் கொள்ள முடியவில்லை.
மானம் போய்விட்டதாக உணர்ந்தான்.
அப்படியே வடக்கிருந்து உயிரை விட்டுவிட்டான்.
வெற்றியைக் கொண்டாடும் உலகில்
தோற்றவரைக் கொண்டாடவும் ஒரு ஆள் இருக்கத்தான் செய்கிறார்.
தோற்றவரைக் கொண்டாடினார் வெண்ணிக்குயத்தியார் என்ற பெண்பாற் புலவர்.
வெண்ணிப் பறந்தலை என்ற இடத்தில் நடைபெற்ற போரில் சோழ மன்னன் கரிகாலன் வெற்றி பெற்று விட்டான் .அந்த வெற்றியைக் கொண்டாடும் விழா அன்று அவையில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது!
புலவர்கள் பலர் அவன் வெற்றியைப் பாடி பாராட்டிப் பரிசு பெற்றுச் சென்று கொண்டிருந்தனர். எல்லோருடைய பாடல் களும் அந்தப் போரில் வெற்றி பெற்றவனாகிய கரிகாலனையே சிறப்பித்துப் பாடியவையாக இருந்தன.
இறுதியாக வெண்ணிக்குயத்தியார் என்ற ஒரு புலவர் வந்தார்.
, “கரிகால் வளவ! நீ இந்தப் போரிலே வெற்றிபெறவில்லை! தோற்றுவிட்டாய்” என்னும் கருத்தை அமைத்துத் துணிச்சலாக ஒரு பாடலைப் பாடிவிட்டார்.
பாடல் இதோ உங்களுக்காக...
"நளியிரு முந்நீர் நாவாய் ஒட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ
சென்றமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக்கிருந்தோனே"
.புறநானூறு - 66
நளியிரு -நீர்செறிந்த,
முந்நீர் -கடல்,
நாவாய் - கப்பல்,
வளிதொழில் ஆண்ட - காற்றை ஏவல் கொண்ட
உரவோன் -வல்லமை மிக்கவன்,
அமர்க் கடந்த - போரில் வென்ற,
கலிகொள் -ஆரவாரமிக்க,
யாணர் -பெருகி வளரும் புது வளம், வடக்கிருந்தோன் -பெருஞ்சேரலாதன்
பாடலைக் கேட்டதும் அனைவரும்
வாயடைத்துப் போயினர்.
என்ன...புலவர் சுயநினைவற்றுப் பாடுகிறாரா என்று ஒருவர் முகத்தை
மற்றொருவர் பார்த்துக் கொண்டனர்.
கரிகாலனுக்குச் சினம் வந்துவிட்டது “புலவரே! நீங்கள் சுய நினைவோடுதான் இதனைக் கூறுகிறீர்களா? யார் முன் கூறுகிறோம், என்ன கூறுகிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்த்துதான்
இவ்வாறு பாடியிருக்கிறீரா '
கோபமாகக் கேட்டான் கரிகாலன் .
வெண்ணிக்குயத்தியாரோ
மெதுவாக புன்னகைத்தார்.
"!மன்னா!உன்னுடைய வெற்றி வாளின் வெற்றி.
அவன் உயிர் செத்துவிட்டது என்னவோ மெய்தான் அரசே! ஆனால், அவன் புகழ் என்ற உயிர் உன்னாலும் வெல்ல முடியாத ஆற்றலோடு இப்போதுதான் பிறந்திருக்கிறது.
பெருஞ்சேரலாதனும் உன்னைப் போலப் பேரரசன்தான். போர் நடந்து கொண்டிருக்கும்போதே மார்பில் தைத்த அம்பு முதுகிலே ஊடுருவி நுழைந்துவிட்டதனால் அவன் இறந்து போகவில்லை .
புறப்புண்பட்ட நானும் ஒரு வீரனா? எதற்காக மானமிழந்த நான் உயிர் வாழ வேண்டும்? என்று வடக்கிருந்து உயிர் துறந்தான். வெற்றி தோல்வியைவிட, ஏன்? உயிரைவிட அவனுக்கு மானமே பெரிதாகத் தோன்றியது . தோற்று இறந்தானில்லை அவன். தன்மானத்தைக் காப்பதற்காகத் தன்னைத்தானே கொன்று கொண்டான். உன் வீரர்களோ, நீயோ அவனைக் கொன்று பெற்றதல்ல இந்த வெற்றி.
அவன் மானத்தின் வெற்றியை உனக்கு விட்டுக்கொடுக்க விரும்பவில்லை . உள்ளத்தால், ஆன்மாவால், உயரிய புகழால், வெற்றிக்கும் மேலான வெற்றியை அவன் தன் உயிரைக் கொடுத்து அடைந்துவிட்டான்."
என்று சொல்லி முடித்தார் புலவர்.
.
‘நல்லவனிடம் வென்றவன் தான் தோற்றுப் போகிறான். நல்லவனோ தோற்றாலும் வென்று விடுகிறான். " என்ற புலவரின் வாக்கில் உண்மை இருந்ததை அறிந்த கரிகாலன் சட்டென்று அவையிலிருந்து
எழுந்து போய்விட்டான்.
உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்.
அருமையான பாடல் .
வெண்ணிக் குயத்தியாரின் மாறுபட்ட சிந்தனையைச் சுமந்து நிற்கும்
மறக்க முடியாத பாடல் வரிகள்.
"நின்னினும் நல்லன்.....
புறப்புண் நாணி வடக்கிருந்தோனே"
Comments
Post a Comment