உள்ளார் கொல்லோ தோழி

உள்ளார் கொல்லோ தோழி


"தோழி..."

"சொல்லுங்கள்"

"கள்வர் பாலை நிலத்தில்

நிறைய இருப்பரோ?

"பாலைநிலம் என்றால் கள்வர் பயம்

இல்லாமலா இருக்கும்?"


"கள்வர் கையில் ஏதும் ஆயுதங்கள்

வைத்துத் தாக்குவரோ?"

"கள்வர்  கையில்

ஆயுதமில்லாமலா....?

சாணை ஏற்றிய அம்பை கையில்

வைத்திருப்பராம்."


"சாணை என்றால்..."


"கூர்த் தீட்டுதல் என்று பொருள்."


"பார்த்திருக்கிறேன் ....பார்த்திருக்கிறேன்.

அம்பை அப்படி இப்படிப்

புரட்டி கூர்த்தீட்டுவதைப் பார்த்திருக்கிறேன்."


"செந்தழல் பிழம்பாய் இருக்கும்.

பார்ப்பதற்குச் செங்கால் பல்லி மாதிரி

இருக்கும்."


"ஒரு முறை நான் நிஜமாகவே பல்லியோ

என்று பயந்தே போய்விட்டேன்."


"பார்ப்பதற்கு மட்டும் பல்லிபோல்

இருக்காது...."


"வேறென்ன  மாதிரி இருக்கும் ?"


"கள்வர் கையில் வைத்திருக்கும் 

ஆயுதத்தைக் கூர்த்தீட்டும் ஒலியும்

பல்லி ஒலி எழுப்புவது போலவே

இருக்கும்."


"பல்லி கெவுளி அடிக்கிற மாதிரி

இருக்கும் என்று சொல்கிறாயா?"


"அது ஒரு மாதிரியான ஒலி."


"ஒரு மாதிரி ஒலி என்றால்....?"


"கள்ளிக்காட்டுக்குள் திரியும்  ஆண் பல்லி

பெண் பல்லியைப் பார்த்ததும்

ஒருவிதமான ஒலி எழுப்பி அழைக்கும்.

அந்த மாதிரியான ஒலி.. "


"இந்தக் கள்ளிக் காட்டு வழியாகத்தான்

என் தலைவன் சென்றாரா?

இவற்றை எல்லாம் என் தலைவன்

பார்ப்பாரா?"


"பார்த்தும் பார்க்காமல் செல்வதற்கு

அவரென்ன முனியா?"


"பல்லியைப் பார்த்த பின்னரும் 

என்னை நினையாரோ தோழி?"


தலைவன் பொருள் தேடும் பொருட்டுத்

தலைவியைப் பிரிந்து சென்றுவிட்டான்.

தலைவி தன் தலைவன் எப்போது

வருவானோ என்று எதிர்பார்த்துக்

காத்துக் கிடக்கிறாள்.

தோழியிடம் அவர் என்னை

நினைப்பாரோ, நினைக்க மாட்டாரோ?

என்று சொல்லிப் புலம்புகிறாள்.


இதோ பாடல்:



உள்ளார் கொல்லோ தோழி !கள்வர்தம்

பொன்புழை பகழி செப்பங் கொண்மார்

உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்

செங்காற் பல்லிதன் துணை பயிரும்

அங்காற் கள்ளியங் காடிறந் தோரே"


                   - குறுந்தொகை


இடமோ பாலைநிலம்.

அங்கு ஆறலைக் கள்வர்

சுற்றித் திரிவர்.

கையில் ஆயுதம் இருக்கும்.

அதனைக் கூர்த்திட்டும்

ஒலி காடெங்கும் கேட்கும்.

கூர்த்தீட்டிய ஆயுதம்

பார்ப்பதற்குச் செங்கால் பல்லிபோல்

இருக்கும். அந்தச் செங்கால்

பல்லி கள்ளிக்காட்டிடை

பெண் ஒன்றைத் கண்டதும்

காதல் குரல் எழுப்பி

தன் இருப்பை அறிவிக்கும்.

இப்படியொரு காதல் காட்சியைப்

பார்த்த பின்னரும்

என் தலைவன் என்னை 

நினையாரோ தோழி?


அருமையான காதல் பாட்டு

இல்லையா?

பிரிவு தலைவியை எப்படியெல்லாம்

புலம்ப வைக்கிறது  என்பதைப்

பாலை பாடிய பெருங்கடுங்கோ

என்ற புலவர் நம் கண்முன் 

எவ்வளவு அருமையாக காட்சிப்

படுத்தியிருக்கிறார் பாருங்கள்!



பிரிவுத் துயரம் பெருந்துயரம்.

அதற்கிடையேயும் பெருங்கடுங்கோ 

நம் கண்முன்

காட்சிப்படுத்திய பல்லியின் காதல்

சொல்லிய பாங்கு கேட்கும்

காதலருக்குத் தன் காதலியின் 

நினைவு இனியும் வாராதோ?



"நினையாரோ தோழி? 

தினையேனும் நினையாரோ தோழி? "

என்ற பாரதிதாசனின் பாடலும்  என்

காதுகளில் ஒலிக்கத்தான் செய்கிறது.





                   



Comments