ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும்
ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும்
அனைவர்க்கும் பொருள் ஈட்ட வேண்டும் என்று ஆசை.
அதனை முழுவதுமாக சேமித்து வைக்க முடிகிறதா?
ஏதோ ஒரு வழியில் செலவழிந்து விடுகிறது.
எங்கிருந்துதான் அதற்கென்றே ஒரு செலவு
வருகிறதோ என்ற புலம்பல் நம் காதுகளில் விழாமலில்லை.
என் கைதான் ஓட்டைக் கையா
என்று வருத்தம் இருந்திருக்கும்.
அதையும் மீறி சிலரிடம் மட்டும் பொருள் குவியும்.
அவர்கள் சிக்கனமாக இருப்பதினாலா?
இல்லையே அவர்களும் எல்லாச் செலவும்
செய்யத்தானே செய்கிறார்கள்.
காரணம் என்ன ? ஒன்றுமே புரியவில்லை.
மதியில்லாமல் இருந்தேனா?
யாரிடம் போய் கேட்டுத் தெரிந்து கொள்வது?
மதியில்லாதபோதெல்லாம் மதிகேட்டு
வழி கேட்டு ஔவையிடம்தான் போய் நின்றிருக்கிறேன்.
இன்றைய என் குழப்பத்திற்கும் ஔவையிடம் வழியில்லாமலா இருக்கும்.
போய் வாசலில் நின்றேன்.
செவிவழி வந்து விழுந்தது ஒரு பாடல்.
இதுவன்றோ என் கேள்விக்கான பதில்
என்றபடி திரும்பினேன் .
என்ன திரும்பிவிட்டாய் என்று திரும்ப வைத்தது ஒரு குரல்.
கண்முன்னால் வந்து நின்றது யார் என்ற ஐயம் தெளியும் முன்னர் மறுபடியும்
அதே பாடல் என் காதுகளில் வந்து விழுந்தது.
பாடல் இதோ உங்களுக்காக...
ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் – தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம்.
நல்வழி பாடல் - 8
பாடல் கேட்டு மலைத்துப் போனேன்.
சூழலுக்கு ஏற்ப
மனித மனநிலைக்கு ஏற்ப
எப்படி இப்படி இவரால் மட்டும்
காரண காரியங்களைச் சொல்லி புரிய வைக்க முடிகிறது என்று வியந்த படியே அவர் முகத்தைப் பார்த்து நின்றேன்.
ஏன் புரியவில்லையா? என்றபடி விளக்க ஆரம்பித்தார்.
"உலகத்தில் நாம் சம்பாதிக்க வேண்டியவை எண்ணிலடங்காது இருக்கின்றன.
பணம் ,பொருள் , பதவி,புகழ் என்று
ஈட்ட வேண்டியவை ஏராளம் உண்டு.
ஆனால் நமக்கென்று என்ன விதித்திருக்கிறதோ அதனை மட்டும் தான் நம்மால் ஈட்ட முடியும்.
யாரிடத்தில் எது சேர வேண்டுமோ அவரிடத்தில் தான் அதுஅது சேரும்.
ஆதலால் பொருளைச் சேர்த்து விடுவேன்.
பணத்தைச் சேர்த்துவிடுவேன் என்று பேராசைப்படுவதை விட்டுவிட்டு
அடுத்தவர்களுக்கு உதவும் நல்ல மனிதர் என்ற பெயரைச் சம்பாதியுங்கள்..
அதுதான் நிலைத்திருக்கும்.
செல்வம் நிலையில்லாதது. அது செல்வோம் என்று ஒருநாள் நம்மை விட்டுச் சென்றுவிடும் "என்று புன்னகைத்தபடி கடந்து போனார் ஔவை.
"தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்,
ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்
ஊழ்கூட்டும் படியன்றிக் கூடாவாம்"
என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் இல்லையா ?
Comments
Post a Comment