நறுந்தொகை கூறும் அழகு

நறுந்தொகை கூறும் அழகு

அழகு என்பது ஒரு புலனுணர்வு அனுபவம்.

அழகு எது என்பதைத் தீர்மானிப்பதில்

ஆளுக்கு ஆள் வேறுபாடு இருக்கும்.

தோற்றம் மட்டும் அழகாகிவிடாது.

ஒவ்வொருவரின் செயல்களும் அதை அவர் செயல்படுத்தும் முறையும் அழகாகாகத் தீர்மானிக்கப்படும்.


 எப்படி எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி இல்லையோ  ஒரே தொழிலைச் செய்யவில்லையோ அதற்கேற்றாற்போல அழகும் அவரவர்க்கேற்ப மாறுபடும்.


அவரவர்க்கான  வழியில் அவரவர் 

பொறுப்புடனும் கடமை உணர்வுடனும் 

பயணித்தால் ஒவ்வொருவருமே அழகுதான்.


இதோ

யார் யாருக்கு 

எவை எவை அழகு என்று

அருமையாக சொல்லிச் சென்றிருக்கிறார் அதிவீரராம பாண்டியர்.

வாருங்கள் .


பாடல் வரிகள் உங்களுக்காக 


1.கல்விக்கு அழகு கசடற மொழிதல்

தவறின்றித் தெளிவாக உரைக்கும் திறன் பெற்றிருத்தல் கல்விக்கு அழகு



2.செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்

இடர்படும் காலத்து தம் உறவினர்க்குக்

கைகொடுத்து உதவுதல் செல்வர்க்கு அழகு

3.வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்

தாம் கற்ற வேதத்தை  மக்களின் நன்மைக்காக ஓதுவதோடு ஒழுக்கத்தையும் கடைபிடித்து வாழ்தல் வேதியர்க்கு அழகு. 


4.மன்னர்க்கு அழகு செங்கோல் முறைமை


நீதி தவறாது செங்கோல் முறைமையில்

ஆட்சி செய்தல் மன்னர்க்கு அழகு.  

5.வணிகர்க்கு அழகு வரும்பொருள் ஈட்டல்


வணிகம்மூலம் மென்மேலும்  பொருள் ஈட்டி வளர்ச்சியடைதல் வணிகர்க்கு அழகு. 


6.உழவர்க்கு அழகு உழுதூண் விரும்பல்

உழவுத் தொழில் மூலம்  உணவுப் பொருட்களை விளைவித்து  உண்டு மகிழ்தல் உழவர்க்கு அழகு.

7.மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்


வருங்காரியத்தை முன்னறிந்து அரசருக்கு உரைத்தல் மந்திரிக்கு அழகு .

8.தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை


அஞ்சாமையும் வீரமும்

படைத்தலைவனுக்கு அழகு


9.உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்


விருந்தினரோடு சேர்ந்து உணவு

உண்ணுதல் உணவுக்கு அழகு.


10.பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாது இருத்தல்

கணவனிடம் ஏட்டிக்குப் போட்டியாக எதிர்த்துப் பேசாதிருத்தல்‌ பெண்களுக்கு அழகு.

11.குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல்


தன் கணவனைப் பேணி பாதுகாத்தல்

நல்ல குலமகளுக்கு அழகு .

12.விலைமகட்கு அழகு தன் மேனி மினுக்குதல்


தன் உடம்பினை மினுமினுப்பாக

வைத்திருத்தல் பொதுமகளுக்கு அழகு.


13. அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல்

நல்ல நூல்களைக் கற்றுணர்ந்து அடக்கமாக இருத்தல் அறிஞர்க்கு அழகு.


14. வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை

வறுமையுற்ற காலத்தும் செம்மை குன்றாதிருத்தல் வறியவர்க்கு அழகு.


கண்ணுக்கு மை அழகு

நறுந்தொகைக்கு  ஒற்றை வரியில்

உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் 

அழகோ அழகு.


Comments