ஒய் திஸ் கொலைவெறி

why this கொலை வெறி


காற்றே உனக்கு ஏனிந்த கோபம்? 

நேற்றுவரை முற்றம் வந்து

முத்தம் தந்து 

  சத்தம் செய்யாது

  காதோடு உரசிச் சென்று

  கவிதையாக நின்றாய்

  கனவினில் காதல் செய்தாய்

  கற்பனையில் மிதக்க வைத்தாய்

  ஒரே நாளில் மொத்தமாய் மறந்தாய்


                     Why this கொலை வெறி?

  

    

           

  சட்டென்று மாறினாய்

  வெட்டென மறந்தாய்                

  ஒட்டில்லை உறவில்லை என்று

  எட்டிச் சென்று எம்மைத்

   தட்டுத்  தடுமாறி 

   விழ வைத்தாய்  

   மரங்களைச் சாய்த்து

   மகிழ்வு என்ன கண்டு விட்டாய்


                              Why this  கொலை வெறி?

  

   நீரின்றி நானில்லை

   நின் நினைவின்றி உலகில்லை

   உண்மை தெரிந்திருந்தும்

   வன்மம் கொண்டு

   வன்கொடுமை செய்து விட்டாய்

   வஞ்சனை கொண்டு

   பிஞ்சுதனை அள்ளிச் சென்றாய்

   துஞ்சாமல் துடிக்க வைத்தாய்


                        Why this கொலை வெறி  ?


    குற்றம் ஏது கண்டாய்?

    சுற்றம் சுற்றமாய்ச்

    சுருட்டிச் சென்றாய்

     முற்றம் எங்கும்

     குற்றுயிரும் குலையுயிருமாய்ச்

     சிதற வைத்தாய்

     கற்றையாய் அள்ளிச் சென்று

     ஒற்றை மரமாய் 

     எம்மை நிற்க வைத்தாய்


             Why  this கொலை வெறி?

                                    

     

 பூமித் தாயை இம்சித்தாய்

 பாவி எம்மைத் தண்டித்தாய்

 தாவி ஓடும் விலங்கினையும் 

 கூவி மகிழும் புள்ளினையும்   

 கூப்பாடு போட வைத்தாய்

 கொத்துக் கொத்தாய் அள்ளி

 கொலையாட்டம் போட்டு விட்டாய்

 இதில் என்ன மகிழ்ச்சி கண்டாய்?


                             Why this  கொலை வெறி?


நின்னை அழகு பார்க்கும்

கண்ணைக் குத்தி விட்டாய்

கடலோடு உடன்படிக்கை 

செய்து கொண்டு

கையோடு கூட்டி வந்தாய்

காலனிடம் கையூட்டு 

வாங்கி வந்து

காரியத்தைக் கச்சிதமாய் 

முடித்து வைத்தாய்


                   Why this  கொலை வெறி?


  மதி மயங்கிய வேளையில்      

  கதி  கலங்க செய்து விட்டாய்

  அசந்த வேளையில் 

  கசந்த அனுபவத்தைத் தந்து விட்டாய்

  கூட்டாளியோடு வந்து

  சாப்பாட்டைத் தட்டி விட்டாய்

 பாவத்திற்கு சம்பளம் மரணம் என்றால்

 பாவி உனக்கு நேராதோ

 பிஞ்சுகளின் சாபம் 

உன்னை வந்து சேராதோ!

                                           

        Why this கொலை வெறி?




      

 

                      

Comments