ஈ என இரத்தல் இழிந்தன்று
ஈ என இரத்தல் இழிந்தன்று
புலவர்கள் மன்னர்களைப் புகழ்ந்து
பாடி பரிசில் பெற்றுச் செல்வது வழக்கம்.
எல்லாப் புலவர்களுக்கும்
பாடியதுமே பரிசில் கிடைத்து விடுமா
என்ன?
சில மன்னர்களுக்குக் கொடுக்க மனமில்லாதிருக்கலாம்.
இன்னும் சில மன்னர்கள் புலவரை உடனே வழியனுப்பிவிட மனமில்லாது
உடன் வைத்துக்கொள்ள நினைப்பர்.
அதனால் பரிசில் கொடுக்க தாமதப்படுத்துவர்.
அப்படிப்பட்ட சூழல்களில் ஒரு புலவர்
என்ன செய்ய முடியும்?
வெறுங்கையோடு சென்றுவிட முடியுமா?
மனனர்களை நம்பிதானே புலவர்கள் வாழ்க்கை இருக்கிறது.
இப்படித்தான் ஒருமுறை கழைதின் யானையார் என்ற புலவர் அரசன் வல்வில் ஓரியிடம் பரிசில் பெறச் செல்கிறார் .
பாடல் பாடுகிறார்.
பொருள கிடைக்கும் என்று கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறார்.
வள்ளலாகிய ஓரி
ஏனோ உடனே பரிசில் வழங்கிவிடவில்லை.
என்ன...ஓரி ஒரு வள்ளல் என்று அறிந்திருக்கிறேன்.
ஆனால் நான் பாடிய பாடல் பிடிக்கவில்லையா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா?
அப்படியொன்றும் மன்னன் முகம் சுழிக்கும்படியாக நான் பாடிவிடவில்லையே.
அப்படியானால் ஏனிந்தச் சுணக்கம்.?
மன்னனிடம் கேட்டுவிடவா முடியும்?
எப்படி மன்னனுக்குப் புரியவைப்பது.?
சட்டென்று ஒரு யோசனை.
பட்டென்று பாட்டொன்று
பாட
சட்டென்று திரும்பிப் பார்த்த மன்னன்
கை நிறைய பொருள் அள்ளித்தர
மகிழ்ச்சியாக கடந்து போனார் புலவர்.
அப்படி என்னப் பாடி விட்டார்.
வாருங்கள் தெரிந்துகொள்வோம்.
பாடல் உங்களுக்காக...
ஈ’ என இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்
‘ஈயேன்’ என்றல் அதனினும் இழிந்தன்று !
‘கொள்’ எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்
‘கொள்ளேன் என்றல்’ அதனினும் உயர்ந்தன்று !
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே !
ஆவும் மாவும் சென்றுண் கலங்கி
சேற்றொடு பட்ட சிறுமைத் தாயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல வாகும் !
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனால்
புலவேன் வாழியர், ஓரி ! விசும்பில்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் நீயே !
-புறநானூறு
-பாடல் எண் :204
"‘ஐயா ,ஏதாவது தருமம் செய்யுங்கள் என்று இரத்தல் இழிவான செயல்.
ஆனால் அதைவிட இழிவான செயல் இரந்து நிற்பவனுக்கு இல்லை என்று சொல்லி ஏதும் கொடுக்காமல் விரட்டியடிப்பதாகும் .
இதனைப் பெற்றுக்கொள் என்று
மனமுவந்து ஒருவனுக்கு வழங்குவது உயர்ந்த செயல்தான்.
ஆனால் அவ்வாறு ஒருவர்க்கு வழங்கும்போது அதனை வேண்டாம், என்னை மன்னித்து விடுங்கள் என்று பெருந்தன்மையாக ஏற்றுக்கொள்ளாமல் தவிர்த்துவிடுதல் கொடுப்பதற்கு இருப்பதைக் காட்டிலும்
மேலான நற்பண்பாகும்.
கடலில் பயணம் மேற்கொள்ளும்போது
நீர் வேட்கை ஏற்படுகிறது .அதற்காக
யாரும் நீர் தெளிவாகத்தானே இருக்கிறது என்று
கடல்நீரை அருந்துவதில்லை.
மாறாக ஆடுமாடுகளும் காட்டு விலங்குகளும் கலக்கிய நீராக இருந்தாலும்கூட தம் தாகம் தீர்த்துக்கொள்ள அந்தக் கலங்கிய நீரை
அருந்த யாரும் தயங்க மாட்டார்கள்.
வல்வில் ஓரியே !
மன்னா!
கார்மேகமென எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி
வழங்கும் வள்ளல் தன்மை கொண்டவன் நீ என்பது எனக்குத் தெரியும்.
உன்னிடமே புலவர்களுக்கு பரிசில் கிடைக்கவில்லை என்றால் அதை
என்னவென்று நினைப்பது. ?
தான் புறப்பட்டு வந்த நேரம் சரியில்லை என்றுதான் நாடி வந்தவர்கள் தங்களையே நொந்து கொள்வார்களே அல்லாமல் வள்ளல்களைப் பழிக்கும் குணம்
புலவர்களுக்கு ஒருபோதும் இருப்பதில்லை.
நீ நீடூழி வாழ்க ! "
என்று பாடி முடித்திருக்கிறார்.
"ஆடிய மாட்டை ஆடி கறக்க வேண்டும்.
பாடிய மாட்டைப் பாடி கறக்க வேண்டும்."
என்பது போல பாடியே தான் நினைத்ததை சாதித்து விட்டார் .
"வானம் போல வரையாது சுரக்கும்
வள்ளியோய் நீயே"
ஒற்றை வரியில் மன்னனின் உள்ளத்தைக் கற்றையாக அள்ளிவிட்டார் புலவர்
கழைதின் யானையார்.
எளிய நடை.
மனம் கவரும் அருமையான கருத்து.
திரும்பத்திரும்பப் படிக்கத் தூண்டும் வரிகள்.
"'ஈ 'என இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்
‘ஈயேன்’ என்றல் அதனினும் இழிந்தன்று !
‘கொள்’ எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்
‘கொள்ளேன் என்றல்’ அதனினும் உயர்ந்தன்று !"
மனதில் எழுதி வைக்க வேண்டிய வரிகள்.
Comments
Post a Comment