விழுந்தாலும் வெறுங்கையோடு எழும்பாதே
விழுந்தாலும் வெறுங்கையோடு எழும்பாதே
விழுந்தாலும் வெறுங்கையோடு எழும்பாதே!
வாழ்க்கை என்பது வெற்றிகளால் மட்டுமே நிரம்பிய பாதையல்ல.
வெற்றிக்கும் தோல்விக்கும் மாறி மாறி வாய்ப்பளிக்கும் ஒரு பயணம். அந்தப் பயணத்தில் நாம் தடுமாறலாம்.
தடம்மாறித் தவறிவிழலாம்.
மறுபடியும் மறுபடியும் தோல்விகளைச் சந்திக்கலாம்.
ஆனால் விழுவது தவறல்ல; விழுந்த இடத்திலேயே கிடப்பதுதான் தவறு.
தோல்வியிலிருந்து ஒரு பாடத்தையாவது, ஒரு அனுபவத்தையாவது அல்லது ஒரு புதிய நம்பிக்கையையாவது எடுத்துக்கொண்டு எழ வேண்டும்.
"வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பது மரணமும் அல்ல: தொடர்ந்து முன்னேறுவதற்கான தைரியமே முக்கியமானது."என்பார்
வின்ஸ்டன் சர்ச்சில்
வெற்றி நம்மை மகிழ்விக்கிறது; ஆனால் தோல்விதான் நம்மைச் செதுக்குகிறது. தோல்வி என்பது முற்றுப்புள்ளி அல்ல.
ஒரு காற்புள்ளியைப் போட்டுவிட்டு தொடர்ந்து போய்க்கொண்டே இருக்க வேண்டும் .
ஒரு மாணவன் தேர்வில் தோல்வியடைந்தால், அந்தத் தோல்வி அவனிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறது: “எங்கே தவறு செய்தாய்?” என்பதுதான் அந்தக் கேள்வி.
எங்கே தவறு செய்தேன்.... எங்கே தவறு செய்தேன் என்று அலசி ஆராய்ந்து அதற்கான விடையைக் கண்டுபிடிப்பவன் மட்டுமே மறுபடி தோல்வியைச் சந்திக்காமல் வெற்றி பெற முடியும்.
தோல்வி நமக்குக் கற்றுத்தரும் பாடங்கள், வெற்றி கற்றுத்தரும் பாடங்களை விட ஆழமானவை. வெற்றி நம்மை உலகிற்கு அறிமுகப்படுத்தலாம்; ஆனால் தோல்வி நம்மை நமக்கே அறிமுகப்படுத்துகிறது.
நாம் யார் என்று அறிய வைக்கிறது.
"நான் தோல்வியடையவில்லை. பலனளிக்காத 10,000 வழிகளைத்தான் நான் கண்டறிந்துள்ளேன்.” என்பார் தாமஸ் எடிசன்.
எடிசனின் இந்தக் கருத்து தோல்வியைப் பார்க்கும் பார்வையையே மாற்றுகிறது. முயற்சி தோல்வியடைந்திருக்கலாம்; ஆனால் முயற்சியாளன் தோல்வியடைந்துவிட்டான் என்று சொல்ல முடியாது.
மரத்தில் ஏறும் குழந்தை பலமுறை கீழே விழுந்தாலும் மீண்டும் முயற்சி செய்கிறது. நடக்கக் கற்றுக்கொள்ளும் குழந்தை விழுந்ததற்காக நடப்பதை நிறுத்துவதில்லை. அதுபோல வாழ்க்கையிலும் நாம் விழுந்தால் மீண்டும் எழ வேண்டும்.
விழுந்தேன் என்பது செய்தி.
வீழ்ந்தாலும் எழுந்தேன் என்பதுதான்
அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும்.
தன்னம்பிக்கை கொண்டவன் தோல்வி வந்ததும் என்னால் முடியாது என்று முடங்கிவிட மாட்டான்.
மாறாக, என்னால் முடியும்.
இதையே நான் வேறு வழியில் முயற்சி செய்கிறேன் என்று தொடர்ந்து முன்னேற முயன்று கொண்டே இருப்பான்.
"நமது பெருமை நாம் விழும் ஒவ்வொரு முறையும் எழுவதில் உள்ளது "என்பார் கன்பூசியஸ்
தோல்வியிலிருந்து அனுபவத்தை எடுத்துக்கொள்.
தவறிலிருந்து பாடத்தை எடுத்துக்கொள்.
விமர்சனத்திலிருந்து திருத்தத்தை எடுத்துக்கொள்.
துன்பத்திலிருந்து வலிமையை எடுத்துக்கொள்.
தடைகளிலிருந்து புதிய வழியை எடுத்துக்கொள்.
அப்போது எந்தத் தோல்வியும் வீணாகாது.
ஒருவரிடம் திறமை இருக்கலாம்; அறிவு இருக்கலாம்; வாய்ப்பும் இருக்கலாம். ஆனால் தன்னம்பிக்கை இல்லையென்றால் அவை அனைத்தும் பயனற்றுப் போகலாம்.
"உங்களால் முடியும் என்று நம்புங்கள், அந்த நம்பிக்கையே உங்களைப் பாதி தூரம் கொண்டு சென்றுவிடும்." என்பார் தியோடர் ரூஸ்வெல்ட்.
தன்னம்பிக்கை என்பது வெற்றிக்கான உத்தரவாதம் அல்ல; ஆனால் வெற்றியை நோக்கி மீண்டும் மீண்டும் முயற்சி செய்யச் செய்யும் உந்து சக்தி.தடைகள் வந்தால் பாதையை மாற்ற வேண்டுமே தவிர இலக்கை அல்ல.வாழ்க்கையில் சில கதவுகள் மூடப்படலாம். சில வாய்ப்புகள் நம்மை விட்டு விலகலாம். சிலர் நம்மை நிராகரிக்கலாம். ஆனால் அதனால் நம் கனவுகள் முடிந்துவிட்டதாக அர்த்தமில்லை.கதவு மூடப்பட்டால் சாளரத்தைத் தேடுவோம்.சாளரமும் மூடப்பட்டால் புதிய பாதையை உருவாக்குவோம்.
வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் இடையிலான மிகப்பெரிய வேறுபாடு, தோல்வியை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது.
"இதை எப்படி முடிக்கலாம் "?என்று உங்களையே கேட்டுப் பாருங்கள் . வழி பிறக்கும்.
இந்த ஒரு கேள்விதான் உங்கள் வாழ்க்கையின் திசையையே மாற்றும்.
விழுந்தால் அழக்கூடாது.உங்கள் அழுகை உங்கள் எதிரிக்குக் கொண்டாட்டமாக மாறிவிடும்.
எதற்காக விழுந்தேன் என்ற காரணத்தைத் தேடுங்கள்.
மறுபடியும் அதே காரணத்தால் விழாதபடி கவனமான அடி எடுத்து வையுங்கள்.
அனுபவத்தையும் தன்னம்பிக்கையையும் கையில் எடுத்துக்கொண்டு கம்பீரமாக எழுப்பி நில்லுங்கள்.
“தோல்வி என்பது விழுவதல்ல. விழுந்தபின் எழ மறுப்பதே உண்மையான தோல்வி.”
விழுந்தாலும் எழுவோம்.
தோற்றாலும் கற்போம்.
தன்னம்பிக்கையோடு சாதிப்போம்!
ஒவ்வொரு வீழ்ச்சியையும் ஒரு புதிய வெற்றிக்கான படிக்கட்டாக மாற்றுவோம்.
"விழுந்தாலும் வெறுங்கையோடு எழும்பாதே!"
இதுவே வெற்றிக்கான தாரக மந்திரம்.
.
கருத்துகள்
கருத்துரையிடுக