இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை

ஐயனாரிதனார் என்னும் சேர அரசர் தாம் இயற்றிய புறப்பொருள் வெண்பா மாலையில்,


"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி"

என்று தமிழின் தொன்மையைப் பற்றி

பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.



மனித குலத்தின் வரலாற்றை பழைய கற்காலம், உலோக காலம் மற்றும் தற்காலம் என மூன்று வகையாக வகைப்படுத்துவர்.


 கற்காலம் என்பது கல் கருவிகள் பயன்படுத்தப்பட்ட காலம். 


உலோகக் காலம் என்பது உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தத் தொடங்கப்பட்ட காலம்.


 தற்காலம் என்பது நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள தற்போதைய காலத்தைக் குறிக்கிறது. 



புதிய கற்காலத்தில் வேட்டையாடிய சமூகங்கள் விவசாயத்தை நோக்கி மாறியதுடன், நிலையான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கத் தொடங்கினர்.


உலோக காலம் 

உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கருவிகள், ஆயுதங்கள் போன்றவை தயாரிக்கத் தொடங்கப்பட்ட காலம்.

செம்பு, வெண்கலம், இரும்பு போன்ற உலோகங்களின் பயன்பாட்டின் அடிப்படையில் இந்த காலம் செம்பு காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் என அழைக்கப்படுகிறது.

உலோகக் கருவிகளின் பயன்பாடு தொடங்கியதோடு உலோக காலம் முடிவடைந்து, நவீன வரலாறு தொடங்கியது.


தற்காலம் 

தொழில்நுட்ப வளர்ச்சி மிக வேகமாக வளர்ந்து வரும் தற்போதைய காலத்தைக் குறிக்கிறது.

கற்கால, உலோக காலங்களுக்குப் பிறகு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அபார வளர்ச்சி அடைந்து புதிய மாற்றங்களை கொண்டு வந்த காலம்.


இந்தக் காலங்களில் எப்போது தமிழர் வாழ்க்கை தொடங்கியிருக்கும் என்ற கேள்விக்கு,

ஐயனாரிதனார் என்னும் சேர அரசர் தாம் இயற்றிய புறப்பொருள் வெண்பா மாலையில்,


"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி"

என்று தமிழின் தொன்மையைப் பற்றி

பெருமையாகக் குறிப்பிட்டு

நமது கேள்விக்கு விடை தந்துள்ளார்.

இப்படி பொதுவாகக் கூறினால் போதுமா?

இதற்கு ஆதாரம் வேண்டுமா என்ற கேள்வி நம் அனைவர் மனதிலும் எழுகிறதல்லவா?



தற்போது கிடைத்த ஆராய்ச்சியின் படி

ஏறத்தாழ 5300 ஆண்டுகளுக்கு

முன்னரே தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பது உறுதியாகியுள்ளது.


இரும்பின் காலம் 5300 ஆண்டுகள் என்றால்

அந்தக் காலத்திலேயே தமிழர் வாழ்ந்திருக்கிறனர் என்ற செய்தியை

சான்றாக நம் முன்னர் வைக்கிறார் 

உலோச்சனார் என்ற புலவர்.


பாடல் உங்களுக்காக...


"இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னை

நீலத்து அன்ன பாசிலை அகம்தொறும்,

வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்

பொன்னின் அன்ன நறுந் தாது உதிர,

புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல்

வரி வண்டு ஊதலின், புலி செத்து வெரீஇ,

பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவத்

தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண்,

மல்லல்அம் சேரி கல்லெனத் தோன்றி,

அம்பல் மூதூர் அலர் எழ,           

சென்றது அன்றோ, கொண்கன் தேரே?


       நற்றிணை - பாடல்- 249

        

இரும்பு போல் கருநிறக் கிளைகளை உடையது புன்னை மரம். 

நீலமணி போன்ற அதன் பசுமையான இலைகளுக்கு இடையே அது

வெள்ளி போல் விளங்கும் அழகிய பூக்களைப் பூத்திருக்கிறது.


பூவிலிருந்து பொன் போன்ற அதன் மகரந்தப் பொடிகள் கீழே உதிருகின்றன. கீழே உதிரும் அந்த மகரந்தப் பொடிகள் மரத்தின் கீழே கிடக்கும் வண்டுகள் மீது விழுகின்றன.

அதனால் வண்டுகளின் 

உடல் புறத்தே கோடுகள்

கொண்டதாகக் காட்சியளிக்கிறது.

மகரந்த மணம் கமழும் வண்டுகள் 

அந்தப் பூக்களில் உள்ள தேனை உண்ண உதவுகின்றன.

வண்டுகள் ஊதும் அந்த ஒலி 

கேட்போரை புலியின் ஒலியோ 

இது என்று

எண்ணி மருள வைக்கும் .


அந்த ஒலி  தலைவனின் தேரில் பூட்டிய குதிரையின் காதுகளில் விழ,குதிரை

தாவி ஒடி வரும்.

 

வளம் மிக்க தெருவில் 

‘கல்’ என்னும் ஒலியுடன் 

முன்பே என் காதல் பற்றி 

அலம்பல் பேசி 

முணுமுணுத்துக்கொண்டிருந்தனர்.


தற்போது தெரு மக்கள் வாய்விட்டு பேசி 

அலர் தூற்றும்படியான நிலையாயிற்று"

என்று வருந்துகிறாள்  தலைவி.


இப்படித் தலைவி தோழியிடம் 

சொல்லிப் புலம்புவதாக அமைந்த

இப் பாடலில் வரும் 

"இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை"

என்ற வரி இரும்பின் பயன்பாடு

தமிழரிடையே சங்க காலத்திலேயேஇருந்திருக்கிறது என்பதை

உறுதிப்படுத்தி இருக்கிறது.


இப்போது தமிழகத்தில் 

கிடைத்த இரும்பு 5300 ஆண்டுகளுக்கு

முன்பு உள்ளது என்றும்

உறுதி செய்யப்பட்டிருப்பதால்

தமிழர் வரலாறு கிமு என்பது உறுதியாகிறது.


இப்போது ,

"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே 

வாளொடு முன்தோன்றி மூத்தகுடி 

எங்கள் தமிழ்க்குடி "என்ற

பாடல் வரி மிகைப்படுத்தி எழுதப்பட்டதல்ல....

தமிழர் வரலாறு 

மிகமிகப் பழைமையானது

என்ற உண்மை புரிந்திருக்கும்.


இனி புன்னம்பூவைப் பார்க்கும்போதெல்லாம் 

"இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை"என்ற பாடல் வரியும் அதில் பொதிந்துள்ள தமிழரின் வரலாறும் நினைவில் வராமலா போய்விடும்.




Comments