மகிழ்ச்சிக்கான அளவுகோல் எது

மகிழ்ச்சிக்கான அளவுகோல் எது

கொண்டாட்டங்களும் குதுகலமும்

இல்லாமல் வாழ்க்கை இல்லை.

பிறந்த நாளில் நாலுபேர் 

வாழ்த்திவிட்டால் அதில் மனம்

மகிழ்ச்சியடைகிறது.

விரும்பிய உணவுப் பொருளை வாங்கி

உண்டுவிட்டால் ....

கையை மணத்துப் பார்த்து பார்த்து

மகிழ்கிறோம்.

உறவினர்கள் வீட்டிற்கு வந்துவிட்டால்

விழுந்து விழுந்து உபசரித்து

நம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறோம்.

தேர்வில் வெற்றிபெற்று விட்டால்...

ஏதோ இமாலய சாதனை படைத்துவிட்டது

போன்று துள்ளிக் குதித்து

மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறோம்.


இரண்டு குடம் தண்ணீர் கிடைக்கும்

ஊரில் மூன்று குடம் தண்ணீர் 

கிடைத்துவிட்டால்....

அதனைச்

சொல்லிச் சொல்லி மகிழ்கிறோம்.

புது சட்டை அணிந்துவிட்டால்....

நாள்முழுவதும் ஏதோ ஒரு மகிழ்ச்சி

வந்து தொற்றிக்கொண்டு 

ஆகாயத்தில் மிதப்பது போன்று

உணர்கிறோம்.

புதிதாக குளிர்சாதனப்பெட்டி வாங்கிவிட்டால்....

திறந்து திறந்து பார்த்து

காற்றைத் குடித்து  மகிழ்கிறோம்.


நாலு கிரவுண்ட் நிலம் வாங்கிவிட்டால்...

வாழ்க்கையில் ஏதோ ஒரு பெரிய

சாதனை புரிந்துவிட்டது போல

நிலத்தைப் பார்த்துப் பார்த்துப்

பெருமிதம் கொள்கிறோம்.


வாடகைவீட்டில் வாழ்ந்த நாம்

சொந்தவீடு வாங்கி குடியேறிவிட்டால்...

ஒரு வாரத்திற்குக் கால் தரையில்

படுவதே இல்லை.

துடைத்துத் துடைத்து வீட்டைச்

சுற்றிச் சுற்றி வருகிறோம்!


இப்படி சின்னச்சின்ன மகிழ்ச்சியோடு தான்

நம் வாழ்க்கைப் பயணம் நகர்ந்து

கொண்டிருக்கிறது.


நான் இப்போது எழுதியிருப்பவை எல்லாம்

எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும்

செயல்களா?

இதுக்குப் போய் மகிழ்வார்களா?

என்றுகூட ஒரு சிலருக்குத் தோன்றும்.

எண்பது விழுக்காடு மக்கள் இப்படிப்பட்ட

மகிழ்ச்சியை மட்டுமே நுகர முடிகிறது.



மகிழ்ச்சி என்றால் என்ன?


மகிழ்ச்சிக்கான அளவுகோல் எது?


மகிழ்ச்சி ஒரே மாதிரியாக 

இருக்கிறதா?


மகிழ்ச்சி ஆளாளாளுக்கு 

வேறுபட்டுக்கொண்டே

இருக்கிறது.


ஒருவருக்கு மகிழ்ச்சி கொடுக்கும்

ஒரு செயல் இன்னொருவருக்கு மகிழ்ச்சி

தராமல் இருக்கலாம்.


பணம்தான் மகிழ்ச்சியைத் தரும்

என்றால் எல்லா பணக்காரர்களும் மகிழ்ச்சியாக

இருக்க வேண்டுமே!


நூறு கோடி வைத்திருப்பவரைப் பார்த்து

அவனுக்கு என்னப்பா....கையில் பணம்தான்.

காருதான்....சொத்தும் சுகமுமாக வாழ்கிறான்

என்று நினைக்கிறோம்.

ஆனால் அந்தச் சொத்தைக் காப்பாற்ற

அவர்படும் பாடு அவருக்கு மட்டுமே தெரியும்.

இரவுபகலாக தூக்கமில்லாமல் படும்

கஷ்டங்கள் சொல்லி மாளாது.

எனக்கு சந்தோசமே இல்லை என்கிறார் அவர்.


அதற்காக ஒரேயடியாகப் பணம் மகிழ்ச்சியைத்

தரவில்லை என்று ஒதுக்கி வைத்துவிட

முடியாது.

ஒரு பொருட்காட்சி சாலைக்குப் போகிறோம்.

கையில் பணம் வைத்திருப்பவர் தான்

விரும்பிய பொருட்களை கைநிறைய வாங்கி

மகிழ்ச்சியாக வீடு திரும்புகிறார்.

கையில் பணம் இல்லாதவர்

எதுவும் வாங்க முடியவில்லை. ஆசைப்பட்ட

உணவைக் கூட வாங்கி சாப்பிட

முடியவில்லை.

மனம் விரக்தியடைந்து வீடு திரும்புகிறார்.

இங்கே பணம் மகிழ்ச்சியைத் கொடுக்கிறது.


யாருக்கு பணம் மகிழ்ச்சியைக்

கொடுக்கும் என்பதுதான் கேள்வி.

தேவை இருப்பவனுக்கு அந்தத்

தேவையைப் பூர்த்தி செய்ய

பணம் கிடைக்கும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.

தேவைக்கு அதிகமாக பணம் வைத்திருப்பவர்கள்

பணத்தால் பெரிய 

மகிழ்ச்சி கிடைப்பதாக நினைப்பதில்லை.


ஆண்டுக்கு ஒரு புத்தாடை மட்டுமே

வாங்கும் வீட்டிலுள்ள குழந்தைகள்

அதை வாங்கிய நாளிலிருந்து

அணிவதற்கு முன்னரும் அணிந்த

பின்னரும் மகிழ்வதைப் பார்க்கணுமே இதுதாங்க உண்மையான

மகிழ்ச்சி என்று சொல்லத் தோன்றும்.

இதுவும் ஒருவிதமான மகிழ்ச்சிதான்.

மறுப்பதற்கில்லை.

அதற்காக அடிக்கடி புத்தாடை வாங்கி

அணிபவர்கெல்லாம் மகிழ்ச்சி

இல்லையா என்று கேட்கத் தோன்றும்.


கிடைக்காமல் கிடைத்துவிட்டால் அதில்

அதிகப்படியான மகிழ்ச்சி இருக்கும்.

ஒத்துக் கொள்கிறேன்.


ஆண்டின் முந்நூற்று அறுபத்தைந்து

நாட்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்

என்பதுதான் அனைவரின் விருப்பம்.

ஆனால் முடியாத காரியம் .


அதனால் மார்ச் 20 உலக மகிழ்ச்சி 

நாளாக கொண்டாடப்படுகிறது.


சிரிப்பு நாள்,சிந்தனை நாள் என்று

நாளுக்கு ஒரு சிறப்பைக் கொடுத்துவரும்

ஐக்கிய நாடுகள் சபை

 மகிழ்ச்சிக்கும் ஒரு நாளை அறிவித்து 

 நம்மை மகிழ்ச்சியடைய 

 வைத்துள்ளது.


மகிழ்ச்சியைப் பற்றி நமது

பார்வை ஒருமாதிரியாக இருக்க

அவர்கள் கண்ணோட்டத்தில் மகிழ்ச்சி

என்றால் என்ன என்று தெரியுமா?


மகிழ்ச்சி எப்போது கிடைக்கும்

என்று அலசி ஆய்வு செய்தால்

நம் எண்ணத்திற்கும் அவர்களின்

ஆய்விற்கும் நிறைய வேறுபாடுகள்

இருப்பதை அறியலாம்.


தனிமனித சுதந்திரமும் உடல் நலமும்

 சமூக நலனும்  நன்றாக இருக்கும் போதுதான்

 ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்வதாக

 உணரமுடியும்.இதனை நாமும்

 ஓரளவுக்கு ஒத்துக்கொள்ள முடியும்.



இந்த உலக மகிழ்ச்சி நாளில் ஐ.நா

சபை உலக நாடுகளில் ஆய்வு செய்து

ஒரு அறிக்கை வெளியிடுகிறது.

அதன்படி மகிழ்ச்சியான நாடுகளின்

தரவரிசை வெளியிடப்படுகிறது.



அவர்களுடைய கண்ணோட்டத்தில்

மகிழ்ச்சியான நாடுகள் தரவரிசைப்

பட்டியலில் இந்தியாவுக்கு 139 வது

இடமாம்.


மொத்த தர வரிசைப் பட்டியலில் 

உள்ள நாடுகள் 149.


பின்லாந்துதான் மகிழ்ச்சியான நாடுகள்

பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து,

நெதர்லாந்து ஆகிய நாடுகள் முறையே

இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம்

இடங்களைப் பிடித்துள்ளன.


.அவர்கள் மகிழ்ச்சியான நாடு

எது என்று தரவரிசைப் படுத்துவதற்கு

எடுத்துக்கொள்ளப்பட்ட காரணிகள்

எவை எவை என்று கூறுகின்றனர்

என்பதைப் பார்ப்போம்.


தனிமனித சுதந்திரம்,

உள்நாட்டு உற்பத்தி,

ஊழல் குறைவு, 

அரசு எடுக்கும் சமூக நடவடிக்கைகள்,

உடல் நலம்,

மக்களிடம் இருக்கும் பெருந்தன்மையான

குணம் ஆகியவற்றின்

 அடிப்படையில்  மகிழ்ச்சியான

 நாடுகளின் பட்டியல்

தயாரிக்கப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் 

சபை தெரிவித்துள்ளது.



மனநிறைவும் நேர்மறையான

எண்ணமும் இருந்தாலே போதும்.

மகிழ்ச்சியாக வாழலாம் என்பது

சிலரின்  கருத்து.


ஆனால் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு

அரசின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையும்

பாதுகாப்பு உணர்வும் இருந்தாக

வேண்டும் என்கிறது ஐக்கிய நாட்டு

 சபை.அதுவும் மறுக்க முடியாத

உண்மைதான்.

ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்படும்போது

மனம் தானாக மகிழ்ச்சி அடைவது

இயல்பு.

ஊழலில்லா நாட்டில் நேர்மை

இருக்கும். அரசின் திட்டங்கள் எந்தவித

தங்கு தடையுமின்றி மக்களைச்

சென்றடையும்.

மக்களுக்கு அரசின் மீது ஒரு நம்பிக்கை

ஏற்படும்.


இதுவும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான

ஒரு காரணியாம்.

உண்மை.இந்தக் கணிப்பும்

சரியாகத்தான் படுகிறது.


இவை எல்லாவற்றையும் கணக்கிலெடுத்துதான்

உலக மகிழ்ச்சி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு

அரசும் அரசுத்துறை அலுவலர்களும்

முக்கிய காரணமாக அமைகின்றன

என்பது மறுக்க முடியாத உண்மை 

என்பது ஐக்கிய நாடுகளின் சபையின்

கருத்து.



மக்கள் மகிழ்ச்சியாக நிம்மதியோடு

அந்த மகிழ்ச்சியைத் தர வேண்டிய

பொறுப்பு அரசின் கைகளில் உள்ளது.


நம் மகிழ்ச்சி நம் கைகளில்

மட்டும் இல்லை.


அரசும் மக்களும் பொறுப்புணர்வோடு

கடமையாற்றும் போது நாட்டு மக்கள்

மகிழ்ச்சியாக வாழ்வர் என்பது ஆய்வு முடிவு.


பலவகையான தரவுகளைத் திரட்டி

பல்வேறு கோணங்களில் ஆய்வு

செய்துதான் முடிவை வெளியிட்டிருப்பர்.


சரி போகட்டும். இந்த வருடம்

பின்தங்கிவிட்டோம். வரும் வருடம்

மகிழ்ச்சி வராமல் எங்கே போய்விடும்?


நம்பிக்கையோடு  காத்திருப்போம்.


உலக மகிழ்ச்சி நாள் நல்வாழ்த்துகள்!

வாழ்க மகிழ்ச்சியாக!



மகான்கள் வாழ்ந்த பூமியில்

வாழ்வது என்பதே ஒரு மகிழ்ச்சிதான்!


இதைவிட வேறென்ன மகிழ்ச்சி வேண்டும்!















Comments