சாண் ஏறினால் முழம் சறுக்குமா
சாண் ஏறினால் முழம் சறுக்குமா
சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது.
நம்ம பொழப்பே இப்படித்தான் இருக்கிறது.
இந்த லட்சணத்தில் என்று முன்னேறுவது?
என்று சலிப்பாக இருக்கிறீர்களா?
ஏன் இந்த சலிப்பு?
சாண் ஏறி முழம் சறுக்கினால்
வெற்றி பெற முடியாது என்று யார் சொன்னது?
முதலாவது சொலவடையை சற்று மாற்றிப் பாருங்கள்.
நீங்கள் வெற்றி பெறப் போவது உறுதி.
ஓணான் ஒன்று எத்தனைமுறை சறுக்கினாலும் நான் பனை மரத்தில் ஏறியே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்து ஏறிக்கொண்டிருந்து.
அதைப் பார்த்த ஒரு குரங்கு" அட முட்டாள்
ஓணானே!
எதற்காக சொரசொரப்பாக இருக்கும் பனை மரத்தில் ஏறி இவ்வளவு கஷ்டப் பட்டுக்கொண்டிருக்கிறாய்?
இப்படி வழுக்கி வழுக்கி ஏறி என்றுதான்
பனை மரத்து உச்சியைப் போய் சென்றடைவாய் "என்று கிண்டலடித்தது.
தலையை நிமிர்த்தி பார்த்த ஓணான்"அட...நீ போவியா
எனக்கு எல்லாம் தெரியும் "என்று சொல்லியபடி மறுபடியும் மறுபடியும்
பனை மரத்தில் ஏறியது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு புலவர் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்.
அவர்
மனதில் இப்போது வேறு ஒரு மனக்கணக்கு ஓடியது.
அவர் மனதிற்குள் ஓடிய கணக்கு பாடலாக வெளி வந்தது.
பாடல் இதோ உங்களுக்காக....
"முப்பத்தி ரண்டு முழம்உள முட்பனையைத்
தப்பாமல் ஓந்தி தவழ்ந்தேறிச். - செப்பமுடன்
சாணேறி நான்கு விரற்கழியும் என்பரே
நாணா தொருநாள் நகர்ந்து "
என்று காரி நாயனார் கணக்கதிகாரம்
என்ற நூலில் பாடி வைத்திருக்கிறார்.
இப்போது காரி நாயனாரின் கணக்குக்கு வாருங்கள்.
ஒரு முழம் என்றால் இரண்டு சாண்.
ஒரு சாண் என்றால் பன்னிரண்டு விரல் அளவு
அப்படியானால் இரண்டு முழம் என்றால்
இருபத்தினான்கு விரல் அளவு
என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பனைமரத்தினுடைய உயரம் 32 முழம்.
ஓணான் ஒரு நாளைக்கு ஒரு சாண் ஏறி
நான்கு விரல்கடை தூரம் இறங்குகிறது.
அதாவது பன்னிரண்டு விரல்கடை தூரம் ஏறி 4 விரல்கடை தூரம் இறங்குகிறது.
அப்படியானால் ஒரு நாளைக்கு 8 விரல்கடை
தூரம் ஏறுகிறது இல்லையா?
மறுபடியும் கணக்கிற்கு வாருங்கள்.
பனை மரத்தின் மொத்த உயரம்
32 முழம் என்பதால் அதனை விரல்கடை
அளவாக மாற்றுவோம்.
1 முழம் = 24 விரல்கடை தூரம்
அப்படியானால் 32 முழம்
என்பது 32 × 24 = 768.
பனை மரத்தின் மொத்த உயரம்
768 விரல்கடை அளவு.
இப்போது பனை மரத்தின் மொத்த உயரத்தை
விரல்களை அளவாக மாற்றியாயிற்று இல்லையா?
ஓணான் 1 நாள் கடக்கும் தூரம் 8 விரல்கடை அளவு.
8 விரல்கடை தூரத்தை ஒருநாளில் கடந்தால் 768 விரல்கடை தூரத்தை
எத்தனை நாட்களில் கடக்கும்?
768 ஐ 8 ஆல் வகுத்தால் எளிதாக விடை கிடைத்துவிடும்.
768÷8=96
தொண்ணூற்று ஆறு .
அதாவது ஓணானானது 768 விரல்கடை தூரத்தைக் கடக்க 96 நாட்கள் எடுத்துக் கொண்டது.
எத்தனை முறை வழுக்கினாலும்
ஓணான் பனை மரத்து உச்சிக்குச்
சென்று ஒய்யாரமாய் தன் தலையை நிமிர்த்திப் பார்த்தது.
ஓணான் கணக்கு புரிந்துவிட்டது.
கூடவே இன்னொரு கேள்வியும்
புரிய வேண்டியிருக்கிறது.
வேறு என்ன கேள்வி இருக்கிறது?
சாண் ஏறினால் முழம் எப்படி சறுக்க முடியும் ? இதுதான் அந்தக் கேள்வி.
சாண் ஏறினால் அதைவிட குறைவான
தூரம் அதாவது நான்கு விரல்கடை அளவு அல்லது மூன்று விரல்கடை அளவு தானே சறுக்க முடியும்.
அதைவிட கூடுதல் தூரம் எப்படி சறுக்க
முடியும்?
அப்படியானால் சாண்ஏறினால் முழம் சறுக்கிறது என்று சொல்லி
நம்மை நாமே ஏமாற்றி அப்படியே உடைந்து
போய் முயற்சியைக் கைவிட்டுவிட
சொல்லப்பட்ட சொலவடையாக இது இருக்குமோ?
இருக்கலாம்... இருக்கலாம்.
சொலவடையை சற்று மாற்றிப் பாருங்கள்.
விரல்கடை அளவாக மாற்றுங்கள்.
சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது
என்ற கவலை இனி வராது.
கடைசிவரை முயற்சி செய்தால் நாம் விரும்பிய எல்லையைத் தொட்டு விடலாம்.
இதைத்தான் இந்த ஓணான்
நமக்குச் சொல்லித் தந்திருக்கிறது.
வெற்றி வேண்டுமா?
சறுக்குகிறது என்று கவலைப்படாதே.
தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.
கணக்கோடு சேர்த்து வெற்றிக்கணக்கையும் சொல்லித் தந்திருக்கிறார் காரி நாயனார்.
நல்ல கணக்கு இல்லையா?
Comments
Post a Comment