கோலம்செய் வேட்டி

கோலம்செய் வேட்டி

காலைப்பொழுது

 கவின்மிகு அழகு

கதிரவன் கண்டு

கண்களைத் திறந்து

கள்ளச்சிரிப்பு 

 மெல்ல அரும்ப

மேனி புடைத்து

வெண்முத்தம் சிதற

கிடந்த என்னை

அள்ளி அணைத்து

ஆரத்தழுவி ஆலையிலேற்றி

ஆடையாக்கி ஆளுக்கொரு 

பெயர் சூட்டி அணி அணியாய்

அனுப்பி வைத்தனர்!


வெண்வேந்தன் எனக்கு

வேட்டி என்னும் நற்பெயறேற்றி

வேற்று வரிசையில்

அமர்த்தி  வைத்தனர்

யார் யாரோ வந்தார்

ஏதேதோ சொல்லி

என்னை நிராகரித்தார்

உழவன் ஒருவர் வந்தார்

உவகையோடு கையிலெடுத்து

தனதாக்கிக் கொண்டார்


உழவன் மேனிக்கு அணியமாகும்

பெரும்பேறு தந்து விட்டார்

மனமகிழ் கொண்டேன்

மகிழ்ந்தேன் வியந்தேன் 

உன்மத்தம் கொண்டேன்

அதிகம் ஆடாதே 

உதவாக்கரை என்று 

உள்ளம் கிண்டலடித்தது

ஓரிரு மாதத்தில் 

கந்தல் என்ற பெயரில் 

கடைக்கோடியில் வீசிவிட்டார்!


கசக்கிக் கிடந்தேன்

கலங்கி குலுங்கி

கண்ணீர் விட்டழுதேன்

காலம் செய்த கோலமிது

வேறெதுவும் தெரியவில்லை

இதுதான் என்வாழ்வா?

புலம்பெயர் காலம் வாராதோ

புவி எனக்கொரு

மீட்சி தாராதோ என

புலம்பிக் கிடந்தேன்!


கன்னியவள் என்னைத் தொட்டாள்

கலைமிகு கோலம் தந்தாள்

இட்லிக்கு ஆடையாக்கி

இதம் தந்தாள்

இப்பிறப்பின் பயன் 

ஈதென்று அறிய வைத்தாள் 

காலம் மாறினாலும்

காரிகைக்குக் கைகொடுக்கும்

கருமம் வாய்த்தென 

ஆறுதல் கொள்ள வைத்தாள்!


கழிந்த என் வாழ்க்கையில்

களிப்பொன்றும் காணாமல்

கடந்து போனேன்

பிறவிப் பயன் ஏற்காமல்

பிய்ந்து போனேன்

நைந்து போனேன்!


நாளும் பொழுதும்

கழிந்து போக

ஆறேழு கண்களோடு

ஆரவாரமின்றி 

அடங்கிக் கிடந்தேன்

கட்டிக்கோ ஒட்டிக்கோ என்ற

குரல் கேட்டு

மெல்லத் திரும்பினேன்

சிறுவனின் மேனியில்

சீர்மிகு கோலத்தில் நான்

சிலிர்த்துப் போனேன் முகம்

சிவந்து போனேன்.


திரும்பிய பக்கமெங்கும்

என் கோலம்

திருவிழாவில் கிடைத்ததிந்த

மணக்கோலம்

பந்தியில் முதலாளானேன்.

முதல்வன் என்றனர்

முதல் மரியாதை தந்து

முன் வரிசையில் 

இடம் பிடித்தேன்!


காலம் மாறும் காட்சிகள் மாறும்

காத்திரு தோழா....

காலம் உன் கையில் 

அனைவருக்கும் உண்டு மீட்சி

அதற்கு வேட்டியான

நானே நற்சாட்சி !








Comments