ஈரிரவு தூங்காது என் கண்
ஈரிரவு தூங்காது என் கண்
இந்த உலகில் தோல்வியைத் தழுவாதவர்
எவரும் இருக்க முடியாது.
வெற்றி பெற்றவர்களின் வரலாற்றினைப் புரட்டிப் பார்த்தால் இந்த உண்மை புரியும்.
தோல்வியடைந்து விட்டோமே என்று
விரக்தியில் முட்டைக் கட்டிக்கொண்டு
முடங்கிக் கிடந்தால் சமூகம் நம்மைத் திரும்பிப் பார்க்காது .
காலமும் கண்களை மூடிக்கொண்டு எங்கேயோ ஓடிவிடும்.
தோல்வியடைந்து விட்டாயா?
துடைத்துப் போட்டுவிட்டு மறுபடி ஓடு.
மறுபடி தேடு. தேடலும்
ஓயா ஓட்டமும்
நம்மை சிகரத்தில் கொண்டு நிறுத்தி
அழகு பார்க்கும்.
இது எல்லாத் துறைகளிலும் நடக்கும் நடந்து
கொண்டிருக்கும் வெற்றிக்கான
போராட்டம்தான்.
இது படைப்பாளிகள் அனைவருமே போராளிகள் தான்.
போராளிகள் எந்த இடத்திலும் தோற்றுப் போக விரும்புவதில்லை.
போராளிகளிடம் மட்டும்தான் அந்தப் பண்பு இருக்கிறதா?
தனிமனிதனிடமும் அந்தப் பண்பு உண்டு.
யாரும் இன்னொரு மனிதனிடம் தோற்றுப்போக
விரும்புவதில்லை.
அப்படித் தோன்றும்போவது தன்
தன்மானத்திற்கு இழுக்கு என்று நினைப்பர்.
அதுவும் தன்னைவிட வயதில் சமூக நிலையில்
பொருளாதாரத்தில் அறிவில் குறைந்தவர்களிடம் தோற்றுப் போவதற்கு மனம் எந்த இடத்திலும் இடம் கொடுக்காது.
நானாவது இவனிடம் தோற்றுப் போவதாவது.. ...ஒரு அகந்தை.
தான் என்ற ஆணவம் இந்த இடத்தில்தான் வந்து தலை தூக்கி நிற்கும்.
அழிவுக்கு முன்னானது அகந்தை.
அகந்தையில் வாழ்ந்தவர் ஒருவர்கூட இருக்கமுடியாது.ஆனால் வீழ்ந்தவர்கள் ஓராயிரம் பேரை நம்மால் அடையாளம் காட்டமுடியும்.
சாதாரண மனிதர் முதல் பெரிய அறிஞர்கள் வரை அனைவரையும் சீண்டிப் பார்த்திருக்கின்றது இந்த அகந்தை. ஔவையாரையும் விட்டு வைக்கவில்லை.ஔவையின் இந்த அகந்தையை அழிக்க
மாடு மேய்க்கும் சிறுவன்
ஒருவன் வந்துவிட்டான்.
நாவற்பழம் வேண்டும் என்று கேட்ட
ஔவையிடம் சுட்டப்பழம் வேண்டுமா
சுடாதப் பழம் வேண்டுமா என்று கேட்டுக் திகைக்க வைத்துவிட்டான்.
நாவற்பழத்தில் ஏது சுட்டப்பழம்?
நாவற்பழத்தைப் பறித்துப் போடுகிறான்.
ஔவை குழப்பமான மனநிலையில்
பழத்தை எடுத்து அதில் ஒட்டியிருக்கும் மண் போவதற்காக ஊதி ஊதி சாப்பிடுகிறார்.
மேலே பார்க்கிறார் ஔவை
பாட்டி பழம் சுடுகிறதோ என்று சொல்லி
சிரிக்கிறான் சிறுவன்.
ஓ...கனிந்த பழத்தைத் தான் சிறுவன் சுட்டப்பழம் என்று சொல்லியிருக்கிறான் என்பது புரிகிறது.
இதுவரை தான் மட்டுமே அறிவாளி என நினைத்திருந்த ஔவையைச்
சுட்டுப் பழம் வேண்டுமா சுடாதப்பழம் வேண்டுமா என்று கேட்டு ஒரு நிமிடம் திக்குமுக்காட வைத்துவிட்டான்.
சுட்டதும் சுடாததும் எது எனப் புரிய வைத்து
திணர வைத்து விட்டான்.
சொற்களால் கம்பரையே மடக்கிய கூனக்கிழவியை ஒரு சிறுவன் சொல்லால்
திருப்பியடித்து விட்டான்.
இனி ஔவைக்கு எப்படித் தூக்கம் வரும்.?
என் தூக்கம் தொலைந்தது என்று ஔவையே புலம்புகிறார்.
பாடல் உங்களுக்காக...
"கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி
சிறுகதலித் தண்டுக்கு நாணும் - பெருங்கானில்
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றது
ஈரிரவும் தூங்காது என் கண்"
"பெரிய பெரிய கருங்காலி மரங்களையெல்லாம் வெட்டித் தள்ளிய உறுதியான இந்த இரும்புக் கோடாலி, இளங் கதலி வாழைத்தண்டை வெட்டும்போது வளைந்து விடுகிறது. அதுபோல இந்தப் பெருங்காட்டில் மாடு மேய்க்கின்ற இந்தச் சிறுவனிடத்தில் நான் தோற்றுப்போய் நிற்கிறேன்.இந்தத் தோல்வி இன்னும் இரண்டு நாட்களுக்கு என்னைத் தூங்கவே விடாது"என்று புலம்புகின்றார் ஔவையார்.
"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு" என்பார்கள்.
நான்தான் உயர்ந்தவன்.
வல்லவன்.
அறிவாளி .
பலசாலி என்று யாரும்
நினைத்துவிட முடியாது.
நமக்கு மிஞ்சியவர் ஓராயிரம் கோடி உலகில் உண்டு.
அப்படிப்பட்ட நினைவு இருந்தாலே வீணான தற்பெருமைகள் வராது.
"நிலை உயரும் பொழுது பணிவு வந்தால், உலகம் உன்னை வணங்கும்" என்ற கண்ணதாசனின் பாடல் வரிதான் இங்கு நினைவுக்கு வருகிறது.
"காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றது
ஈரிரவும் தூங்காது என் கண்"
என்னவொரு அருமையான வரிகள்!
ஔவையை மட்டுமல்ல.
நம்மையும் தூக்கம் கெடுக்க வைத்த வரிகள்!
Comments
Post a Comment