உங்கள் மதிப்பை அறிந்து கொள்ளுங்கள்
உங்கள் மதிப்பை அறிந்து கொள்ளுங்கள்
“தங்கத்தின் மதிப்பை அறிந்தவர்களிடம் மட்டுமே தங்கத்தை விற்க வேண்டும்.”
என்பது ஒரு பழமொழி. மேலோட்டமாக பார்க்கும்போது இந்தப் பழமொழி வணிகத்தைப் பற்றியது போலத் தோன்றலாம். ஆனால் இதன் ஆழமான பொருள் சுயமதிப்பு, அறிவு, உறவுகள் மற்றும் உண்மையான மதிப்பை உணரும் திறன் ஆகியவற்றில் அடங்கியுள்ளது.
தங்கத்தின் மதிப்பை அறியாத ஒருவருக்கு, அது ஒரு சாதாரண உலோகமாகத் தோன்றலாம். அதுபோலவே, நமது திறமைகள், அன்பு, அறிவு மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றை அறியாத ஒருவருக்கு நம் மதிப்பு பெரிதாகத் தெரியப்போவதில்லை.
1 அங்கீகாரம் வேண்டும்:
வாழ்க்கையில் பலர் செய்யும் மிகப்பெரிய தவறு, தங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதுதான்.
நாம் எவ்வளவு நன்றாகச் செயல்பட்டாலும் நம்முடைய உழைப்பின் அருமை சிலருக்குப் புரியாது. எவ்வளவு அன்பாக நடந்துகொண்டாலும் சிலருக்கு நம்முடைய அன்பின் ஆழம் தெரியாது. எவ்வளவு உதவிகள் செய்தாலும், சிலர் அவற்றை நன்றியுடன் நினைவுகூர மாட்டார்கள்.
நம்முடைய மதிப்பை உணராதவர்களிடமிருந்து நாம் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது மதியீனம். மாறாக நம்முடைய சிறப்பை உணர்ந்து மதிப்பவர்களுடன் பயணிப்பதே அறிவுடைமை!
2. உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்
ஒருவர் உங்களைப் பாராட்டவில்லை என்பதால் உங்கள் உழைப்பு வீணாகிவிடாது. ஒருவர் உங்கள் திறமையை உணரவில்லை என்பதால் உங்கள் திறமை மறைந்துவிடாது. ஒருவர் உங்கள் அன்பைப் புரிந்துகொள்ளவில்லை என்பதால் உங்கள் அன்பு மதிப்பற்றதாகிவிடாது.
சூரியன் ஒளிர்வதற்கு அனைவருடைய பாராட்டையும் எதிர்பார்ப்பதில்லை. மலர் மலர்வதற்கு யாருடைய அங்கீகாரத்தையும் கேட்பதில்லை..
அதுபோலவே, நாமும் நம்முடைய நற்பண்புகளையும் திறமைகளையும் யார் மீதும் ஓர் எதிர்பார்ப்பை வைத்து வளர்த்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை.
உங்களைப் பற்றி மற்றவர்கள் வைத்திருக்கும் மதிப்பீடு, உங்கள் முழுமையான அடையாளம் அல்ல.
3. சுய மரியாதை வேண்டும்
சுயமரியாதை என்பது ஆணவம் அல்ல.உங்கள் மதிப்பை அடுத்தவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்று நினைப்பது மற்றவர்களை விட உங்களை உயர்ந்தவராகக் கருத வேண்டும் என்று நினைப்பதாக கருத முடியாது. சுயமதிப்பு என்பது
உங்கள்மீது நீங்கள் செய்து கொள்ளும் மதிப்பீடு. அடுத்தவர்கள் மதிப்பீடு செய்ய வேண்டும் என்பதற்காக உங்களை நீங்களே குறைவாக மதிப்பீடு செய்து கொள்ள வேண்டாம்.
உங்கள் பலங்களைப் பாராட்டட்டும் .அதே வேளையில் நமது பலவீனங்களைக் கூறும்போது ஏற்றுக்கொள்ளலாம் அதற்காக எந்த இடத்திலும் நமது சுயமரியாதையை இழந்து விடக்கூடாது.
4. ஆரோக்கியமான உறவு:
தங்கத்தின் மதிப்பை அறிந்தவரிடம் அதை வழங்க வேண்டும் என்ற பழமொழி, மனித உறவுகளுக்கும் மிக அழகாகப் பொருந்துகிறது.
நாம் ஒருவருக்கு வழங்கக்கூடிய மிகப்பெரிய செல்வங்கள் பணம் மட்டுமல்ல; நேரம், அன்பு, நம்பிக்கை, அக்கறை, ஆதரவு ஆகியவையும் விலைமதிப்பற்ற செல்வங்களாகும்.
நம்முடைய மகிழ்ச்சியில் மகிழ்ந்து, நம்முடைய துயரத்தில் ஆறுதல் கூறி, நம்முடைய வளர்ச்சியில் மனதார மகிழும் மனிதர்கள் வாழ்க்கையில் கிடைத்த அரிய பொக்கிஷங்கள்.
அதே நேரத்தில், உறவு என்ற பெயரில் ஒருவருடைய அன்பையும் நேரத்தையும் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டு, அவர்களின் உணர்வுகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது ஆரோக்கியமான உறவாக இருக்க முடியாது.
5. அடையாளம் காணுங்கள்:
உங்களுடைய உண்மையான மதிப்பை உணர்பவர்களை அடையாளம் காணுங்கள்.
உங்களுடைய வெற்றியைக் கண்டு மகிழ்பவர் யார்? உங்களுடைய வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பவர் யார்? உங்களுடைய கருத்துகளை மதித்துக் கேட்பவர் யார்? தவறு செய்யும்போது உங்களை அவமானப்படுத்தாமல் திருத்த முயற்சி செய்பவர் யார்?
இத்தகைய மனிதர்கள் நம்முடைய வாழ்க்கையில் மிகுந்த மதிப்புக்குரியவர்கள்.
உண்மையான அக்கறை என்பது எல்லாவற்றிற்கும் தலையாட்டுவது அல்ல. தேவைப்படும் நேரத்தில் நேர்மையாக எடுத்துரைப்பதும், நம்முடைய முன்னேற்றத்திற்கு உதவுவதும் அக்கறையின் வெளிப்பாடுகளே ஆகும் .
அப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களோடு பயணிப்பது நம்மீதுள்ள மதிப்பை உயர்த்தும்.
முடிவுரை:
தங்கத்தின் மதிப்பை ஒருவர் உணரத் தவறுவதால், தங்கம் தனது மதிப்பை இழந்து போகப் போவதில்லை . யாருக்கும் நிலவின் மதிப்பு தெரியவில்லை என்பதற்காக அது தன் தண்ணொளியை இழக்கப் போவதில்லை.அதுபோல மதிப்பு புரிந்துகொள்ளப்படவில்லை என்பதால் உங்கள் மதிப்பு ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை.
உங்கள் மதிப்பு உங்களுக்குத் தெரியட்டும் உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் இடங்களில் மட்டுமே உங்கள் விலைமதிப்பற்ற தாலந்துகளை வெளிப்படுத்துங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக