அம்மாவின் நினைவில் ....

அம்மாவின் நினைவில்....




அரிச்சுவடு கற்றிட
ஆசிரியர் முகம் பார்த்ததில்லை

ஆலோசனை கேட்டிட
ஆலோசகர் வைத்ததில்லை

நெல்லைத் தமிழ் பேசிட
நெடுங்கணக்கு கற்றதில்லை

நிதி மேலாண்மை செய்திட
நெட்டுரு எதுவும் செய்ததில்லை

ஈசானம் கருத்திருந்தால்
இடிமழை பொழியுமென்று
வானிலை முன்னறிவிப்பு செய்ய
வானவியல் படித்ததில்லை

மண் பார்த்துபருவம் செய்ய
வேளாண் படிப்புனக்குத் 
தேவையாக இருந்ததில்லை

நீர் மேலாண்மை படிக்காமல்
நீர் மேலாண்மை செய்தவளே!

முதலெழுத்துப் படிக்காமல்
முதன்மை அறிவு தந்தவளே!

சட்டம் படிக்காமல் வீட்டில்
சட்டாம் பிள்ளை ஆனவளே!

காவல் தெய்வமாய் எம்மைக்
கண்ணுக்குள் வைத்துக் காத்தவளே!

அரிக்கன் விளக்கேந்திய
ஆவரைகுளத்து நைட்டிங்கேலே!

நீ இருக்கும் வரை 
உன் அருமை தெரியவில்லை...

அந்திவரை வேலை செய்து
அசந்து நீ வரும்போது
ஆறுதலாய் இருந்ததில்லை

ஒத்தை மனுஷியாய் நீ
ஓடியாடி உழைத்தபோது
உன் வருத்தம் புரியவில்லை

நீ தொட்ட உயரத்தை
எட்டிப் பிடிக்க
என்னால்  முடியவில்லை

அண்ணாந்து பார்த்தாலும்
உன் உயர்வு என்
கண்ணுக்கு எட்டவில்லை.

அம்மா...நீ எனக்கு வாய்த்தது
 பெரும்பேறு
 உன்னால் கிடைத்ததுதான் இந்த
 நற்பேறு
உன் நினைவு மட்டுமே எனக்கு
இப்போது!

அம்மாவின் நினைவில் நான்!!!
 



 

Comments

  1. அனைத்தும் உண்மை

    ReplyDelete
  2. அன்னைக்கு ஈடில்லை இவ்வுலகில்.....

    ReplyDelete
  3. சுயநலமே இல்லாத கடவுளின் படைப்பு அவள் தான் அம்மா. அருமையான பதிவு.

    ReplyDelete
  4. அன்னை இருக்கும் வரை அவள்
    அருமை புரி வதில்லை

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக.
      சும்மா இரு. சும்மா
      இரு என்று வாயைத்
      திறக்கவிட
      மாட்டோம்.
      போன பின்னர்
      அந்த அன்புக்காக
      ஏங்குவோம்.

      Delete

Post a Comment

Popular Posts