கிட்டாதாயின் வெட்டென மற

கிட்டாதாயின் வெட்டென மற 


கொன்றை வேந்தன் என்றதும்,

"ன்னையும் பிதாவும்
 முன்னறி தெய்வம்"

"ஆலயம் தொழுவது சாலவும் நன்று "

"இல்லற மல்லது நல்லறமன்று   " 

"ஈயார் தேட்டைத் தீயார்கொள்வர்   "

"உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு "

"ஊருடன் பகைக்கின் 
வேருடன்கெடும்    "

"எண்ணு மெழுத்தும் 
கண்ணெனத்தகும்"

போன்ற வரிகள்  வரிசைகட்டி வந்து நிற்கும்.

அதில்,

"கிட்டாதாயின் வெட்டென மற "என்ற ஒரு வரியையும் ஔவை சொல்லியிருப்பார்.

மனப்பாடமாகப் படித்த வரி

இன்றுவரை நம் நினைவில்

நிலைத்திருக்கும் அருமையான வரி.

அனைவரும் படித்திருக்கிறோம்.

பொருளும்  தெரிந்து வைத்திருக்கிறோம்.

ஆனால் அது இளமையிலேயே 

எதற்காகச் சொல்லித் தரப்பட்டது ?

என்று என்றைக்காவது சிந்தித்துப்

பார்த்திருக்கிறோமா?


"இளமையில் கல்வி பசுமரத்தாணி "


இளமையில் விழுமியங்கள் வாழ்வியல் நீதிக் கருத்துக்கள்

விதைப்பட்டால் அது காலத்துக்கும்

நம் நினைவில் இருக்கும்.

அதன்படி நடக்க வேண்டும் என்ற

எண்ணத்தைக் கொடுக்கும்.

ஆனால் நாம் பல நேரங்களில்

எந்த நோக்கத்திற்காக விழுமியங்கள்

சொல்லித் தரப்பட்டன என்பதையே

 மறந்து விடுகிறோம்.

இந்த மறதிதான் மறக்க வேண்டியவற்றை மறக்க

முடியாமல் புலம்ப வைத்துவிடுகிறது.

விபரீத முடிவுகள் எடுக்க வைக்கிறது.

 பல சிக்கல்களுக்குள் தள்ளி நம்மைச்

 சின்னாபின்னமாக்கிச் சீரழிய வைக்கிறது.

எதையாவது ஒன்றை நினைத்துவிட்டால்

அது கிடைக்க வேண்டும் என்று வெறியாக

அலைகிறோம்.

அது கிடைக்கவில்லை என்றால்

வாழ்வே இல்லை என்று ஒரு விரக்தி

நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம்.


இவை எல்லாவற்றிற்கும் காரணம் என்ன?


ஒரு செயலில் இறங்கும் முன்னர்

ஒன்றுக்குப் பத்துமுறை அதைப்பற்றி

பல கோணங்களில் அலசி ஆராய வேண்டும்.

இது நமக்கு ஒத்து வருமா? வராதா?

கைகூடுமா?

கைகூடாதா? இப்படி ஆராய்ந்து பார்த்து

செயலில் இறங்கினால் 

எந்தச் சிக்கலும் எழ வாய்ப்பிருக்காது.


மாறாக, உணர்ச்சி வசப்பட்டு எடுக்கப்படும்

முடிவுகள் பெரும்பாலான நேரங்களில் 

தவறாகவே முடிவதுண்டு.

அப்படித் தவறாக ஏதும் நடந்துவிட்டால்

அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலையும் 

இருக்காது.

இனி எனக்கு என்ன இருக்கிறது?

எல்லாமே போயே போச்சு என்று

ஒரு விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோம்.


அதனால் மனநிலை பாதிக்கப்பட்டு யாரைப்

பார்த்தாலும் ஓர் எரிச்சல்...கோபம்.

கொன்றே போட வேண்டும் என்ற வெறி.

விளைவு தப்புப் தப்பாக யோசிக்க வைக்கும்.

தவறுதலாக முடிவெடுக்க வைக்கும்.

பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்க விடாது.

ஏடாகூடாவாக ஏதாவது செய்துவிட்டு

காலத்திற்கும் கண்ணீர் வடிக்க

வைத்துவிடும்


 ஒற்றை ஆள் எடுக்கும்

விபரீத முடிவு மொத்த குடும்பத்தையும்

பிய்த்துப் போட்டுவிடும்.

வீதியில் கொண்டு வந்து நிறுத்திவிடும். 


இவை எல்லாம் நடந்து முடிந்த பின்னர் 

வருந்தி என்ன பயன்?

நடந்தது நடந்துவிட்டது.

இனி யாரிடம் சொல்லி முந்தைய நிலையைத்

திருப்பிக் கொண்டுவர முடியும்?


எனக்குத் கிடைக்காதது யாருக்கும்

கிடைக்கக் கூடாது என்று நினைக்கும்

மனநிலையை மாற்றாதவரை யாருக்கும்

நிம்மதி கிடைக்கப் போவதில்லை.

நீங்களும் நிம்மதியாக இருக்கப் போவதில்லை.


நிம்மதிதான் வாழ்க்கை.

அந்த நிம்மதியைத் தொலைத்துவிட்டு

என்ன சாதித்துவிடப் போகிறோம்.?


நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும்

நிம்மதியாக வாழவிடுவதுதான்

உண்மையான அன்பு கொண்டவர்களின்

பண்பாக இருக்கும். இருக்க வேண்டும்.


எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து விட்டோம்.

என்று புலம்புகிறீர்களா?

கொஞ்சநாள் அந்த இடத்தை விட்டே

விலகியிருங்கள்.

நினைவுகள் வரவிடாதபடி

இன்னொரு வேலையில் உங்களை 

முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு

ஒதுங்கியிருங்கள்.

நடந்தவை யாவும் 

கெட்டக் கனவென நம் நினைவுகளிலிருந்து

மறைந்து போகும்.


சிறிது காலம் அந்த நினைவு நம்மை

கஷ்டப்படுத்தத்தான் செய்யும்.

காலவோட்டத்தில் எல்லாம் காணாமல்

போய்விடும்.


இதைத்தான்,

"கிட்டாதாயின் வெட்டென மற"

சாதாரணமாகச் சொல்லிவிட்டு 

கடந்து போய்விட்டார் ஔவை.


அருமையான மொழி

ஆறுதல் தரும் மொழி -நம்மை 

ஆற்றுப்படுத்தும் மொழி

அதுதான் ஔவை வழி




Comments