சான்றோனாக்குதல் தந்தையின் கடனே--
சான்றோனாக்குதல் தந்தையின் கடனே-
ஒரு நாடு சிறப்பாக விளங்க
ஒவ்வொருவருக்கும் ஒரு
கடமை உண்டு. அதை உணர்ந்து
அனைவரும் செயலாற்ற வேண்டும்.
ஒரு மகன் பிறந்ததில் இருந்து
அவனை ஒரு வெற்றிவீரனாக
பார்ப்பதுவரை யார் யாருக்கு
என்னென்ன கடமை இருக்கிறது
என்பதை பொன்முடியார்
என்ற பெண்பாற்புலவர் புறநானூற்றுப்
பாடலில் அழகாகப் பாடியிருப்பார்.
ஒரு பெண்ணுக்கு என்ன கடமை
தெரியுமா ?
ஆண் மகவைப் பெற்றுத்தர
வேண்டுமாம். அத்தோடு அவள்
கடமை முடிந்துவிடவில்லை.
அவனைப் வளர்த்து ,ஆளாக்கி
ஒரு முழு ஆண்மகனாக முன்நிறுத்துவது
வரை ஒரு தாயின் கடமை
இருக்கிறது.
இரண்டாவதாக அந்த மகனை
நற்பண்புகள் மிக்க ஒரு
வீரனாக உருவாக்குதல்
தந்தையின் கடனாம்.
ஒரு மகன் அறிவாளி என்று
பெயர் எடுப்பதற்கும் வீரன்
என்று உலகம் கொண்டாடுவதற்கும்
முக்கிய காரணகர்த்தாவாக
இருப்பவர் தந்தை மட்டும்தான்.
கற்க வேண்டியவற்றை
கற்க வைத்து ஒரு வீரனாக
மாற்றும் பொறுப்பு தந்தைக்கு உண்டு.
மூன்றாவதாக வீரன் என்றால்
போருக்குச் செல்ல வேண்டுமே.
வெறுங்கையோடு போர்க்களம்
செல்ல முடியுமா?
கையில் ஆயுதம் வேண்டாமா ?
அந்த வேலை உருவாக்கித் தரும்
பெரும் பொறுப்பு கொல்லனுக்கு
இருக்கிறது.
சரி கையில் ஆயுதத்தைக் கொடுத்து
நேரே போருக்குச் செல் என்று
அனுப்பிவிட முடியுமா?
போரின் நெறிமுறைகள்,
போரின்போது என்னென்ன செய்ய
வேண்டும் என்னென்ன செய்யக் கூடாது
எப்படி அறவழியில் நின்று
போர்புரிய வேண்டும் என்று
போரின் மாண்புகளைச்
சொல்லி அனுப்ப வேண்டிய
கடமை மன்னனுக்கு உள்ளது.
எல்லாம் கிடைத்துவிட்டது.
போருக்குச் செல்லும் வீரனுக்கு என்று
கடமை எதுவும் இல்லையா?
ஏன் இல்லை.
அவனுக்குத்தானே போரில் பெரும்
பொறுப்பு உள்ளது.
ஆயுதம் மட்டும் கையில்
வைத்திருந்தால் போதாது.
உள்ள வலிமையோடு போரிட்டு
எதிரிகளின் களிறுகளை அழித்து
வெற்றி வாகை சூடி வர
வேண்டும். அதுதான் ஒரு
ஆண்மகனுக்கான கடமை.
கடமையைச் சொல்லித் தரும்
பாடல் இதோ:
"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே"
- புறநானூறு
மகனைப் பெற்று வளர்த்துப் பாதுகாத்தல்
தாயின் தலையாய கடமை.
அவனை நற்பண்புகள் மிக்க ஒரு
வீரன் ஆக்குவது தந்தையின் கடமை.
அவனுக்குத் தேவையான படைக்கருவிகளை
உருவாக்கிக் கொடுத்தல் கொல்லரின்
கடமை.
அவனுக்கு நல்லொழுக்கத்தைக் கற்பித்தல்
மன்னரின் கடமை.
ஒளியுடன் விளங்கும் வாளைக் கையில்
ஏந்தித் தடுத்தற்கரிய போரைச் செய்து
பகைவரின் யானைகளைக் கொன்று
வெற்றியுடன் மீள்வது அம்மகனின்
கடமை.
ஒரு வீரன் வெற்றியோடு திரும்பி
வருகிறான் என்றால் அதில் தாய்,
தந்தை, ஆசிரியர், மன்னன் அனைவருக்கும்
பெரும்பங்கு உண்டு என்பதை
இப்பாடல் மூலம் பொன்முடியார் என்ற புலவர் தெளிவுபடுத்தியுள்ளார்
Comments
Post a Comment